மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், தனது மனைவியின் வைத்திய செலவுக்கு போதிய பணம் இல்லாததால் சுதந்திர தினத்தன்று (04) மாலை 4.30 மணியளவில் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விஷம் அருந்தி வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply