கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பொலிவூட் நடிகை பூனம் பாண்டே, “நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்த நோய்க்கு பலியாகவில்லை” எனக்கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபல பொலிவூட் நடிகை பூனம் பாண்டே (32) வெள்ளிக்கிழமை காலமானதாக செய்திகள் வந்தன. அவரது உறவினர்களும் இதனை சமூக ஊடகத்தில் உறுதிபடுத்தினர்.

இந்நிலையில், பூனம் பாண்டே ‘நான் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன்’ எனக்கூறி சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப்பதிவில் கூறியுள்ளதாவது, நான் உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு நான் இறக்கவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர். அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

மற்ற புற்றுநோய்களை போல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே. இதற்கு முன்கூட்டியே பரிசோதனை செய்வதுடன், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காகவே இறந்துவிட்டதாக கூறி பதிவிட்டேன். இறந்துவிட்டதாக கருதி பொலிவூட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வந்தனர். அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” எனக்கூறியுள்ளார்.

Share.
Leave A Reply