ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை.
“மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி.
இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் அவர் பின்பற்றினார்.
இந்த போரில் ரஷ்யாவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் யுக்ரேனிய வீரர்கள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு யுக்ரேனின் எதிர் தாக்குதல் தோல்விக்கு பிறகு, இந்த போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி இது.
அவ்திவ்கா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் யுக்ரைன் அதை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.
எனவே, இந்த நீண்ட மோதலில் அவ்திவ்காவின் வீழ்ச்சி எதை உணர்த்துகிறது?
ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு பெரியது.
மாபெரும் சக்தி கொண்ட நாட்டுடன் நீளும் போராட்டம்
ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான போர் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் உள்ள வலிமையின் வேற்றுமை வெளிப்படையாகவே தெரிய தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகம்.
இந்த போரில் ரஷ்யா ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ள போதிலும், புதிய வீரர்களை களத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தனது பலத்தை காட்டியுள்ளது.
யுக்ரேனிய ராணுவம் இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், அது ரஷ்ய இழப்பை விட குறைவே ஆகும்.
யுக்ரேனின் முன்பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் நடந்தது போலவே, முழுமையாக அழிக்கப்பட்ட இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளது ரஷ்யா.
இங்கு நிறுத்தப்பட்டிருந்த யுக்ரேனின் 3வது தாக்குதல் படைப்பிரிவு, தாங்கள் அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்படையினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தனது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படைகளை அங்கு நிறுத்தியிருப்பதாகவும், யுக்ரேனிய ராணுவ இலக்குகள் மீது நாளொன்றுக்கு 60 குண்டுகள் வரை வீசியதாகவும் நம்பப்படுகிறது.
கடந்த முறை யுக்ரேனிய நகரமான பாக்முத் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது, ஜெனரல் சிர்ஸ்கி விமர்சிக்கப்பட்டார். காரணம் அங்கு நீண்டகாலம் பதவியில் இருந்தவர் அவரே. மேலும், தேவையில்லாத இழப்புகளை ஏற்படுத்தி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த அனுபவம் அவரது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல தெரிகிறது.
கடந்த ஆண்டு யுக்ரேனிய நகரமான பக்முட்டை ரஷ்யா கைப்பற்றியது
போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா?
தற்போதைய ரஷ்யாவின் முன்னேற்றம் ஒன்றும் ஒரே இரவில் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, அவ்திவ்காவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா.
இந்த தொழில் நகரத்தின் வலுவான தளங்கள் மற்றும் பாதுகாப்பின் மூலம் யுக்ரேனிய வீரர்கள் அங்கிருந்தவாறே ரஷ்யா மீது குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இந்த நகரமே ரஷ்ய வீரர்களின் சடலமயமாக மாறிப்போனது. ரஷ்யாவின் கவச வாகனத்தையும் அவர்கள் அழித்துவிட்டனர்.
ஆனால், ரஷ்யாவின் முதல் தாக்குதலுக்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக பலப்படுத்தப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு தளத்திற்குள் தற்போது ரஷ்யா முன்னேறி வந்துவிட்டது.
ஆனால் ரஷ்யா மிக சமீபத்தில் உருவாக்கிய எந்த தளத்திற்குள்ளும் ஊடுருவ முடியாமல் இருப்பது யுக்ரேனுக்கு ஒரு பின்னடைவே.
“ரஷ்யாவால் தந்திரத்தின் மூலம் மட்டுமே இலக்குகளை அடைய முடியும், ஆனால் உத்தியைக் கொண்டு அடைய முடியாது” என்கிறார் யுக்ரேனிய இராணுவத்தின் 3வது தாக்குதல் படைப்பிரிவின் துணைத் தளபதி மேஜர் ரோடியன் குத்ரியாஷோவ்,
போன் வழியாக பிபிசியிடம் பேசிய அவர், “எங்களது வீரர்கள் ஏழுக்கு-ஒன்று என்ற கணக்கில் குறைவாக இருக்கின்றனர். இது ஏதோ நாங்கள் இரண்டு எதிரிகளுடன் சண்டையிடுவது போல் இருக்கிறது” என்று கூறுகிறார்.
அவர்கள் போக்ரோவ்ஸ்க் மற்றும் கோஸ்ட்யான்ட்னிவ்கா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்யர்களால் நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.
ரஷ்யா அவ்திவ்காவை கைப்பற்றியது, கிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டொனெட்ஸ்க் நகரத்தின் மீதான அவர்களின் அழுத்தத்தை குறைக்கும். இந்த நகரத்தை 2014 இல் ரஷ்யா கைப்பற்றியிருந்தது.
மேற்கத்திய உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது.
ரஷ்ய-யுக்ரேன் போரின் தற்போதைய நிலை என்ன?
யுக்ரைன் பின்வாங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல.
குறிப்பாக 2022 கோடைகாலத்தில் நவீன ஆயுதங்களோடு கூடிய பெரிய எண்ணிக்கையிலான ரஷ்ய படை, லிசிசான்ஸ்க் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் பகுதிகளை சுற்றிவளைத்தது. அந்த சமயத்தில் யுக்ரேனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இருப்பினும் மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் தனது ராணுவத்தின் மூலம் விரைவிலேயே நிலைமையை மாற்றியது. அதே ஆண்டில் கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து விடுவித்தது யுக்ரேனிய ராணுவம்.
ஆனால், தற்போது இந்த போர் வேறு நிலையை அடைந்துள்ளது.
இந்த போர்க்களத்தின் மீது உலக அரசியல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் வழஙகும் உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது.
யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் அமெரிக்கா முதன்மையானதாக இருக்கிறது. அதற்கு காரணம் அதனால் மட்டுமே, வேகமாக அதிக அளவிலான ஆயுதங்களை வழங்க முடியும்.
யுக்ரேனுக்கு வழங்குவதற்கான 95 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அமெரிக்கா இன்னமும் வழங்கவில்லை. மற்ற நட்பு நாடுகளும் இந்த இடைவெளியை நிரப்ப போராடி வருகின்றன.
எனவே யுக்ரேன் தனது ஆயுதங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்து விட்டது.
ஆனால் யுக்ரேன் எதிர்பார்த்தபடி, அவ்திவ்கா மட்டுமே பின்வாங்கும் இடமாக இருக்காது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒட்டுமொத்த யுக்ரேனும் தேவைப்படுகிறது. அதை அவர் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த வாய்ப்பு மேற்கத்திய ஒற்றுமையின் மூலம் தகர்ந்தும் போகலாம் அல்லது அசாதாரண திறமையை கொண்டுள்ள போதிலும் யுக்ரேன் இந்த போரில் வெற்றி பெறாது என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தலாம் என்பதே தற்போதைய ரஷ்ய-யுக்ரேன் போரின் நிலை.