நாடளாவிய ரீதியில் பொதுமக்களினால் சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை அனர்த்ததினால் இலங்கையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்படி, கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம், கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இந்துமத வழிபாடுகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது தவிர மருதமுனை பகுதியில் Shams ’97’ சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை மையவாடி சிரமதானமும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்குமான துஆ பிரார்த்தனை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு காலை வேளை பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை, மாளிகைக்காடு

ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1,800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோரப் பிரதேசங்களிலுள்ள சுனாமி நினைவு தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீர்மல்க கதறியழுது உறவினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் , இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் சுனாமி பேரழிவு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

பாசிக்குடா கடற்கரை

மன்னார்

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவு நாள் ல் மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஓரத்திலே புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலே வளாகத்தில் இன்று(26) காலை 8 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சுனாமி நினைவேந்தல் வளாகத்தில் இன்று சுனாமி நினைவேந்தலினுடைய 19 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று இருந்தது.

மலையக மக்கள்

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 19 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

புத்தளம்

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

Share.
Leave A Reply