ilakkiyainfo

ஈஸ்டர் படுகொலை..!கோமாவில் இருந்து விழித்த சிறிசேனவும் அரசியல் பின்னணியும்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அணியைச்சேர்ந்தவருமான பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேனா மூன்று வாரங்களுக்கு முன்னர் அவசர, அவசரமாக அமெரிக்கா சென்று திரும்பியிருக்கிறார். எந்த சலசலப்பும் இன்றி இந்த இரகசிய(?)பயணம் அமைந்திருந்தது.

நாடு திரும்பிய பின்னர், இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21..) நடந்து ஐந்து ஆண்டுகளை எட்டுவதற்கு இன்னும் ஒருமாதம் இருக்கையில் சிறிசேனாவுக்கு சுயநினைவு வந்திருக்கிறது. இதுவரை கோமாவில் இருந்தவர் போன்று திடீர் ஞானம் பெற்றிருக்கிறார்.

“ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகள் யார்? என்பது எனக்கு தெரியும். மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கு இது தெரியவந்தது.

இது பற்றிய தகவல்களை பகிரங்கமாக வழங்குவது எனதும், எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. இரகசியமாக தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க நான் தயார் “என்ற அடிப்படையில் அவர் பொது வெளியில் கருத்து வெளியிட்டிருந்தார். அதுவும் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் முதலில் கண்டியிலும், பின்னர் பொலநறுவையிலும்………

இதில் வேடிக்கை என்னவென்றால் தானே பகிரங்கமாக பொதுவெளியில் அறிவித்து விட்டு பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறுவதும்…. இரகசியமாக வழங்க தயார் என்பதும்.

அவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மகிந்த ராஜபக்ச, சஜீத்பிரமதாச, மனோ கணேசன், சிவநேசதுரை சந்திரகாந்தன் , அனுரகுமார போன்ற கட்சி தலைவர்களினதும், சட்டத்துறை சார்ந்தவர்களின் அழுத்தம் காரணமாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சாட்சியம் அளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

சிறிசேனாவின் இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச “சதி” என்ற நூலை வெளியிட்டு இருந்தார் என்பதும். சிறிசேனா பொலநறுவையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய நேரம் இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல் : இன மத நல்லிணக்கம் அறிதலும், புரிதலும் என்ற நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த இரு நூல்களும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவின் தலைமைத்துவ பலவீனங்களை கேள்விக்கு உட்படுத்தவாய்ப்புண்டு (?).

முன்னாள் ஜனாதிபதியின் சாட்சியம் இரகசியமானது. இது பற்றி ஊடகங்களுக்கு பெரிதாக “கசிவதற்கு” வாய்ப்பு குறைவு. எனினும் ஊடகச் செய்திகள் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளது என்ற விடயத்தைமட்டுமே பேசுகின்றன.

இதில் புதிதாக தேடுவதற்கு ஒன்றும் இல்லை. குண்டுத்தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்னரே இந்திய புலனாய்வுத்துறை இந்த தகவலை இலங்கைக்கு அறிவித்துவிட்டது.

பின்னணியா? அல்லது முன்னணியா என்பதற்கு அப்பால் இந்த தாக்குதல் தகவல்கள் இந்தியாவுக்கு தெரிந்திருந்தது என்பதும், இதன் அடிப்படையிலான சந்தேகத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த சந்தேகம் இருக்கிறது என்பதும் கடந்த ஐந்து வருடங்களாக தெரிந்த விடயம்.

இதை இப்போது, இந்தியாவிலும், இலங்கையிலும் தேர்தல்தல்கள் நெருங்குகின்ற காலப்பகுதியில் அதுவும் அமெரிக்க பயணத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன பேசுபொருளாக்கியிருப்பதன் அரசியல் பின்னணி என்ன?

இத்தனைக்கும் இந்திய உளவுத்துறையின் தகவல்களை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படைகளின் தளபதியாக அலட்சியம் செய்தது “சிறிசேனா”என்ற இந்த அரசியல் அதிகார பீடம் தானே.

முன்னாள் ஜனாதிபதியாக அவர் ஏற்கனவே இத்தாக்குதல்கள் குறித்தும் சாட்சியமளித்துள்ளார்.

தகவல்கள் கிடைத்தும், அதிகாரங்கள் அனைத்தும் இருந்தும் மக்களை பாதுகாக்க முடியாத இந்த முன்னாள் ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கக்கூடிய (?) இந்த வாய்ப்பையும் விடவும் தனது குடும்பத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

இவருக்கு ஒரு கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதியாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இவை எல்லாவற்றையும் விடவும் ஒரு சிங்கள, பௌத்த தலைவராக இருக்கின்ற பாதுகாப்பு உத்தரவாதம் இந்த நாட்டில் எந்த பொதுமகனுக்கு இருக்கிறது?

இனி சிறிசேனவின் முதுகுப்பக்கம்…..!

ஈஸ்டர் தாக்குதல்களை தோண்டுவதன்மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நீதி கிடைக்கிறதோ என்னவோ? ஆனால் இந்திய, இலங்கை அரசியலில் ஏற்படப்போகின்ற தாக்கங்கள் அமெரிக்காவுக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

இந்தியாவிலும், இலங்கையிலும் தம்மோடு ஒத்தோடக்கூடிய அரசியல் தலைமைகளை ஏற்படுத்தவும், அதன்மூலம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் பலத்தை குறைக்கவும் அமெரிக்கா முற்படுகிறது. இந்த பூகோள அரசியல் சுழற்சியில் சிக்கி இருக்கிறார் சிறிசேனா.

எதிரும்,புதிருமாக இருந்த ஜே.வி.பி. தலைமையை இந்தியா அழைத்து பேசியது அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். இலங்கையின் தேர்தல்களில் இந்தியா “சும்மா இருப்பதே சுகம்”என்று இருக்கப்போவதில்லை என்பதும் அமெரிக்காவுக்கு தெரியாததல்ல. இதனால் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக தனக்கு விருப்பமான ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அமெரிக்கா தேடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நேரடியாக ராஜபக்சாக்களும், அனுரகுமாரவும் பொருத்தமானவர்கள் அல்ல.

சஜீத்பிரேமதாசவை ஒரு பலமான வேட்பாளராக அமெரிக்கா இன்னும் அடையாளம் காணவில்லை. இது காலிமுகத்திடல் காலம் முதல் அது கற்றுக்கொண்ட பாடம்.

அப்படியென்றால் யாரை மடக்கலாம்…?

யாருக்கு வெற்றிக்கான நிகழ்தகவு அதிகம்….?

அதற்கு செய்யவேண்டியது என்ன….?

இதற்கான திட்டத்தை அமெரிக்கா தயாரித்து விட்டது.

மடக்கக்கூடியவர்: சிறிசேனா.

வெற்றி வாய்புள்ளவர்: ரணில் விக்கிரமசிங்க.

செய்யவேண்டியது: நல்லாட்சி பங்காளித்தலைமைகளை மீண்டும் ஒன்றிணைப்பது.

இதைச் செய்தால் தமிழ்த்தேசியக் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும், மலையகக்கட்சிகளும் முண்டியடித்து ரணிலுக்கு ஆதரவளிக்கும். இதுவே அமெரிக்க நகர்வு. தமிழ்த்தரப்பு பொதுவேட்பாளர் காற்றில் பறந்து விடுவார்.

அதற்கு சிறிசேனா செய்யவேண்டியது என்ன? என்பது அவரின் அமெரிக்கவிஷயத்தின் போது வகுப்பெடுக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமானது ராஜபக்சாக்களின் இமேஜ்ஜை சிதைப்பது. அதற்கு ஒருவழி ஈஸ்டர் தாக்குதலை தோண்டுவது.

சிறிசேனாவின் பலவீனத்தை மறைக்க தாக்குதலுக்கு அவரை சாட்சியாக்குவது. தாக்குதலில் இந்தியாவின் தொடர்பை வெளிப்படுத்துவது. அமெரிக்காவில் சிறிசேனா படித்த பாடத்தின் விளைவே ஈஸ்டர் தாக்குதலின் மீள் சாட்சியம். இதன் மூலம் மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாய்ப்பே இல்லாமல் செய்வது.

சஜீத்பிரேமதாசவுக்கும் மொட்டு அணியில் இருந்து அதிதிருப்தியில் வெளியேறி எதிரணியில் இருக்கும் தளஸ் அழகப்பெரும-பீரிஷ் அணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு -பதவிப்பங்கீட்டை பயன்படுத்தி , சிறிசேனா ஊடாக ரணில் பக்கம் இழுப்பது. ஆக, ஒட்டு மொத்தத்தில் ராஜபக்சாக்களையும், சஜீத்பிரேமதாசவையும் தனிமைப்படுத்தி ரணிலைப்பலப்படுத்துவது.

வெற்றி பெறக்கூடிய ஒரே வேட்பாளர் ரணில் என்றால் ஜே.வி.பி.யின் நடுத்தர வகுப்பு வாக்குகளை ரணில் பக்கம் திருப்புவது இலகுவானது.

தமிழ்த்தேசிய கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் உடன்பாடு காண்பது முயற்கொம்பு.

இந்த நிலையில் அவர்கள் எடுக்கக் கூடிய மிக இலகுவான முடிவு வேறுவழியின்றி ரணிலை ஆதரிப்பதாக அமையும். ஈ.பி.டி.பி, ரீ.எம்.வி.பி. வியாழேந்திரனின் தமிழர் முற்போக்கு கட்சி என்பனவும் ரணிலை ஆதரிப்பதற்கே அதிகம் வாய்ப்புண்டு.

இன்னும் பதில் கிடைக்காத ஒரு கேள்வி யார்? பிரதமர் என்பதுதான்.

இந்த இடைவெளியை தமிழ், முஸ்லீம் தரப்பு பயன்படுத்துமா…..? இல்லை டக்ளஸும், பிள்ளையானும், வியாழேந்திரனும் உள்ள அணி “தூய்மை” அற்றது என்று அறப்படித்து காடிப்பானைக்குள் விழப்போகிறார்களா….?.

ஏனெனில , தேர்தல் காலம் என்பதால் மீண்டும்”தூய்மை” அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது.

இது ரேலோவுக்கும், புளோட்டுக்கும் , ஈ.பி.ஆர்.எல்.எப்.புக்கும் வைக்கப்படும் மற்றோரு ஆப்பு!

அவர்களின் வார்த்தைகளில் ….,தேர்தல் கால பொறிமுறை!

— அழகு குணசீலன் —

 

Exit mobile version