திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்)
ஓர் இறைத்தூதராக குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் 35 தடவைகள் ஆபிரகாமின் பெயர் இடம்பெறுகின்றது.
ஆபிரகாமின் முதல் மனைவியான சாராவுக்கு பிறந்தவர் ஈசாக். இரண்டாம் மனைவியான ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மாயில். ஈசாக்கின் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது யூதமும், கிருத்தவமும் என்றும் இஸ்மாயில் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது இஸ்லாமிய மதம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
இஸ்லாமியர்கள் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள “கபா’ என்னும் இடம், ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது.
ஆபிரகாமின் வழிவந்த சந்ததியில் பிறந்த லேயாவுக்கு 12 மகன்கள் பிறந்தனர். இவர்கள் 12 பேரும் 12 கோத்திரமாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது.
12- ஆவது மகனான யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஆளுநராக (மன்னருக்கு அடுத்த பதவி) உயர்த்தப்பட்டார். பின்னர் தனது சகோதரர்களையும் எகிப்து தேசத்தில் நைல் நதி கரையில் குடியமர்த்தினார். யோசேப்பு மறைவுக்கு பின்னர் 400 ஆண்டுகள் எபிரேயர்கள் (இஸ்ரேலியர்கள்) அடிமைப்படுத்தப்பட்டனர்.
அடிமைகளான எபிரேயர்களை, மோசே என்பவர் தலைமையில் கடவுள் மீட்டு செங்கடல் வழியாக நுழைந்து சீனாய் மலை, பாலைவனம் வழியாக நோபோ மலைக்கு (இன்றைய ஜோர்தான் நாட்டில் உள்ளது) அழைத்துச் சென்றார். அந்த மலையில் மோசேவுக்கு, கடவுள் காட்சி அளித்து பசுமையான தேசம் ஒன்றை காண்பிக்கிறார்.
கடவுள் மோசேயிடம், இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார் (உபாகமம்: 1:8).
கடவுள் காண்பித்த தேசம் தான் இன்றைய இஸ்ரேல்தேசம். கடவுள், யூதர்களுக்கு வாக்களித்து கொடுத்த தேசம் என்பதால் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி வாக்களிக்கப்பட்ட தேசம் என அழைக்கப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் பிற தேசங்கள் புனித தேசங்கள் என அழைக்கிறது.
வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பெத்லஹேமில் (பாலஸ்தீனம்) தான் இயேசு கிறிஸ்து பிறக்கிறார். அவர் வளர்ந்த நாசரேத், அவர் அதிகம் பிரசங்கம் செய்த கலிலேயே கடல் உள்ளிட்டவை இஸ்ரேல் தேசத்தில் உள்ளன.
வாக்களிக்கப்பட்ட தேசமான இஸ்ரேலில் மட்டும் யூதர்கள் இப்போது வாழ்கின்றனர். யூதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த புனித தேசங்களான எகிப்து, ஜோர்தான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகியவை இஸ்லாமிய நாடுகளாக உள்ளன.
விவிலியத்தில் எகிப்து
இன்றைய எகிப்து, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்டது.
எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் மத்திய தரைக் கடலும், கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது.
இந்நாட்டின் 94 சதவீதம் பாலை வனமாகும். 6 சதவீதம் மட்டுமே வளமான நிலப்பகுதி. இந்நாட்டின் 90 சதவீத மக்கள் நைல் நதி ஆற்றங்கரையில் தான் வசிக்கின்றனர். பாலைவனங்களில் 8 சதவீத மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் ஒட்டக மேய்ப்பர்கள் தான் இங்கு நாடோடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நாடோடிகள் “பிட்வின்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மலைகள், காடுகளில் கிடைக்கும் தாவர இலைகளை பயன்படுத்தி தயாரிக்கும் மருந்துகளை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நாட்டின் தலைநகர் கெய்ரோ. பழைய கெய்ரோ, புதிய கெய்ரோ என இரு நகரங்கள் உள்ளன. பழைய கெய்ரோ நகரில் தான் பிரமிடுகள், ஸ்பிங்ஸ் (மனிதன், மிருகம் இணைந்த உருவம்), எகிப்து அருங்காட்சியகம் உள்ளிட்ட பழஞ்சிறப்புகளுடனும், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், 24 கி.மீ. நீளம் கொண்ட மேம்பாலம், தொழிற்சாலைகள், சர்வதேச வர்த்தக மையங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்டவற்றுடன் புதிய கெய்ரோ மிளிர்கிறது.
எகிப்தில் எபிரேயர்கள்
எபிரேயர்களை (யூதர்கள்) பொருத்தவரை தங்களது காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தலைமுறை தலைமுறையாக எழுதும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட தொகுப்புகளை கொண்டது தான் விவிலியம். இந்த விவிலியம் இப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் கையில் தவழ்கிறது என்றால் அதற்கு எகிப்து தான் முக்கிய காரணம்.
ஜெபலின் ஜான் (தொடரும்….)