கேரளாவின் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் திகிலூட்டும் படமாக சமீபத்தில் வெளியாகியுள்ளது பிரம்மயுகம் எனும் மலையாள படம்.
தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தும் மம்மூட்டியின் நடிப்பு திறமைக்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் திரை ரசிகர்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பல்வேறு நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.
17-ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் வனப்பகுதிக்குள் வழிதவறி செல்லும் தேவன் (அர்ஜுன் அசோகன்) எப்படி மணக்கால் கொடுமன் பொட்டி (மம்மூட்டி) வீட்டை அடைகிறார்.
அங்கு கொடுமன் பொட்டியால் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார், மேலும் சென்ற முதல் நாள் முதலே என்ன விதமான மர்மங்களை எதிர்கொள்கிறார்.
அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ற ஒரு திகிலூட்டும் கதையை கருப்பு வெள்ளையில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.
இதற்கு முன்னரும் அமானுஷ்யம் சார்ந்த படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ராகுல் சதாசிவன் அதன் சாயல் எதுவும் இதில் தெரியாமல், இதை வேறொரு பாணி திகிலூட்டும் படமாக எடுத்துள்ளதாக நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
மலையாளத்தின் ஓப்பன்ஹெய்மர்?
சமீப காலமாகவே மலையாள மக்கள் வித்யாசமான கதைக்களங்களை கொண்டாட தொடங்கியுள்ளனர். அதை புரிந்துக்கொண்ட மலையாள படத்தயாரிப்பு நிறுவனங்கள் வித்யாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்தும் வருவதாக கூறியுள்ளது மலையாள மனோரமா.
அந்த வரிசையில் திரையுலகின் அடி முதல் உச்சம் வரை அறிந்த மம்மூட்டியின் படத் தயாரிப்பு நிறுவனம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது அந்நாளிதழ்.
சமீபத்தில் கேரளாவில் வெளியான கருப்பு வெள்ளை ஹாலிவுட் படமான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 6 கோடி ரூபாயை வசூல் செய்தது. மூன்று மணிநேரம் கருப்பு – வெள்ளை படத்தை இந்தளவு கொண்டாடி பார்க்க கூடிய மலையாள ரசிகர்களின் ரசனையை புரிந்துக் கொண்டே, மம்மூட்டி பிரம்மயுகம் படத்தை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று மலையாள மனோரமா தெரிவித்துள்ளது.
மேலும் அந்த படத்தின் இயக்குனர் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
மலையாளம் தெரியாதவர்களுக்கும் பிடிக்கும்
மலையாள மொழியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை, மொழி தெரியாதவர்கள் பார்த்தால் கூட புரிந்து கொள்ள முடியும் அளவிற்கு எளிமையாக இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.
மலையாளம் தெரிந்தவர்களுக்கு ஏற்படும், அத்தனை உணர்வுகளையும், மொழி தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கொடுக்கத் தவறவில்லை.
முழுக்கமுழுக்க கருப்பு – வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒவ்வொரு காட்சியிலும் மர்மங்கள் நிறைந்த சூழலை உருவாக்கி, பார்வையாளர்களை பதைபதைக்க வைப்பதாக அந்நாளிதழ் கூறியுள்ளது.
படத்தில் வரும் ஒரே ஒரு சிதிலமடைந்த வீடு மற்றும் மரம் செடிகொடிகளை வைத்துக் கொண்டு படத்தையே மிரள வைக்கும் அனுபவமாக மாற்றியிருக்கிறார் இந்த படத்தின் கலை இயக்குநர் ஜோதீஷ் சங்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளது இந்து தமிழ் திசை.
அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவும், இசையும் அதற்கான பங்கை சிறப்பாக செய்துள்ளதாகவும் அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.
மூளைக்கு வேலை தரும் படம்
“ஹாரர் வகை படங்களின் முடிவு ஊகிக்கக் கூடியது என்றாலும் பிரம்மயுகத்தின் கதைக்களம் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் படியாகவே உருவாக்கப்பட்டிருகிறது” என்று கூறியுள்ளது தினமணி நாளிதழ்.
அதே சமயம் இந்த படத்தின் பலமும் பலவீனமும் கருப்பு வெள்ளைதான் என்று விமர்சனம் செய்துள்ளது அந்நாளிதழ். “படத்தில் சில இடங்களில் தொழில்நுட்பரீதியான தரக்குறைவால் கருப்பு வெள்ளை திரை பலம் இழப்பதாகவும், டிரைலரில் காணப்பட்ட தரம் பெரிய திரையில் குறைவாக இருந்தது போல் தெரிந்தது” என தினமணி விமர்சித்துள்ளது.
ஆனால், திகில் கதை மூலம் சாதி, மத அடக்குமுறைகள் குறித்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
இயற்கையான திகில் காட்சிகள்
பொதுவாகவே பல திகில் திரைப்படங்களில் அந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக செயற்கையான தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் பிரம்மயுகம் படத்தில் அப்படி இல்லாமல் ‘ஆர்கானிக்’ முறையில் திகிலூட்டும் கதையமைப்பை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
உண்மையாகவே திகிலூட்டும் படங்களுக்கு பஞ்சம் நிலவிக் கொண்டிருக்கையில், இந்த படம் முக்கியமான படைப்பு என்று தெரிவித்துள்ள அந்நாளிதழ், இறுதியில் அகோரமான காட்சியமைப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளது.
ஆனால், உங்களை பயமுறுத்தாத படம் எப்படி திகிலூட்டும் படமாக இருக்க முடியும்? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் படம் ஒரே இடத்தில் நகர்வதால் எளிதில் சலிப்படைந்து விடலாம். ஆனால், சரியான இடங்களில் சரியான இசையை சேர்த்ததன் மூலம் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் மற்றும் பின்னணி இசைக்குழு படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.