பாதாள உலகக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் கொலைகளுடன் சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து, படை முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வெளியில் எடுத்துச் செல்வது சம்பந்தமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படை வீரர் ஒருவர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொண்ட பின்னர், அதனை உரிய நேரத்தில் திருப்பி ஒப்படைத்தாரா என்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை தவிர படை முகாம் மட்டத்தில் ஆயுதங்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையும் பெறப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் போது, அவர்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் நடத்தைகள் தொடர்பில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்படாத நபர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு ஆயுத களஞ்சியங்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் சைபர் கண்காணிப்பு முறை ஊடாக படையினரின் சந்தேகத்திற்குரிய செயல்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அம்பலங்கொடை நகரில் மீன் வியாபாரி ஒருவரை கொலை செய்ய சென்றிருந்த இராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி மற்றும் 10 தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டனர்.

தற்போது டுபாயில் வசித்து வரும், அஹூங்கல்ல, கொஸ்கொட, பலப்பிட்டிய பிரதேசங்களை மையமாக கொண்டு பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் வழங்கிய ஒப்பந்தத்திற்கு அமைய இந்த சந்தேக நபர்கள், மீன் வியாபாரியை கொலை செய்ய சென்றுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவ வீரர் கைது செய்யப்படும போது தான் இராணுவத்தில் கடமையாற்றுவதை காவற்துறையிடம் மறைத்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படைகளின் முன்னாள் உறுப்பினர்களும் பாதாள உலகக்குழுக்கள் சம்பந்தப்படட் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகாம்களில் கடமையில் இருக்கும் நேரத்தில் தமக்கு வழங்கப்படும் துப்பாக்கியை வெளியில் எடுத்துச் சென்று கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் கடற்படை வீரருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த கொலைகளை முன்னாள் இராணுவ மேஜர் வழிநடத்தியுள்ளதும் தெரியவந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் கடற்படை வீரர், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று கொஸ்கொட சுஜீ உட்பட பாதாள உலக தலைவர்களுடன் தங்கியுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மாமனாரை காவற்துறையினர் ஹெரோயின் போதைப் பொருளுடன் அண்மையில் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாதாள உலகக்குழுக்களின் கொலைகளுடன் படையினருக்கு தொடர்பு இருப்பது சம்பந்தமாக பாதுகாப்பு பிரதானிகளின் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றும் நடந்துள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க மேற்கொள்ளப்படும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply