விவிலியத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இந்த நைல் நதி. மோசே பிறந்த இடம், எபிரேயர்கள் அடிமைகளாக இருந்த இடம், இயேசு பாலகனாக இருக்கும்போது பெற்றோருடன் அடைக்கலம் புகுந்த இடம். எல்லாமே நைல் நதி கரையை ஒட்டிய எகிப்து பகுதிகள் தான்.
உலகின் மிக நீளமான ஆறான நைல் நதி 6650 கி.மீ. நீளம் கொண்டது. தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடு நிலக் கடலில் இது கலக்கிறது. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்.
நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் கிளைகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகிறது.
அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது.
நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகிறது.
நைல் நதி பாயும் நாடுகள்: Countries Egypt, Sudan, South Sudan, Ethiopia, Uganda, Democratic Republic of the Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கிறது.
இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாசாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ நைல் நதிக்கரையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது மிதக்கும் விவிலிய தேவாலயம் (FLOATING BIBLE CHURCH). கெய்ரோவில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது இந்த அழகிய தேவாலயம். இந்த தேவாலயத்தின் சிறப்பு குறித்த வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.
காப்டிக் கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த தூய மரிய அன்னை தேவாலயத்தில் 12.3.1976-ஆம் ஆண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது நைல் நதியில் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் திறந்த நிலையில் விவிலியம் ஒன்று மிதந்து வந்தது. சிறப்புப் பிரார்த்தனை முடிந்த வெளியே வந்த கிறிஸ்தவர்கள் இந்த விவிலியத்தை கண்டு ஆச்சரியம் அடைந்து அதை எடுத்து பார்த்தனர்.
திறந்த நிலையில் இருந்த விவிலியத்தில் ஏசாயா புத்தகத்தில் 19-ஆம் அதிகாரம் திறக்கப்பட்டிருந்தது.
அந்த அதிகாரம் 25-ஆம் வசனம் அவர்களுக்கு வாக்குதந்த வசனமாக கிடைத்தது. அதில், அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசிரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார் (ஏசாயா 19:25).
இதன்படி, கடவுள் இஸ்ரேல் தேசம், அசிரியா (ஈராக்) தேசம், எகிப்து தேசம் ஆகியவற்றை ஆசீர்வதிப்பார் என குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தோஷம் அடைந்த அந்த தேவாலயத்தினர், நதியில் மிதந்து வந்த விவிலியத்தை எடுத்து அந்த தேவாலயத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அந்த விவிலியம் மிதந்து வந்த அதே பக்கத்தை அப்படியே திறந்து வைத்துள்ளனர்.
அதுவரை தூய மரியன்னை தேவாலயமாக அழைக்கப்பட்ட அந்த ஆலயம், அன்று முதல் மிதக்கும் விவிலிய தேவாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
(FLOATING CHURCH).
நைல் நதி கரையில் பிறந்த மோசே (யாத்திராகமம் 2-ஆம் அதிகாரம்)
எகிப்தில் அடிமைகளாக இருந்த அம்ரான்-யோகேபேத் என்ற எபிரேய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் மோசே.
அவர் பிறந்த காலத்தில் எகிப்து மன்னரான பார்வோன் எபிரேயர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அதை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்திருந்ததால் பயந்து போன யோகேபேத் நைல் நதிகரையில் நாணல்களை எடுத்து சிறிய பெட்டி செய்து அதில் 6 மாத கைக்குழந்தை மோசேவை வைத்துவிட்டு தூரத்தில் காத்திருந்தாள்.
அப்போது அங்கு பார்வோனுடைய மகள் குளிக்க வந்தாள். குழந்தை அழும் சப்தம் கேட்டு நாணல் பெட்டியை திறந்துபார்த்தபோது அழகான ஓர் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.
அது எபிரேய ஆண் குழந்தை என அவள் அறிந்தும் அதை வளர்க்க விரும்பினாள். தூரத்தில் காத்திருந்த யோகேபேத்தை அழைத்து அந்த குழந்தைக்கு பால் கொடுக்கும்படி மன்னரின் மகள் உத்தரவிட்டாள்.
குழந்தை பால் குடியை மறக்கும் வரை அரண்மனையில் இருந்து பால் கொடுத்து வளர்க்கும்படியும் யோகேபேத்தை, அந்த இளவரசி கேட்டுக் கொண்டாள்.
பார்வோனின் அரண்மனையில் தத்துப்பிள்ளையாக வளர்ந்த மோசே குழந்தை பருவம் முதல் எகிப்தில் அடிமைகளாக இருந்த எபிரேயர்களை இஸ்ரேல் தேசத்துக்கு அழைத்துச் சென்றது முதல் அதிகம் வசித்த நாடு எகிப்து தான்.
– ஜெபலின் ஜான்
(தொடரும்….)