தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொழும்பு அரசியலில் தேர்தலுக்கான வியூகங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தரப்பு எப்போதும் மந்தமாக இருப்பதே வழமை. ஏனென்றால், எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற முடியாது.
75 ஆண்டு ஜனநாயக வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அதிகமாக இனவாதத்தில் ஊறியிருக்கின்ற நாடு இலங்கை.
தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சிங்கள மக்களிடமும் இல்லை. சிங்களத் தலைமைகளிடமும் இல்லை.
பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியரான மன்மோகன் சிங்கும், இந்தர் குமார் குஜ்ராலும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களான சந்திரசேகரும், தேவகௌடாவும், ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவும் இந்தியாவின் பிரதமராக வர முடிந்தது.
ஆனால், இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு அருகில் கூட தமிழர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்திருந்தும், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலான தருணங்களில் தமிழர்கள் பேரம் பேசுவதற்கான வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும்.
எந்தவொரு அலையும் வீசாத தேர்தல்களில், தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியமானவை. தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு காரணமாக இருப்பவை.
சமநிலையில் வேட்பாளர்களின் செல்வாக்கு இருக்கின்ற போது, அல்லது, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறக் கூடிய நம்பிக்கை இல்லாத போது, சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழர்கள் தான் தேவைப்படுவார்கள்.
எனவே, தமிழ் வாக்குகளை வளைப்பதற்கு சிங்கள வேட்பாளர்கள் அல்லது கட்சிகள், தமிழ்த் தரப்பை அணுகுவது வழமை.
அவ்வாறான நிலையில் தான் ஜனாதிபதி தேர்தல் எப்போதும் தமிழ் அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும்.
ஆனால், இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஏற்கனவே ஒரு சலசலப்பு உருவாகி விட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் மத்தியில், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் காணப்படுகிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தேர்தல் புறக்கணிப்பு ஒன்றைத் தான் ஜனாதிபதி தேர்தலுக்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது.
அதனால், அந்தக் கட்சி, தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம், இந்தியா விரும்புகின்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகம் என்றே விமர்சித்து வருகிறது.
ஏனைய தமிழ்க் கட்சிகள் மத்தியில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான எண்ணக்கருக்கள் காணப்பட்டாலும், அதனை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.
போருக்குப் பின்னரான, 15 ஆண்டுகளில் தமிழர்கள் எல்லாத் தரப்பினராலும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், அரசியல் தீர்வோ, அதிகாரப் பகிர்வோ, போர்க்கால சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறலோ, நீதியோ கிடைக்காத நிலையில், தமிழர்களின் பலத்தை மீண்டும் வெளிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை கையாள வேண்டும் என்ற கருத்து தமிழ் அரசியல் பரப்பில் மாத்திரமன்றி, தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளது.
தமிழர்களின் அரசியல் விருப்பும், கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படும் நிலையில் எதிர்காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இவ்வாறான ஒரு நகர்வு தேவை என்று பரவலாக உணரப்படுகிறது.
இத்தகைய கட்டத்தில் தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற வியூகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த அடிக்கல்லைக் கொண்டு, வீட்டைக் கட்டப் போகிறோமா அல்லது வணிக கட்டடம் ஒன்றை அமைக்கப் போகிறோமா என்ற தீர்க்கமான முடிவு தமிழர் தரப்பிடம் இல்லை. இது முக்கியமானதொரு குறைபாடு.
அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் அரசியல் பரப்பில், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் என்று பலர், கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல, வேறு சில தரப்புகளும் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முயற்சிகள், கருத்தமர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.
இது தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது.
ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் திட்டத்துக்குப் பின்னால் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் இலக்கு என்ன என்பதில், எல்லாத் தரப்பினரிடமும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றே தெரிகிறது. இவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்கள் அனைத்தும், அத்தகையதொரு புரிதலையே உருவாக்குகின்றன.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது, வெற்றி பெறுவதற்கான ஒரு திட்டம் அல்லது முயற்சி அல்ல. வெற்றி கிடைக்காது என்று தெரிந்திருந்தும், போட்டியில் குதிக்கும் ஒரு அரசியல்.
தோல்வியடைவோம் என்று தெரிந்து கொண்டே போட்டியில் இறங்குவது, இன்னொரு வெற்றியை பெறுவதற்கான வியூகம்.
ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனாலும், அது தமிழர்களுக்கு வெற்றியாக அமைய வேண்டும். தமிழர்களுக்கான வெற்றியாக மாற்றப்பட வேண்டும். இது தான் முதன்மையானது.
2010 ஜனாதிபதி தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வரலாற்றுத் தவறை இழைத்தது. தமிழர்களை மீள முடியா துன்பத்திலும், அரசியல் பின்னடைவிலும் சிக்கவைத்த இறுதிக் கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக ஏற்றுக் கொண்டது.
மஹிந்தவை தோற்கடிப்பதற்கான வியூகம் என்று கூறிக் கொண்டு, அந்த வரலாற்றுத் தவறு இழைக்கப்பட்டது.
போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சரத் பொன்சேகா, அண்மையில் கூட ஒரு செவ்வியில், “2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் எனக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அதுவும் போர் முடிந்து குறுகிய காலப்பகுதிக்குள் அந்த வாக்குகள் கிடைத்தன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 85 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. வடக்கு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது” என்று கூறியிருந்தார்.
பெரும் அழிவுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றைக்கு எடுத்த தவறான முடிவைப் பயன்படுத்தி, தன்னை அந்த வரலாற்றுப் பழியில் இருந்து விடுவித்துக் கொள்ள முற்பட்டிருக்கிறார்.
இதற்கு யார் பொறுப்பு- தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். எனவே, வரப்போகும், ஜனாதிபதி தேர்தலை தமிழ்த் தரப்புகள் கவனமாக கையாள வேண்டும். அதனை அணுகும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை, தீர்க்கமான உத்திகளை வகுக்க வேண்டும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது, தமிழர்களின் பிரச்சினையை வெளியுலகத்துக்கு கொண்டு வருவதற்கா அல்லது சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கா என்று முக்கியமாக தீர்மானிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை உள்ளது. இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதிகாரங்கள் பகிரப்படவில்லை. அபிலாஷைகள் தீர்க்கப்படவில்லை. உரிமைகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை வெளியுலகத்துக்கு மீண்டும் எடுத்துச் சொல்வதற்கான ஒரு வழியாக இந்த தமிழ்ப் பொது வேட்பாளரை பயன்படுத்தலாம்.
ஆனால்,இதற்கு தமிழ் மக்கள் ஒருங்கிணைக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செயற்பட்டு, அவமானப்படும் நிலை ஏற்படக் கூடாது. தமிழர்களின் வாக்குகள் ஒன்று குவிக்கப்படுவதன் மூலம் தான், அதனைச் சாதிக்க முடியும்.
1977 பொதுத் தேர்தல், வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான அங்கீகாரமாக பயன்படுத்தப்பட்டது இவ்வாறான ஒரு அணுகுமுறையில் தான்.
அதே அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்கு தமிழ்க் கட்சிகள் மத்தியில் உள்ள அர்ப்பணிப்பு நிச்சயம் கேள்விக்குட்படுத்த வேண்டியது.
உள்ளக குழப்பங்களும், கட்சி அரசியல் பிளவுகளும் தமிழ்க் கட்சிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுநிலை நோக்குடன் அவர்கள் அர்ப்பணித்துச் செயற்படுவார்களா என்ற கேள்வி இருக்கிறது.
அடுத்து, ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் போது, சிங்களத் தரப்புகள் பேரம் பேச வரும். தேர்தலுக்கு முன்னரும் இந்தப் பேரங்கள் வரும். ஒருவேளை 50 சதவீத வாக்குகள் கிடைக்காது போனாலும் பேரம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த அரசியல் பேரத்தை தான், பெரும்பாலும் தமிழ்க் கட்சிகள் தங்களின் இலக்காக கொண்டிருக்கின்றன போலத் தெரிகிறது.
பொது வேட்பாளரின் நோக்கம், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை தயார் செய்யவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறான அரசியல் பேரங்களில் தமிழ்த் தரப்பு இதற்கு முன்னரும் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் எதிலும் வெற்றி கிட்டவில்லை.
ஆனாலும், அந்த பேரத்தையே பலரும் அதிகம் நம்புகிறார்கள். இது ஒரு வணிகம் போலத் தான். கொடுத்து வாங்குகின்ற உத்தி.
சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, போன்றவர்களுடன் இந்த கொடுக்கல் வாங்கல் உத்தி கையாளப்பட்டது.
அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் தமிழர்களின் வாக்குகள் பெற்றுக் கொடுக்கப்பட்டனவே தவிர, தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சரத் பொன்சேகா போன்றவர்களால் இது எதிர்மறையான பிரசாரங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தமிழ்ப் பொது வேட்பாளருக்கான உத்தி என்பது மேன்போக்கானதாக இருக்கக் கூடாது. அது தமிழர்களின் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
வீடா – வணிக வளாகமா என்பதை தீர்மானிப்பதில், இழைக்கப்படும் எந்த தவறும் தமிழர்களை இன்னொரு பின்னடைவுக்குள் தள்ளிவிடக் கூடாது.
இதனைச் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள், வரலாற்று ஓட்டத்தில் தமிழர் தரப்பை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்ற நிலைக்கு கொண்டு வந்து விடக் கூடாது.
– கபில்-