இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முன்வர வேண்டும் என்றும், அதற்காக எந்த விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு சிறீதரன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டது பரவலான கவனிப்பை பெற்றிருந்த சூழ்நிலையில், தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் இருந்து அதற்கு சாதகமான வரவேற்பும் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் தான், விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தது போன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான அழைப்பு சிறீதரனால் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அழைப்பு தொடர்பாக தமிழ் தேசிய கட்சிகளிடமிருந்து ஒருமித்த கருத்து வெளியாகவில்லை.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சிறீதரனின் அழைப்புக்குச் சாதகமான கருத்தை வெளியிட்டிருந்தாலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில், அதன் பேச்சாளராக உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அந்த அறிக்கையில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுப்பது பற்றிய யோசனைக்கு பதிலாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தமிழரசுக் கட்சி இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதன் பங்காளிகளாக இருந்த புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள், தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட போது, இதுதான் உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று இதன் தலைவர்கள் கூறிக் கொண்டனர். தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் அழைத்துக் கொண்டனர்.
ஆனாலும், ஊடகங்களோ தமிழ் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வேறாகவும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை வேறாகவும் தான் பார்த்தனர்.
ஏனென்றால் விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்களின் ஆசியோடு உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அவர்களின் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியான ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையுடன், அப்போது அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் சேர்ந்து இயங்கிய புளொட் அமைப்பினால் பதிவு செய்யப்பட்டு, குத்துவிளக்கு சின்னத்தில் உருவாக்கப்பட்டது தான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி.
இந்த இரண்டுக்கும் இடையில் இருந்த தெளிவான வேறுபாட்டை, தமிழ் மக்கள்- ஊடகங்கள் புரிந்து கொண்டிருந்தன.
அதனால் தான் இந்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று அடையாளப்படுத்துவதில் வெற்றிபெற முடியாமல் போனது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளமைக்க, பிரிந்து சென்ற கட்சிகளுடன் ஒருமித்து செயற்பட தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்ற நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து, அந்தக் கூட்டணியில் ஏனைய முக்கிய தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிேயாரின் கருத்துக்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.
ரெலோவும் சரி, புளொட்டும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதற்குத் தயார் என்ற நிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது.
சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அதனை பகிரங்கமாக எதிர்க்கவில்லை. ஆனால், நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களின் முதலாவது நிபந்தனை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக பொது சின்னம் ஒன்றை தெரிவு செய்வதற்கு இணங்க வேண்டும் அல்லது வீடு சின்னத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகத் தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒன்று.
தமிழரசுக் கட்சி தான் அதனை தட்டிக் கழித்து வந்தது.
தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டதால், அந்த கட்சியே பிரதான கட்சியாக விளங்கியதால், தமது மேலாதிக்கத்தை பேணுவதற்காக கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு விரும்பவில்லை.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா முடிவுகளும் அதன் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோராலேயே எடுக்கப்பட்டன.
பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடாமல், அவர்கள் இருவருமே தீர்மானங்களை எடுத்தனர்.
இதனால் கூட்டமைப்புக்குள் ஜனநாயகமும், வெளிப்படைத்தன்மையும் இருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதற்கு இந்த இரண்டு காரணங்களும் முக்கியமானவை.
அதனால் தான் இந்த இரண்டு குறைபாடுகளையும் நீக்கக் கூடிய நிபந்தனைகளை ரெலோவும், புளொட்டும் முன்வைத்திருக்கின்றன.
இந்த நிபந்தனைகளில் யாரும் தவறு காண முடியாது. ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இன்றைய நிலைக்கு இந்த தவறுகளே முக்கியமான காரணம்.
தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் கூட்டமைப்பை உருவாக்கி விட முடியாது.
அவ்வாறு உருவாக்கப்பட்டாலும் அது பலமடைய முடியாமல் போகும். மீண்டும் மீண்டும் முரண்பாடுகள் ஏற்பட்டு பிளவுகள் உருவாகும்.
எனவே தவறுகளை திருத்திக் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் ஒருங்கிணைக்க முடியும்.
இந்த உண்மை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனுக்கு தெரியாத ஒன்று அல்ல.
அதனால் தான் அவர் மீண்டும் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு, எந்த விட விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், அவருக்கு அவரது கட்சிக்குள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது பொறுத்திருந்தே, பார்க்க வேண்டிய விடயம்.
இவற்றிற்கு அப்பால் மூன்றாவதாக ஒரு நிபந்தனை இருக்கிறது. அது முக்கியமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக, வீடு சின்னத்தை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இது சிக்கலான ஒன்று.
ஏனென்றால், இலங்கை தமிழரசுக் கட்சி வீடு சின்னத்தை கடந்த 74 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து, இந்தச் சின்னம் பயன்பாட்டில் இருக்கிறது.
அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக பயன்படுத்தப்படுவதை தமிழரசுக் கட்சி எதிர்க்கவில்லை.
ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் சின்னம், மற்றும் பெயரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டதால், தங்களின் ஆதிக்கம் பேணப்படும் என்பதால் தமிழரசுக் கட்சிக்குள் அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாக பதிவு செய்து, வீடு சின்னத்தையும் விட்டுக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி அவ்வளவு இலகுவாக இணங்கும் ஒன்று எதிர்பார்க்க முடியாது.
1972ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்ட போது, தமிழரசுக் கட்சி உதயசூரியன் சின்னத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால், வீடு சின்னத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்திலும் அதே நிலையே காணப்பட்டது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக வீடு சின்னத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என கோரினால், அதற்கு தமிழரசுக் கட்சி இணங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
சித்தார்த்தனிடமிருந்து இந்த நிபந்தனை முன் வைக்கப்பட்டு பல நாட்களாகியும் தமிழரசுக் கட்சி தரப்பிலிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணமே இந்த நிபந்தனையை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்பதுதான்.
இந்த விடயத்தில் சித்தார்த்தனுக்கும் நிலைமை புரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் வீடு சின்னத்தை விட்டுக் கொடுக்க தயார் இல்லாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொதுச் சின்னம் ஒன்றை உருவாக்க தமிழரசுக் கட்சி இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார். இதில் நியாயம் உள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பொதுச் சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொண்டால், தமிழரசுக் கட்சியின், வீடு சின்னம், 1972இற்கும், 2004இற்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தது போன்ற உறங்கு நிலைக்கு சென்று விடும்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மலர் சின் னம், ரெலோவின் கப்பல் சின்னம், புளொட்டின் நங்கூரம் சின்னம் போன்றவற்றுக்கு ஏற்பட்ட கதியே, தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்துக்கும் ஏற்படும்.
அவ்வாறான நிலையை தமிழரசுக் கட்சியின் தலைமை, ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறதா என்பதைப் பொறுத்தே பொதுச்சின்னம் குறித்த உரையாடல்களை நடத்த முடியும்.
அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் வரவேண்டும் என விதிக்கும் நிபந்தனை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இல்லை.
சுரேஷ் பிரேமச்சந்திரனின், இந்த நிபந்தனை, தமிழரசுக் கட்சி உள்ளே வரக் கூடாது என்ற எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆசியுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீடித்திருக்கக் கூடாது எனக் கருதும், சக்திகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் எண்ணம் அவருக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகள் பற்றி பேசுகின்ற போது நிபந்தனைகளை விட, விட்டுக்கொடுப்புகளே முக்கியமானவை.
இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக இருக்கும் என்பதை பொறுத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீள் உருவாக்கம் சாத்தியப்படும்.
-கார்வண்ணன்-