கடந்த ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ படையினர் ஹமாஸ் அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய இராணுவம் தேடி வருகின்றனர்.

இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை விநியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

ஒரு சில இடங்களில் வாகன சாரதிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்கம் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

உணவு விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம். விரைவில் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும். இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply