இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்றளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 யானைகள் உயிரிழந்தன. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் மோதல்கள் காரணமாகவே ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் திமுது சந்தருவான் சேனாதீர இது தொடர்பில் கூறுகையில்,

சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியைப் பார்க்கும்போது, அதிகளவிலான யானைகள் இறப்பு பதிவாகியுள்ளது.

2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 74 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆனால், அவை எப்படி இறந்தன என்பது பற்றி தகவல் இல்லை.

49 யானைகள் துப்பாக்கிச் சூட்டின் மூலமும் 36 யானைகள் மின்சாரம் தாக்கியும் பலியாகின.

விரைவான நகரமயமாக்கல் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்தமை, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயம் காரணமாக விவசாயத்துக்காக காடுகளை அழித்தமை ஆகியவையே உலகளவில் யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்றால் யானைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஒரு பகுதிக்குள் தள்ளி பிறகு மின்வேலி அமைக்கிறார். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு அவர்களால் எந்த தீர்வையும் அளிக்க முடியவில்லை.

சுற்றுச்சூழல் சிறப்பாக இருப்பதற்கு யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பது சுலபமான காரியமல்ல.

யானைகள்-மனிதர்களுக்கு இடையேயான மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது கடினம் என்றாலும், யானைகளை பாதுகாக்க இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply