சிரியாவில் இரான் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து தாக்கியதா இஸ்ரேல்? இரான் என்ன செய்யப் போகிறது?
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இரானின் உயரடுக்கு குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேடி, மற்றும் அவரது துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி ரஹிமி ஆகியோரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரான் மற்றும் சிரியாவின் அரசாங்கங்கள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இத்தாக்குதல் சிரியாவிலுள்ள இரானிய தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தை முழுவதும் அழித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் ‘வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை’ என தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
திங்களன்று (நேற்று, ஏப்ரல் 1) இந்திய நேரப்படி மாலை சுமார் 07:30 மணியளவில் (14:00 GMT) டமாஸ்கஸின் மேற்கிலிருக்கும் மெசே மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் இருந்த இரானிய தூதரகக் கட்டடத்தை இஸ்ரேலிய விமானம் குறிவைத்ததாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர். ஆனால் மற்ற ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி ‘முழு கட்டடத்தையும் அழித்து, உள்ளே இருந்த அனைவரையும் காயப்படுத்தி விட்டதாக’ சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களின் பெயர் ஆகிய தகவல்களை குறிப்பிடவில்லை.
சிரியாவில் இரானிய தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
கொல்லப்பட்ட இரானின் மிக உயரிய அதிகாரி
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடிந்து விழுந்த ஒரு பல மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து புகை மற்றும் தூசி எழுவதைக் காட்டியது. அடுத்துள்ள இரானிய தூதரகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இரானிய தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலிய F-35 போர் விமானங்கள் ‘தான் வசிக்கும் இடத்தையும், தூதரகத்தின் தூதரகப் பகுதியையும் குறிவைத்தன’ என்றார். சில தூதர்கள் உட்பட ஐந்து முதல் ஏழு பேர் வரை கொல்லப்பட்டதாக அவர் இரானிய அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
பின்னர், இரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அதன் அதிகாரிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ‘தளபதிகள் மற்றும் மூத்த இராணுவ ஆலோசகர்களான’ பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேதி மற்றும் பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி-ரஹிமி ஆகியோரும் அடங்குவர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
63 வயதான ஜாஹேதி, இரான் ராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில மூத்த அதிகாரியாகவும், 2008 மற்றும் 2016-க்கு இடையில் லெபனான் மற்றும் சிரியாவில் தளபதியாகவும் பணியாற்றியதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஜாஹேதி, இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மிக முக்கியமான இரானிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இரான் என்ன செய்யப் போகிறது?
இந்தத் தாக்குதலில் குட்ஸ் படையின் உயர்மட்டத் தலைவர், இரானிய ஆலோசகர்கள் இருவர், மற்றும் இரான் ராணுவத்தின் ஐந்து உறுப்பினர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தில் இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பு சிரியாவில் களத்திலிருந்து தகவல் சேகரித்துத் தருபவர்களைக் கொண்டு பணியாற்றுகிறது.
சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத், இந்தத் தாக்குதலை ‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விமர்சித்தார். மேலும் இது ‘பல அப்பாவி மக்களை’ கொன்றதாகவும் கூறினார்.
அவருடனான தொலைபேசி உரையாடலில், இரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இந்த தாக்குதலை ‘அனைத்து சர்வதேச கடமைகள் மற்றும் மரபுகளை மீறய செயல் என்று குறிப்பிட்டார். மேலும் ‘இந்தத் தாக்குதலில் விளைவுகள் இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச ஆட்சியினால் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்’ என இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ‘சர்வதேச சமூகம் சரியான பதிலடி கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்’, என்று இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் இரானிய தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
இஸ்ரேலின் முந்தைய தாக்குதல்கள்
சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் ஒப்புக்கொடுள்ளது. இவை இரான் ராணுவம் பயிற்சியளிப்பதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்படவை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்புலா நடத்திய தாக்குதலுக்கும், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவுக் குழுக்கள் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கும் இது பதிலடி எனக் கூறப்படுகிறது.
ஆனால் திங்கட்கிழமை (ஏப்ரல் 1) இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதல் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது.
இரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் உறுதியை இஸ்ரேல் சோதிப்பது போல் தெரிகிறது. தங்கள் எதிரிகள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதில் இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஒரு பதிலடி இருக்கும். ஆனால் அது பொதுவாக எதிர்பார்க்கப்படும்படி ஏவுகணைத் தாக்குதலாக இருக்காது, ஒருவித சைபர் தாக்குதலாக இருக்கலாம்.
தொடர் தாக்குதல்கள்
இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிந்திருந்ததாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் உள்ள கடற்படைத் தளத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் ‘மிகவும் தீவிரமான சம்பவம்’ என்றார். அந்த ட்ரோன் ‘இரானால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது’ என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளியன்று டமாஸ்கஸ் மற்றும் வடக்கு சிரியாவின் நகரமான அலெப்போ மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈலாட்டில் தாக்குதல் நடந்தது.
அதில் 38 சிரிய வீரர்கள் மற்றும் இரான் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்புலாவின் ஏழு உறுப்பினர்கள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியது.
கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் மெஸ்ஸேவில் நடந்த மற்றொரு தாக்குதல் ஐந்து மூத்த இரானிய அதிகாரிகளையும் பல சிரிய பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்றது.
இரானின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து சிரியாவில் தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் முன்பு ஒப்புக்கொண்டது.
சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு ‘ஆலோசனை வழங்க’ தனது ராணுவத்தினரை அனுப்பியதாக இரான் கூறியது. மேலும், அவர்கள் போரில் ஈடுபடவில்லை என்று இரான் கூறியது.