விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கட் சங்க விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 16ஆவது போட்டியில் சரமாரியாக ஓட்டங்களைக் குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 106 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸை வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களைக் குவித்தது.

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வருடம் மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் குவிக்கப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையான 277 ஓட்டங்களைவிட 5 ஓட்டங்கள் குறைவாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்தது.

சுனில் நரேன், இம்ப்பெக்ட் வீரர் ஆங்க்ரிஷ் ரகுவான்ஷி, அண்ட்றே ரசல், ரின்கு சிங் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்தது.

சுனில் நரேன் இரண்டு இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை சிறந்த நிலையில் இட்டார்.

பில் சோல்ட், சுனில் நரேன் ஆகிய இருவரும் 27 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பீல் சோல்ட் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சுனில் நரேன், ஆங்க்ரிஷ் ரகுவான்ஷி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

39 பந்துகளை எதிர்கொண்ட சுனில் நரேன் 7 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 70 ஓட்டங்கள் பவுண்டறிகள் மூலம் பெறப்பட்டிருந்தது.

மறுபக்கத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆங்க்ரிஷ் ரகுவான்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

அதன் பின்னர் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ((18), ரிக்கு சிங் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ரிக்கு சிங் 8 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 28 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் அன்றிச் நோக்யா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இஷாந்த் ஷர்மா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

274 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ப்ரித்வி ஷா (10), மிச்செல் மார்ஷ் (0), இம்பெக்ட் வீரர் அபிஷேக் பொரெல் (0) டேவிட் வோர்னர் (18) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் 33 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் ரிஷாப் பான்ட், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் வேகமாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தனர்.

ரிஷாப் பான்ட் 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

பந்துவீச்சில் இம்ப்பெக்ட் வீரர் வைபாவ் அரோரா 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Share.
Leave A Reply