வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இன்று (16) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.
அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.