“அனுப்பர்பாளையம்,திருப்பூரில் காதலர் தினத்தன்று மனைவியை சுவற்றில் தள்ளி கொன்றுவிட்டு தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் மனைவி இறந்து விட்டதாக நினைத்து உயிரை மாய்த்த பரிதாபம் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சுத்தமலை சீர்பாத நல்லூரை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்வம் (வயது 26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் கோலனூரை சேர்ந்த ஜெயபால்-கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் தீபா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன்நகரில் வசித்து வந்தார்.

செல்வமும், தீபாவும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் காதலர் தினமான நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது குழந்தை அழுததால் அந்த குழந்தையை வீட்டிற்கு வெளியே விட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தீபாவை செல்வம் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ஆத்திரம் தீராத செல்வம் மனைவி தீபாவை சுவரோடு சேர்த்து தள்ளியதில் தலையின் பின்பக்கம் பலத்த அடிபட்டு தீபா மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து தீபா பேச்சு, மூச்சு இன்றி மயங்கி கீழே விழுந்தார். இதில் தீபா இறந்து விட்டார் என்று பயந்துபோன செல்வம் அதே அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் குழந்தையின் அழுகுரல் நீண்டநேரமாக கேட்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அப்போது வீட்டிற்கு வெளியே குழந்தை அழுது கொண்டிருப்பதையும், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதையும் பார்த்து ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தனர்.

அங்கு செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா கீழே படுத்த நிலையிலும் இருந்தனர். இதுகுறித்து உடனடியாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீபாவுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், தீபா இறப்பை கொலை வழக்காகவும், செல்வத்தின் இறப்பை தற்கொலை வழக்காகவும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.”,

Share.
Leave A Reply