செய்தி வாசிப்பவர்கள் செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள். அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்) சுருக்கத்தைக் கூறுகிறேன்..
மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில், அதாவது இப்போதைய இஸ்ரேலிலும் தனி நாடாக உருவாகப் போகும் பாலஸ்தீனத்திலும் 3000 ஆண்டுகளுக்கு முன் பல யூத இனங்கள் வாழ்ந்து வந்தன. இவர்கள் ஆபிரஹாம், அவர் மகன் ஐஸக், அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.
பழைய ஏற்பாடு பைபிளில் கூறப்பட்டிருக்கும் புராணக் கதைகள் தவிர இதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ரோமானிய, கிரேக்க சமூகங்கள் பல கடவுள்களையுடைய மதங்களைப் பின்பற்றி வந்தபோது இவர்கள் ஒரே கடவுளைக் கொண்ட மதத்தைப் பின்பற்றி வந்தனர்.
என்றாவது ஒரு நாள் தங்கள் கடவுளின் தூதர் ஒருவர் வந்து தங்களை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். டேவிட், சாலமன் என்ற இரு புகழ்பெற்ற அரசர்கள் இவர்கள் வழியில் வந்தவர்கள்.
இவர்கள் அடிக்கடி பக்கத்து நாடுகளில் ஆண்டுவந்த அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். கி.மு.750-இல் அசீரியர்களாலும், கி.மு.612-இல் பாபிலோனியர்களாலும், கி.மு.538-இல் பெர்ஷியர்களாலும், கி.மு.333-இல் கிரேக்கர்களாலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.
அதற்குப் பிறகு வந்த ரோமானியர்கள் ஆட்சியில் கி.பி. 66-இல் இவர்கள் ரோமானிய அரசரை எதிர்த்ததால் ஜெருசலேமை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு உள்ளாயினர்.
இதற்கிடையில் கி.பி. 0-இல் இவர்களில் ஒருவராக இயேசு கிறிஸ்து பிறந்து அப்போதைய சமூகத்தில் – குறிப்பாக ஜெருசலேமில் உள்ள யூதக் கோயிலில் – நடந்து வந்த அநீதிகளையும் ஊழல்களையும் ஒழிக்கப் பாடுபட்டார். யூதர்களில் ஒரு சாரார் இயேசுவைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு அவருடைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆனால் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள், இயேசுவின் கொள்கைகளால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் விளையும் என்று பயந்து அவரை ஒழித்துவிடத் தீர்மானித்து ரோமானிய அரசனின் உதவியோடு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.
குற்றம் புரியும் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே அவர்களை இறக்கவிடுவதுதான் அப்போதைய பழக்கம். இப்படித்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். சமூக சீர்திருத்தவாதியான இயேசு தன் சொந்த சமூகத்தாலேயே சமூக விரோதியாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார். கிறிஸ்துவின் சீடர்களும் தண்டிக்கப்பட்டனர். அப்போதைக்கு அவர்களால் வெளிப்படையாகக் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற முடியவில்லை.
கி.பி. 66-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்கள் பலர் உயிர் இழந்தனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்; பலர் ஜெருசலேமிலிருந்து வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர். மறுபடியும் இஸ்ரேலில் இருந்த யூதர்கள் கி.பி. 132-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். இதிலும் யூதர்கள் பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு யூதர்கள் முழுவதுமாக ஜெருசலேமை விட்டு வெளியேறினர். மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் என்னும் ரோமானிய அரசன் கிறிஸ்துவனான பிறகு ஜெருசலேம் நகரம் மறு வாழ்வு பெற்று கிறிஸ்தவ நகரமாக விளங்கத் தொடங்கியது. யூதர்கள் ஜெருசலேமில் குடியேற அனுமதிக்கப்படவில்லை யென்றாலும், இடிக்கப்படாமல் மிஞ்சியிருந்த யூதர்களின் இரண்டாவது கோயிலின் வெளிச் சுவரை – இது யூதர்களின் மிகச் சிறந்த புண்ணியதலமாகக் கருதப்பட்டது – சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தார். இந்த மதத்தைப் பின்பற்றிய அரசர்கள் ரோமானியர்களை வென்று பாலஸ்தீனத்தில் ஆட்சி நடத்தத் தொடங்கினர். இந்த இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் யூதர்கள் ஜெருசலேமிற்குள் வருவதற்கு இருந்த தடை நீங்கி அவர்கள் ஜெருசலேமில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பதினோராம் நூற்றாண்டில் போப்பாக இருந்த போப் அர்பன் (Pope Urban II) கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் மத சம்பந்தப்பட்ட இடங்களை வழிபட ஏதுவாக அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களோடு சண்டை புரிந்து ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவைப் போராளிகளை அனுப்பினார்.
அவர்கள் முஸ்லீம் அரசர்களை வென்ற பிறகு சுமார் இருநூறு வருடங்கள் கிறிஸ்தவர்களின் கையில் ஜெருசலேம் இருந்தது. அப்போது யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல யூதர்கள் கொல்லப்பட்டனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர். அதன் பிறகு இரு நூற்றாண்டுகள் இப்பகுதி எகிப்தை ஆண்ட மாம்லக் அரச பரம்பரை வசம் இருந்தது.
1517-இல் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர். முதல் உலகப் போரில் ஆட்டோமான் அரசு வீழ்ச்சி அடையும் வரை பாலஸ்தீனம் அவர்கள் ஆளுகையில் இருந்தது. அப்போதும் யூதர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
யூதர்கள் குடியேறிய இடங்களில் தாங்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஆங்காங்கே இருந்த மக்களோடு சேராமல் தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் செய்துவந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலாலும் இவர்கள் மீது மற்றவர்களுக்கு நட்புரிமை ஏற்படவில்லை.
அந்தந்த நாடுகளில் இருந்த கிறிஸ்துவர்கள், தங்கள் கடவுளின் தூதரை – அதாவது இயேசுவை – வஞ்சித்துக் கொன்றவர்கள் யூதர்கள் என்று எண்ணி இவர்களின் மீது மிகுந்த வன்மம் பாராட்டினர். ஸ்பெயின் முஸ்லீம் மன்னர்களின் கீழ் இருந்தபோது யூதர்கள் எந்த விதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை.
ஆனால் சிலுவைப் போராளிகள் ஸ்பெயினில் நுழைந்ததும் யூதர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர். அவர்கள் குடியேறியிருந்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் இவர்களிடம் பகைமை பாராட்டியதால், தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அங்கு சுதந்திரமாக எந்த விதப் பிரச்சினையுமின்றி இருக்கலாம் என்ற எண்ணம் பல நாடுகளிலும் இருந்த யூதர்களிடம் உண்டானது.
தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தோடல்லாமல் அந்த நாடு ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்துவந்த, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய, பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர். இந்த எண்ணம் ஒரு இயக்கமாக மாறியது. இதற்குப் பெயர் ஸயானிஸம் (Zionism).
இந்த இயக்கம் தோன்றியதிலிருந்தே பல நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர். அது மட்டுமல்ல, தாங்கள் கொண்டுவந்த தொழில்நுட்பம், செல்வம் ஆகியவற்றின் பலத்தால் பாலஸ்தீனத்தில் பல நிலங்களை வாங்கிப்போட்டு நவீன முறையில் விவசாயம் செய்தனர்; தொழிற்சாலைகள் ஆரம்பித்தனர். பாலஸ்தீனம் வளமடையத் தொடங்கியதால் அங்கு குடியேறிய யூதர்களோடு பாலஸ்தீன அரேபியர்களும் நன்மை அடைந்தாலும், யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்தில் குடியேறியதும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும் அரேபியர்களின் கோபத்தையும் பயத்தையும் அதிகரித்தது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆட்டோமான் பேரரசு அழிந்து, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் பிரிட்டனின் மேற்பார்வையில் வந்ததும் யூதர்கள் பிரிட்டனிடம் பாலஸ்தீனத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.
இரண்டாவது உலக யுத்தத்தில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஹிட்லர் ஜெர்மனியில் இருந்த அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வழிகோலியது.
யூதர்களின் மேல் ஏன் இந்த அளவிற்கு ஹிட்லருக்குக் கோபம் இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவர் சிறு வயதினராக இருந்தபோது இவர் தாய்க்கு சிகிச்சை அளித்தவர் ஒரு யூத மருத்துவராம். சிகிச்சை பலனின்றி அவர் தாய் இறந்துவிட்டாராம். அவருடைய தாயின் இறப்பிற்கு அந்த யூத மருத்துவர் காரணம் என்று நினைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.
இன்னொரு கோட்பாட்டின்படி அப்போது ஜெர்மனியில் பாதிக்கு மேற்பட்ட வங்கிகள் யூதர்களின் கைகளில் இருந்தனவாம். ஜெர்மனியில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்ததாகச் சொல்கிறார்கள். எந்த ஆராய்ச்சியிலும் உண்மையான காரணம் எது என்று வெளிவரவில்லை. ஜெர்மனியிலும் யூதர்களுக்கு எதிராக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள்தான். அப்போதிருந்த கிறிஸ்தவ போப்பும் ஹிட்லர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கவில்லை.
யூதர்கள் வெளியிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறக் குடியேற யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிறையப் பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இந்தப் பூசல்களைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணியும், இனி பாலஸ்தீனம் தன் மேற்பார்வையில் இருப்பதால் தனக்கு நன்மை எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்த பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுத் தான் வெளியேறுவதாக ஐ.நா.விடம் தெரிவித்தது.
ஐ.நா. பல முறை தன் பிரதிநிதிகளை அனுப்பி அங்குள்ள நிலையை அறிந்துவரச் செய்தது. 1947-இல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரேபியர்களுக்கும் (இவர்களில் அரேபிய கிறிஸ்தவர்களும் உண்டு) கொடுப்பது என்று ஐ.நா. முடிவுசெய்தது.
பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் இந்தப் பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடுவது என்று முடிவுசெய்தனர். அதனால் இன்று வரை பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகாமலேயே இருக்கிறது.
ஆனால் யூதர்களோ தாங்கள் கேட்டதற்கு மேலேயே அதிக அளவுள்ள நாடு கிடைத்துவிட்டதால் உடனேயே தங்கள் நாடான இஸ்ரேலைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். இதற்கு மறு நாளே பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்ததில் அரபு நாடுகள் தோற்றுப் போயின.
மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது. இப்படி அரேபிய இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டதோடு அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றவும் செய்தது. இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருக்கும் அரேபியர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறது. பாலஸ்தீனத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அரேபியர்களை அங்கு தொடர்ந்து இருக்கவிடுவதே தன்னுடைய தாராள மனப்பான்மையினால்தான் என்பது போல் இஸ்ரேல் நடந்துகொள்ள ஆரம்பித்தது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்குத் தனி நாடு உருவாக்கிக் கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டபோது அங்கு ஏற்கனவே வசித்துவரும் அரேபியர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையைப் போட்டிருந்தது. அதையெல்லாம் இஸ்ரேல் நினைப்பதாகத் தெரியவில்லை.
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பூசல்கள் ஏற்பட்டன. 1967-இல் நடந்த யுத்தத்தில் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டது. இஸ்ரேல் அங்கும் யூதர்களைக் குடியேற்றுவதைத் தொடர்ந்தது. இப்படிக் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நிறையத் தொந்தரவுகள் கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.
இவர்கள் ஒரு முறை பெடுயின் இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இனத்தவரின் ஆடுகளுக்கு விஷம் வைத்து அவற்றைக் கொன்றனர். இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றப்பட்ட யூதர்களும் (இப்படிக் குடியேற்றப்பட்ட யூதர்களில் பலர் 1960-க்குப் பிறகு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்) அங்கேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினர்.
1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 1969-இல் யாசர் அராபத் அதன் தலைவரானார். பாலஸ்தீனம் முழுவதையும் ஒரே நாடாக உருவாக்கியே தீருவது என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள். ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர் தட்டிக் கேட்டபோது அவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேல் கூற ஆரம்பித்தது. 1992-இல் பிரதமர் பதவியேற்ற யிட்சக் ராபின் பாலஸ்தீனர்களோடு சமரசம் பேச முன்வந்தார். அதுவரை இஸ்ரேல் நாடு இருப்பதையே ஒப்புக்கொள்ளாத பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத், யிட்சக் ராபினின் சமரச ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
இவர்களுக்கிடையே 1993-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு இருப்பதை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒப்புக்கொள்வதென்றும் 1947-இல் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அது வரை இந்த இடங்கள் பாலஸ்தீன அத்தாரிட்டி என்னும் அமைப்பின் கீழ் செயல்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் என்று பெயர். 1995-இல் ராபின், இதை எதிர்த்த ஒரு யூத வெறியனால் கொலைசெய்யப்பட்ட பிறகு அதற்குப் பின் பதவிக்கு வந்த நேத்தன்யாஹூ (சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி 120 இடங்கள் உள்ள இஸ்ரேலிய பார்லிமெண்டில் 31 இடங்களைப் பிடித்தது; மற்ற சில கட்சிகளோடு சேர்ந்து இப்போது இவர் மந்திரிசபை அமைத்திருக்கிறார். இவர்தான் பிரதம மந்திரி.) ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.
இஸ்ரேல் அரசோடு சமாதானமாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று நினைத்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிலர் யாசர் அராபத்தின் ஃபாட்டா (Fatah) கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர். ஹமாஸ் (Hamas) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து பிடித்திருந்த காஸா பகுதியை இஸ்ரேல் 2005-இல் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கு ஆட்சி செய்யத் தொடங்கினர். லெபனானில் இஸ்ரேல் பிடித்திருந்த இடத்தை ஹெஸ்புல்லா (Hezbollah) என்ற கட்சி பிடித்து அங்கு ஆட்சி நடத்தத் தொடங்கியது. இவை இரண்டும் தீவிரவாதக் கட்சிகள். அடிக்கடி இக்கட்சிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் பூசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இஸ்ரேலின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேலுக்குள் சென்று யூதர்களைக் கொன்றனர். யாசர் அராபத் பாலஸ்தீன இளைஞர்களை இந்த வன்முறையிலிருந்து தடுக்கவில்லை என்று கூறி 2002-இல் அப்போது பிரதமராகயிருந்த எரியல் ஷேரன் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் பகுதிக்குள் வருவதைத் தடுக்கப் பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார்.
இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் (1947-இல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா. கொடுத்த இடத்தில் இதுவும் சேர்த்தி) இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டது. (சுவர் இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.) இந்தச் சுவர் எழுப்பியதின் மூலம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகின்றனர். பலருடைய விளைநிலங்கள் சுவருக்கு இந்தப் பக்கம் இருப்பதால் அவர்கள் சுவரைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேலின் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான் தங்கள் விளைநிலங்களுக்கோ அல்லது வேலைபார்ப்பதற்கோ வர வேண்டியதிருக்கிறது. மேலும் இப்படி வருவதற்கு இஸ்ரேல் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் காட்ட வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்திருக்கும் தங்கள் சொந்த இடத்திலேயே பாலஸ்தீன அரேபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
2004-இல் யாசர் அராபத் பாரீஸில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெற்று வரும்போது இறந்துவிட்டார். இப்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்று அவர் மனைவி சந்தேகப்பட்டதால் ராமல்லா என்ற ஊரில் (இதுதான் பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைமையகம்) இருந்த அவருடைய கல்லறையைத் தோண்டி அவர் உடலை மீட்டுப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.
இவருக்குப் பிறகு ஃபாட்டாவின் பொறுப்பை அகம்மது அப்பாஸ் என்பவர் ஏற்றார். இவரும் சமாதான விரும்பி. எப்படியாவது பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்கில் கொடுக்கப்பட்ட இடங்களில் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டு சில இடங்களை மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டி நிர்வகிக்கும்படி விட்டிருக்கிறது. (ஆஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிட்டி உருவாக்கப்பட்டு பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை நிர்வகித்து வருகிறது.) சில இடங்கள் இருவரின் கீழேயும் இருக்கின்றன. சில இடங்கள் இஸ்ரேலின் கீழ் இருக்கின்றன. வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய நூறு மில்லியன் டாலர் சுங்கவரிப் பணத்தை பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். சில நாட்களுக்கு முன்தான் அந்த வரிப் பணம் பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் நிறையப் பணம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்களுக்கு அப்படியில்லை. 1945-இல் அரபு நாடுகள் பல ஒன்று சேர்ந்து (முதலில் இதில் ஜோர்டன், சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகள் இருந்தன. பின்னால் பல நாடுகள் சேர்ந்துகொண்டன. இப்போது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21) அராப் லீக் (Arab league) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்த அமைப்பிலிருந்து பாலஸ்தீனத்திற்கு பணம் வந்துகொண்டிருந்தது. இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள். இதனால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ் இருக்கும் இடங்களில் வறுமை இருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள பல பணபலமுள்ள யூதர்களின் வற்புறுத்தலாலும் செல்வாக்காலும் அமெரிக்கா இஸ்ரேலின் முழு நண்பனாகவும் ஆதரவாளனாகவும் விளங்குகிறது. அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு தினமும் பத்து லட்சம் டாலர் உதவிப்பணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். 2011-இல் ஐ.நா.வின் யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பாலஸ்தீன் ஒரு அங்கத்தினர் ஆனது. இதை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிர்த்தது. அதோடு மட்டுமல்ல அமெரிக்கா யுனெஸ்கோவுக்குக் கொடுக்கும் தன் பங்கிற்கான பணத்தையும் கொடுக்க மறுத்தது. (ஐ.நா.வின் பல ஸ்தாபனங்களுக்கு உலகிலேயே பணக்கார நாடு என்பதால் அமெரிக்காதான் நிறையப் பணம் வழங்கி வருகிறது. அதனால் அவற்றில் அதிகாரமும் செலுத்திவருகிறது.)
மேலும் தனி நாடாகி ஐ.நா.வில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன் இப்போதே ஜெனரல் அசெம்பிளியில் 2012 நவம்பர் மாதம் non-member observer entity என்ற அந்தஸ்தை பாலஸ்தீனத்திற்கு முகம்மது அப்பாஸ் பெற்றிருக்கிறார். இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. கோபத்தில் அமெரிக்கா பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டது.
அதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே பாலஸ்தீன அத்தாரிட்டி திணறுகிறது. பாலஸ்தீனத்திற்கு இந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்குரிய ஓட்டெடுப்பில் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட 138 நாடுகள் அந்தஸ்து கொடுக்கலாம் என்று ஓட்டளித்தன. அமெரிக்கா இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் கூடாது என்று ஓட்டளித்தன. ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றுக்கொள்ளவில்லை.
இப்படி ஐ.நா.வின் ஜெனரல் அசெம்பிளியில் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு, ‘ஓட்டெடுப்பில் பங்கெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தினர்’ பதவி (non-member observer status) கிடைத்திருப்பதால் இஸ்ரேலுக்குச் சில பின்விளைவுகள் ஏற்படலாம். பாலஸ்தீன அத்தாரிட்டி அகில உலக கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது ஐ.நா.வால் பாலஸ்தீனத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்புகளை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பது அவற்றில் ஒன்று
இப்படிப்பட்ட பின்விளைவுகளுக்குப் பயந்து அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி ‘நாளை எழுந்ததும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை. அமைத்திக்கான பேச்சு வார்த்தைகளில்தான் இன்னும் தாமதம் ஏற்படப் போகிறது’ என்று ஏளனமாகக் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் கூட்டாக பாலஸ்தீனத்தின் புதிய அந்தஸ்தை எதிர்க்கின்றன. பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எதிராக அகில உலக கிரிமினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிடுவதாகவும் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாவிட்டால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் வாஷிங்டன் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.
2013 மார்ச் மாதம் அமெரிக்கா கௌரவிக்கவிருந்த பெண்கள் பட்டியலிலிருந்து எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் பெயரை நீக்கியிருக்கிறது. அவருடைய ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பல்கேரியாவில் இஸ்ரேலிய யூதர்கள் பயணித்த ஒரு பேருந்து தாக்கப்பட்டதைப் புகழ்ந்து எழுதியிருந்தாராம்; மேலும் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கூறிய ஒரு மேற்கோளும் எடுத்தாளப்பட்டிருக்கிறதாம். ஆனால் அந்தப் பெண் தான் அப்படி எழுதவில்லை என்றும் தன்னுடைய கடவுச் சொல்லை (password) யாரோ திருடி தன் கணக்கில் யாரோ அப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இது பற்றி தீர விசாரித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்காதான் இப்போதைய இஸ்ரேலின் முழு நண்பன். இஸ்ரேலைத் தாக்கும் யாரும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.
சென்ற ஜனவரி 22-ஆம் தேதி இஸ்ரேலில் பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது. எட்டு மில்லியன் ஜனத்தொகை கொண்ட இஸ்ரேலில் 20 சதவிகிதம்பேர் (1.5 மில்லியன்) அரேபியர்கள். இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 2008-இல் நடந்த தேர்தலில் 53% வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் இன்னும் இது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 56% வாக்களித்திருக்கிறார்கள். ‘யூதர்கள் (64%) அளவு அரேபியர்கள் ஓட்டளித்தால் இருபதுக்கும் மேலான இடங்களைப் பெறலாம். இப்போது வாக்களிப்பவர்களில் இன்னும் 50% அதிகரித்தால் நேத்தன் யாஹூ அரசில் (government) இருக்க முடியாது’ என்று முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரும் மந்திரியுமான கேலப் மஜாட்லே (Ghaleb Majadleh) கூறியிருக்கிறார்.
நிறைய அரேபியர்கள் ஓட்டளித்தால் நாடு (இஸ்ரேல்) ஜனநாயகத்தையும், எல்லோருக்கும் சமஉரிமை கொடுப்பதையும் மதிக்கிறது என்பது புலனாகும் என்கிறார்கள் இஸ்ரேல் தலைவர்கள். அரேபிய அரசியல்வாதிகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள், முனிசிபல் வசதிகள் இல்லை என்கிறார்கள். அரேபிய கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்கிறார்கள். சில அரேபியர்களுக்கு தேர்தலில் அக்கறையில்லை. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கு. இரண்டாவது வகையினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை. வாக்களிப்பதால் தங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை, ஏனெனில் இஸ்ரேல் தங்களுடைய நாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஒரு குடியரசு என்று இஸ்ரேல் தன்னைக் கூறிக்கொண்டாலும் அரேபியர்களை சரியாக நடத்துவதில்லையாதலால் வாக்களித்துப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள். என்னதான் தாங்கள் சரியாக நடத்தப்படாவிட்டாலும் – வேலைவாய்ப்பு, கல்வி வசதி, முனிசிபல் வசதிகள் இல்லையென்றாலும் – யூதர்களைப் போல் தங்களுக்கும் ஓட்டுரிமை இருப்பதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். மூன்று அரேபியர்கள் கட்சி – ஒன்று மத அடிப்படையில், இன்னொன்று கம்யூனிஸ்ட், இன்னொன்று தேசியக்கட்சி – இருக்கின்றன. புதிதாக இன்னொன்று இந்தத் தேர்தலில் சேர்ந்திருக்கிறது. இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கைகளைத் தட்டிக்கேட்க யாராவது வேண்டுமல்லவா; அதனால் நான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறார் இன்னொரு அரேபியர்.
2013 மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் விஜயம் செய்தார். அரசியல் தலைவர்களோடு பேசுவதை விட இளம் தலைமுறையினரோடு பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொண்டார். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக ஜெருசலேமில் உள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றில் 2000 பேர் அடங்கிய கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார். ‘பாலஸ்தீனர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவர்கள் கண்கள் மூலம் உலகைப் பாருங்கள். பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உங்களைப் போல் சொந்த நாட்டில் சுதந்திரமாக வளரும் உரிமை இருக்கிறதல்லவா?’ என்று பேசினார். ஆனால் இஸ்ரேல் அமைத்துவரும் குடியிருப்புகளைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. முகம்மது அப்பாஸை ராமல்லாவில் சந்தித்தபோது மறுபடி சமாதான உடன்பாட்டிற்குரிய பேச்சுவார்த்தைகளில் எந்த வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி இப்படிப் பேசி இஸ்ரேல் தலைவர்களை நியாயமாக நடந்துகொள்ள வைக்க முடியுமா என்று தெரியவில்லை. பாலஸ்தீனியர்களின் இடங்களில் இஸ்ரேலியர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் வசித்துவரும் இஸ்ரேலியர்களை எப்படி அங்கிருந்து வெளியேற்றுவது? இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டாலும் தீர்வு காண முடியாத இன்னொரு பிரச்சினை இருக்கிறது. இஸ்ரேல் அரசு நிர்மாணித்து வரும் பெரிய மதில் சுவரால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இப்போது தொடர்ச்சியாக இல்லை. இப்படித் தொடர்ச்சியாக இல்லாத இடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது?
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக இல்லாமல் பாலஸ்தீனம் முழுவதும் ஒரே நாடாக உருவானாலும் யூதர்கள் அதை விரும்பவில்லை. அவர்களுடைய நாடு ஒரு யூத நாடாகத்தான் இருக்க வேண்டுமாம். மேலும் அப்படி ஒரே நாடு உருவாகும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள். தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு யூத நாடு வேண்டும் என்று கேட்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள்? இத்தகைய காரணங்களினால் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
கடையாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் கிறிஸ்துவர்கள்தான் யூதர்களைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்றாகப் புலனாகும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் பற்றி இப்போது பேசுபவர்கள் இந்த உண்மையை மறந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் போலவும் அவர்களால்தான் யூதர்களுக்குத் தீங்கு விளைவது போலவும் கூறுகிறார்கள்.
முற்றும்
நாகேஸ்வரி அண்ணாமலை