மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை (30) ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும்” என கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம். பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.