கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.
அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன. கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்வதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
கோட்டாவை பதவியில் இருந்து வெளியேற்ற எவரும் சதி செய்யவில்லை.ஏனெனில் சதி ஊடாகவே அவர் பதவிக்கு வந்தார்.
கோட்டபய ராஜபக்ஷவின் முட்டாள்தனமான நிர்வாகத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்ட எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின்விநியோக துண்டிப்பு ஆகியவற்றை பார்த்துக்கொண்டு மக்கள் கைகட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள்.
நெருக்கடிகளை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ மக்களால் வெளியேற்றப்பட்டால் என்பதே உண்மை.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.
ஏனெனில், கொவிட் பெருந்தொற்று இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை விட பொருளாதார பின்னடைவில் இருந்த நாடுகள் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தன.
கொவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையை கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தோற்றுவித்தது.
கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு தாமதப்படுத்தப்பட்டு தம்மிக்க பாணிக்கு முன்னுரிமை வழங்கியமை, கொவிட் மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள்.
கோட்டபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே கடந்த காலம் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ புத்தகம் எழுதுவது பயனற்றது என்றார்.