மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு புதுடெல்லியில் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றுள்ளது.
விளம்பரம்

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் இலங்கையின் பொருளாதார சவால்கள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பேசப்பட்டதாகவும், அயல் நாட்டுக்கான முன்னுரிமை மற்றும் இந்தியப் பெருங்கடலின் முன்னுரிமை கடல்சார் முன்முயற்சி என்ற கருப்பொருளின் கீழ் இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்றும் பேசப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரஜைகளுக்கு சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், கட்டாயம் இலங்கைக்கு செல்லுமாறு மும்பை நகரில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்த நாட்டு பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

‘நாம் வாக்களித்தாலும், நாட்டின் தலைவரை தெரிவு செய்வது வெளி நபர்கள்’

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந்தப் பயணம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுமா என கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் அரச கொள்கை ஆய்வுப் பிரிவின் பிரதானி கலாநிதி பிரதீப் பீரிஸிடம் வினவியது.

அதற்குப் பதிலளித்த அவர், ”நாட்டு மக்கள் வாக்களித்தாலும், இலங்கைக்கான தலைவரைத் தெரிவு செய்வது நாட்டிற்கு வெளியிலுள்ள நபர்கள்” எனக் கூறினார். ”நாட்டைச் சூழவுள்ள பூகோள அரசியலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடாமல், இலங்கையின் எதிர்காலத் தலைவராக எப்போதும் வர முடியாது.”

”இலங்கையில் இருந்து நாம் வாக்களித்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களால் வாக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.”

”பெரும்பாலும், அநுர குமார திஸாநாயக்க அல்லது தேசிய மக்கள் சக்தி நாட்டின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற எதிர்பார்க்குமானால், கட்டாயம் உலகின் வலுவான நாடுகளுடன் ஏதோவொரு புரிந்துணர்வை வைத்துக்கொள்வது அவசியமாகின்றது.”

”அப்படியில்லையென்றால், இலங்கையிலுள்ள பிரதான கட்சி ஒன்றுக்கு அதிகாரத்திற்கு வர முடியாது”

”அதனாலேயே, அநுர குமார திஸாநாயக்க இந்த விஜயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். அதனாலேயே இந்தியாவும் அழைப்பு விடுத்திருக்கின்றது.”

”தென் சீனா மற்றும் தெற்காசியாவின் பூகோள அரசியல் என்றும் இல்லாதளவிற்கு தற்போது தீவிரமடைந்துள்ளது.”

”அதற்கான காரணம், தனி அதிகாரத்திற்குப் பதிலாக, கூட்டு அதிகாரம் என்ற கலாசாரத்திற்கு உலகம் தள்ளப்படுகின்றது.”

”இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த வளையத்திற்குள் தமது அதிகாரங்களை வைத்துக்கொள்வதற்கு விருப்பம் காணப்படுகின்றது.

அதனால், எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் நபர்கள் தமது திட்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ளும் தேவை அவர்களுக்கு உள்ளது.”

”அதனாலேயே அவரை அழைத்திருக்கக்கூடும். அதில் சற்று நேர்மறை அம்சங்களும் காணப்படுகின்றன,” என கலாநிதி பிரதீப் பீரிஸ் தெரிவிக்கின்றார்.

”இந்தியப் பெருங்கடல் வளையத்தின் அதிகாரம் மிகுந்த தரப்பினர், தமக்கு அவநம்பிக்கை கொண்ட குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தடுப்பதற்கும், அவ்வாறான குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் என எண்ணும் பட்சத்தில் அவர்களுடன் ஏதோ ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி செய்வார்கள்,” என அவர் கூறுகின்றார்.

இதில் இரண்டு விடயமே தற்போது இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்திகளைத் தற்போது அவதானிக்கும்போது, சோசலிச அரசியலில் இருந்து விடுப்பட்டு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சமூக ஜனநாயக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

 

இந்திய ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

இலங்கையில் தற்போது மிகப் பிரபலமான அரசியல் கட்சியாக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு, இந்தியா அதிகாரபூர்வ அழைப்பை விடுத்துள்ளமையானது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று என தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இந்தியாவின் புதுடெல்லி, ஆமதாபாத், திருவானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது அரச அதிகாரிகள், வணிக சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், விவசாயம் மற்றும் தொழில்சாலைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அநுரவின் இந்திய விஜயம் குறித்து, சமூக ஊடக பதிவுகள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறித்து இலங்கைக்குள் சமூக ஊடகங்களில் கலவையான கருத்துகளைக் கொண்ட பதிவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, தனது எக்ஸ் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பானது மிகச் சிறந்த நடவடிக்கை எனவும், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்படுகின்ற இந்து – பசுபிக் கொள்கை உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொலைநோக்குப் பார்வை குறித்த அறிக்கையை தேசிய மக்கள் சக்தி ஆதரிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதைச் சாதகமாக்கிக் கொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் திட்டங்களை முன்னெடுக்கும்போது, அதானி குழுமத்திற்கு எந்தவித பிரச்னையும் வராது எனவும், மக்கள் விடுதலை முன்னணி எந்தவொரு எதிர்ப்பையும் இனி தெரிவிக்காது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் எக்ஸ் தள பதிவிற்குப் பதிலளித்துள்ள பயனாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

”நாம் இந்தியாவை எதிர்க்கவில்லை’

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயமானது அவசரமாக இடம்பெற்றது அல்லவென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிபிசிக்கு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பிற்கு அமைய, முன்னதாகவே இந்த விஜயம் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இந்தியாவிற்கு எதிராக கருத்துகளைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிர்ப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பிபிசிக்கு கருத்து தெரிவித்தார்.

”நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவை எதிர்க்கவில்லை. எமது நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்களை எடுக்கும்போது நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். நாம் நாடொன்றை எதிர்க்க மாட்டோம். அது நகைச்சுவையான ஒன்று. எந்தவொரு விடயத்திலும் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் காணப்படும் பட்சத்தில், அதை நாம் எதிர்த்தோம்,” என அவர் கூறினார்.

 

 

Share.
Leave A Reply