கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள், பெருந்தலைவர் காமராஜரைத் தாக்கும் விதமாக இருததால், எம்.எஜி.ஆர் வாலி பாடலை வதம் செய்த தகவல் பலருக்கும் சுவாரசிய நிகழ்வாக
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து, மறையும் வரை மாநிலத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதிய வாலி எழுதிய பாடல் வரிகள், பெருந்தலைவர் காமராஜரைத் தாக்கும் விதமாக இருததால், எம்.எஜி.ஆர் வாலி பாடலை வதம் செய்த தகவல் பலருக்கும் சுவாரசிய நிகழ்வாக உள்ளது.
காமராஜரைத் தாக்கி வாலி அப்படி என்ன பாடல் எழுதினார், அதற்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் என்பதை இங்கே பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களில் இயக்குனர் தேர்வு முதல், படத்தில் இடம்பெறும் பாடல்கள் வரை அவர் விருப்பப்படிதான் இருக்க வேண்டும். அது தனது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம். அப்போது மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது, எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தார். எம்.ஜி.ஆரின் சினிமா புகழ் தி.மு.க-வுக்கு உதவியாக இருந்தது.
எம்.ஜி.ஆருக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் படங்களுக்காக வாலி எழுதிய பாடல்கள் ஏதாவது ஒரு பிரச்னையை சந்திக்கும்.
பிறகு, அது எம்.ஜி.ஆரால் சரி செய்யப்படும். அந்த வரிசையில், எம்.ஜி.ஆர் நடித்து 1965 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் எங்க வீட்டுப் பிள்ளை.
இந்த படத்திற்காக வாலி எழுதிய பாடல் ஒன்று, ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடலை சென்சார் போர்டு மாற்றச் சொன்னது. வாலி எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.
வாலி எழுதிய பாடல் வரிகளைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரொம்ப அநியாயம் என்றார். இதற்கு கவிஞர் வாலி, “ஆமாண்ணே, ரொம்ப அநியாயம், ரொம்ப அக்கிரமம்” என்றார். ஆனால், இதற்கு எம்.ஜி.ஆர் “நான் சென்சாரை சொல்லவில்லை. உங்களை சொன்னேன்” என்றார்.
அந்த படத்திற்காக முதலில் எழுதப்பட்ட பாடல் வரிகளில், பல்லவியில், “நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்ற வரிகளைக் காட்டி, மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கும்போது, மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்த பாடலில், அடுத்து வந்த சரணத்தில், “என் காலம் வரும், என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்” என்று இருந்தது.
அன்றைக்கு காங்கிரஸை கடுமையாக எதிர்த்த தி.மு.க பேச்சாளர்கள் சிலர், காமராஜரை காக்கை என்று விமர்சித்துப் பேசி வந்தனர்.
அதனால், “இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்” என்ற பாடல் வரிகளைப் பார்த்த எம்.ஜி.ஆர், இது காமராஜரைத் தாக்கும் விதமாக உள்ளது என்று மொத்த பாடல் வரிகளையும் மாற்ற வேண்டும் போல் இருக்கிறதே என்று கூறினார்.
எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து, பல்லவியில் “நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்ற வரிகளுக்கு பதிலாக, “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று மாற்றப்பட்டது.
அதே போல, சரணத்தில், “என் காலம் வரும், என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்” என்ற வரிகளுக்கு பதிலாக, “என் காலம் வரும், என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்று மாற்றப்பட்டது.
இப்படி, எம்.ஜி.ஆர், தனது படத்துக்காக வாலி எழுதிய பாடல், தன்னை புகழ்வதாக இருந்தாலும், அது மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸை தாக்கக் கூடாது என்றும், பெருந்தலைவர் காமராஜரைத் தாக்கும் விதமாக வரிகள் இருக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்து, வாலியின் பாடல் வரிகளை மாற்றி வதம் செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் செய்த சரியான திருத்தம், வாலி பாடலை வதம் செய்தார் என்று சொல்வதைவிட அந்த பாடலை செம்மைப்படுத்தவே செய்திருக்கிறார்.