இஸ்லாம் வரலாற்றில் ரமலான் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

இவற்றில் மிக முக்கியமான நிகழ்வு ‘ஃபதா-இ-மெக்கா’ (மெக்கா வெற்றி). அதன் பிறகு அரேபிய தீபகற்பம் ஒன்றிணைந்தது. இஸ்லாம் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே பரவியது.

இஸ்லாத்தை பரப்புவதில் மெக்கா வெற்றியின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன், இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மெக்காவுக்கு இருந்த முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம்.

இஸ்லாத்திற்கு முன் மெக்கா எப்படி இருந்தது?

மெக்கா இன்று அரேபியாவின் மைய நகரமாகவும் இஸ்லாமிய உலகின் மத மற்றும் ஆன்மீக மையமாகவும் உள்ளது.

ஹாலந்தின் புகழ்பெற்ற ஓரியண்டலிஸ்ட் (கிழக்கத்திய கலாசாரத்தை ஆராய்ச்சி செய்பவர்) டோஸி, மெக்காவின் வரலாறு ஹஸ்ரத் தாவூத் காலத்திலிருந்தே தொடங்குகிறது என்று குறிப்பிடுகிறார்.

இந்நகரம் தோரா (யூதர்களின் புனித நூல்) மற்றும் பைபிள் ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, ஹஸ்ரத் இப்ராஹிம் (ஆபிரகாம்) எகிப்திலிருந்து பாலத்தீனத்திற்கு வந்த போது, அவர் மெக்கா நோக்கிச் செல்லும்படி கட்டளையிடப்பட்டு, தனது மனைவி ஹஜ்ரத் ஹஜ்ரா மற்றும் மகன் ஹஸ்ரத் இஸ்மாயிலுடன் மெக்காவிற்கு வந்தார். அங்கு, அவர் கானா-இ-காபாவின் அடித்தளத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது.

கானா-இ-காபா ஒரு பழங்கால கட்டிடத்தின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. அது அந்நிலத்தில் கட்டப்பட்ட முதல் கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக, மக்கள் இங்கு வந்தால் அவர்களது விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஹஸ்ரத் இப்ராஹிம் அதே கட்டடத்தின் அடித்தளத்தில் கானா-இ-காபாவை மீண்டும் கட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் புனிதமாகக் கருதப்படும் மாதங்களில் மக்கள் அங்கு குவிந்தபோது மக்காவின் முக்கியத்துவம் வலுவடைந்தது

முக்கிய நகரமாகத் திகழ்ந்த மெக்கா

அரேபிய பள்ளத்தாக்கில் வசித்த மக்கள் எப்போதும் தங்களை அல்-அரபு அல்லது அரேபிய தீபகற்பத்தில் வசிப்பவர்கள் என்று அழைத்துக் கொண்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை.

இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் பெதுவான்கள் (Bedoin) என்று அழைக்கப்படும் பாலைவன நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இஸ்லாத்திற்கு முந்தைய சமுதாயத்தில், பெதுவான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல கும்பல்களாக அல்லது இனக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு ஆட்சி முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘இஸ்லாமிய வரலாறு’ என்ற புத்தகத்தின்படி, இஸ்லாத்திற்கு முன், சிறிய நகர்ப்புற அமைப்புகள் அங்கு இருந்தன. ஆனால் அது அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைந்த பகுதி அல்ல.

ஆனால், இஸ்லாத்தின் இறைத்தூதுவரான முகமது நபி பிறப்பதற்கு முன்பே, மெக்கா வணிகத்தின் முக்கிய மையமாக மாறியது மற்றும் மைய நகரம் என்ற அந்தஸ்தை அடைந்தது. கேம்பிரிட்ஜின் ‘இஸ்லாமிய வரலாற்றின்’ படி, பெர்சியா மற்றும் ரோம் சுல்தான்கள் நீண்ட போர்களால் பலவீனமடைந்து வந்த அதே நேரத்தில், மெக்கா வலுவடைந்து வந்தது.

மெக்காவின் மற்றொரு முக்கியத்துவம் பைத்துல்லாஹ் (அல்லாஹ்வின் வீடு, காபா). குரைஷ் பழங்குடியினரின் வணிகக் கூட்டத்தினர் யேமனில் இருந்து சிரியாவுக்குச் சென்று பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலமான பொருட்களைக் கொண்டு வந்து மெக்காவில் வியாபாரம் செய்து வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மெக்காவில் ஒரு பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்கள் தவிர, அடிமைகளும் வியாபாரம் செய்யப்பட்டனர்.

கேம்பிரிட்ஜின் ‘இஸ்லாமிய வரலாறு’ படி, ஒவ்வொரு ஆண்டும் புனிதமாகக் கருதப்படும் மாதங்களில் மக்கள் அங்கு குவிந்தபோது மெக்காவின் முக்கியத்துவம் வலுவடைந்தது.

மெக்காவாசிகளின் விருந்தோம்பல் பிரபலமானது. அவர்கள் தங்களது விருந்தினர்களை ‘பைத்துல்லா’வின் விருந்தினர்களாகக் கருதி இயன்ற அனைத்து சேவைகளையும் செய்து வந்தனர். விருந்தினர்களும் மெக்கா மக்களை மதித்தனர்.

மக்காவிற்கு ஒன்பது மைல் தொலைவில் உள்ள ஹுதைபியா என்ற இடத்தை முகமது நபி அடைந்தார்

இஸ்லாம் எதிர்ப்பின் மையமாக திகழ்ந்த மெக்கா

மதீனாவில் ஹிஜ்ரத் (தஞ்சம்) அடைந்து பிறகு, மெக்கா மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மூன்று போர்களை நடத்தினர்.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தின் மையம் மெக்கா, அங்கு இருந்த குரைஷ் சமூக மக்கள்.

இத்தகைய சூழ்நிலையில், ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு (கி.பி. 628) ஜுல்கதா மாதத்தில் (இஸ்லாமிய நாட்காட்டியின் பதினோராவது மாதம்) முகமது நபி தம் தோழர்களுடன் கானா-இ-காபா மற்றும் உம்ராவை (ஹஜ்) ஸியாரத் (தரிசனம்) செய்ய மெக்கா சென்றார்.

அவர் அஹ்ராம் (சிறப்பு உடைகள்) அணிந்து சென்றார். அஹ்ராம் அணிந்து ஒருவர் மெக்காவிற்கு வந்தால், அவரைத் தடுப்பதில்லை என்ற வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது.

மெக்காவிற்கு ஒன்பது மைல் தொலைவில் உள்ள ஹுதைபியா என்ற இடத்தை முகமது நபி அடைந்த பிறகு, ‘நாம் வந்ததன் நோக்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு செல்வதே. நாங்கள் யாருடனும் சண்டையிட வரவில்லை’ என்று மெக்காவின் குரைஷ் சமூகத்திற்கு செய்தி அனுப்பினார்.

இதைக் கேட்ட குரைஷ் சமூகத்தினர் உர்வா பின் மசூத் என்பவரை இஸ்லாமியர்கள் உம்ரா செய்வதைத் தடுக்க அனுப்பினர். ஆனால் அவர் அதில் வெற்றிபெறவில்லை.

பின்னர், ஹஸ்ரத் உஸ்மான் பின் அஃப்பான் (இஸ்லாத்தின் மூன்றாவது கலீஃபா) மெக்காவின் பிரபுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் முதலில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கொல்லப்படுவார் என்ற வதந்தி பரவியபோது, முகமது நபி அவரது தோழர்களுக்காகப் பழிவாங்க ஒரு சபதம் எடுத்தார். இது ‘பைத்-இ-ரிஸ்வான்’ என்ற பெயரில் அறியப்படுகிறது.

குரைஷ் சமூகத்தினருக்கு இது பற்றிய தகவல் கிடைத்ததும், அவர்கள் ஹஸ்ரத் உஸ்மான் பாதுகாப்பாக இருப்பதாக செய்தி அனுப்பினர். அவர் இந்த ஆண்டு திரும்பிச் சென்று அடுத்த ஆண்டு கானா-இ-காபா சென்று உம்ரா செய்ய வருவேன் என்று இஸ்லாமியர்களுக்கு உறுதியளிக்கிறார்.

குரைஷ் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், எந்த மோதலும் ஏற்படாமல் இருக்க மெக்காவில் இருந்து மூன்று நாட்கள் வெளியேறுவதாக உறுதியளித்தனர். இந்த முன்மொழிவுகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு அதில் மேலும் சில நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டன.

இது ‘சுல்-ஹுதைபியா’ அல்லது ‘ஹுதைபியா ஒப்பந்தம்’ என்று அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தன. ஆனால் குர்ஆனில் இந்த ஒப்பந்தம் ஃபதாஹ்-இ-முபீன் (தெளிவான வெற்றி) என்று அழைக்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் மக்காவிற்குள் நுழைந்தனர், இதனால் மெக்காவாசிகளின் தப்பிக்கும் பாதை மூடப்பட்டது

 

மெக்கா வெற்றி

ஹுதைபிய்யா உடன்படிக்கை முடிந்து ஒரு வருடம் கூட ஆகியிருக்காத போது, சில சம்பவங்கள் நடந்தன. அதனால் குரைஷி சமூகம் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

ரமலான் மாதம் 10-ஆம் தேதி, 8 வது ஹிஜ்ரி (கி.பி. 630), முகமது நபி தனது சஹாபாக்கள் (தோழர்கள்) 7,000 பேருடன் மதீனாவிலிருந்து மெக்காவிற்கு புறப்பட்டார். அப்பயணத்தின் போது, வேறு சில பழங்குடியினரும் அவர்களோடு இணைந்தனர். அதனால் வழியில் அவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ எட்டியது.

இக்குழு மெக்காவிற்கு பத்து மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் முகாமிட்டனர். இந்தப் பெரிய குழுவின் வருகை பற்றிய தகவல் கிடைத்ததும், மெக்காவின் குரைஷ் சமூகம் அவர்களின் தலைவர் அபு சுஃப்யான் ஹஸ்ரத், முகமது நபியிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இஸ்லாமியர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் மெக்காவிற்குள் நுழைந்தனர், இதனால் மெக்காவாசிகளின் தப்பிக்கும் பாதை மூடப்பட்டது.

சிலர் எதிர்க்க முயன்றபோது சுமார் 33-34 பேர் கொல்லப்பட்டனர். முகமது நபி 20-ஆம் ரமலான் அன்று (கி.பி. 630 ஜனவரி 11) கானா-இ-காபாவை அடைந்தார்.

இங்கு அவர் மெக்கா மக்களிடம் ஆற்றிய உரையில், “நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள். இன்று உங்களிடம் எந்தக் கேள்வியும் இல்லை. அல்லாவும் உங்களை மன்னிப்பானாக. அவர் மிகவும் இரக்கமுள்ளவர்,” என்றார்.

உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் மக்கா சென்று காபாவில் நமாஸ் செய்கிறார்கள்

இஸ்லாமின் மையமாக மாறிய மெக்கா

மெக்கா நகரின் வெற்றிக்குப் பிறகு, மக்களிடம் குரைஷிகள் பற்றிய பயம் நீங்கியது என்று டைரா மரீஃப்-இ-இஸ்லாமியா (இஸ்லாமிய கலைக்களஞ்சியம்) குறிப்பிடுகிறது. குரைஷிகள் தாமாகவே இஸ்லாத்திடம் சரணடைந்த போது, அரேபியர்கள் மற்றும் பழங்குடியினரின் பெரும் குழுக்கள் இஸ்லாத்துக்கு மாறத் தொடங்கினர்.

கேம்பிரிட்ஜின் ‘இஸ்லாமிய வரலாற்றின்’ படி, மெக்கா வெற்றி மற்றும் ஹுனைன் போரில் வெற்றி பெற்றதால், முஸ்லிம்களை எதிர்க்கக்கூடிய வலிமையான பழங்குடியினர் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அதனால் முகமது நபி அந்தப் பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த வழிகாட்டி என்ற பெருமையைப் பெற்றார்.

கேம்பிரிட்ஜின் ‘இஸ்லாமிய வரலாறு’ நூலின் படி, அரேபியர்கள் அதிகாரத்தை விரும்பினர். எனவே அவர்கள் திரளாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளத் துவங்கினர்.

இந்த வழியில், மெக்கா வெற்றி மூலம் அரபு பிராந்தியத்திற்கு ஒரு தலைவர் கிடைத்தார். இந்தத் தலைமை பழங்குடி விசுவாசம் அல்லது சமூக அந்தஸ்து அடிப்படையில் அல்லாமல், மதத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த அரபு போர் வீரர்கள், ஒரு மதத்தின் கீழ் ஒன்றுபட்டனர்.

‘இஸ்லாமிய வரலாற்றின்’ படி, இந்த வழியில் ஒரு சமூகம் உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு அமைதியை அனுபவித்தனர்.

மறுபுறம், பெர்சியா மற்றும் ரோம் நாடுகளின் வலுவான அரசர்கள் பலவீனமடைந்தனர். அரேபிய தீபகற்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் அரேபிய போராளிகளைத் தடுத்து நிறுத்த இந்தத் தொடர் வெற்றிகள் உதவியதாக இந்நூல் குறிப்பிடுகிறது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரபு குழுவிற்கு இஸ்லாத்தை பரப்ப உதவியது.

கேம்பிரிட்ஜின் ‘இஸ்லாமிய வரலாற்றில்’ மெக்காவைக் கைப்பற்றுவதற்கு முன்பே முஹம்மது நபி அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் ஒரு சிலரே இருக்கும் ஒரு காலம் வரும் என்று கணித்திருக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

‘இஸ்லாம் அரேபியர்களுக்கு பரவும். நாம் தீபகற்பத்தை விட்டு இராக் மற்றும் சிரியாவை நோக்கி செல்ல வேண்டும். மேலும், இதற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் செய்து, நிர்வாக திறன் உள்ளவர்கள் தேவைப்படுவர்’ என்று அவர் நினைத்திருக்கலாம்.

‘இஸ்லாமிய வரலாற்றின்’ படி, பெரிய அளவில் நீண்ட தூரம் பயணிக்கும் வணிக வண்டிகளை ஏற்பாடு செய்யும் திறமையும் அனுபவமும் கொண்ட இத்தகைய மக்கள் மெக்காவிலேயே இருந்தனர்.

இந்தப் புத்தகத்தின்படி, புதிதாக நிறுவப்பட்ட இஸ்லாமிய தேசத்தின் விரிவாக்கத்தை சாத்தியமாக்கிய பெரும்பாலான தளபதிகள் மற்றும் நிர்வாகிகள் ஹிஜாஸ் பிராந்தியத்தின் மூன்று நகரங்களுடன் மட்டுமே தொடர்புடையவர்கள். இதில் மெக்கா, மதீனா மற்றும் தைஃப் ஆகியவை அடங்கும்.

இப்படியாக மெக்கா வெற்றிக்குப் பிறகு புதிதாக இஸ்லாத்துக்கு மாறியவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் இஸ்லாம் மத போதனைகளை எங்கும் பரப்பிய சிந்தனையாளர்கள், முஜாஹித்கள், தளபதிகள், உலமாக்கள் எனப் பலரால் இரான், இராக், சிரியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளில் இஸ்லாத்தின் கொடி பறக்கத் தொடங்கியது.

முகமது நபியின் மரணத்திற்குப் பிறகு, மதீனா தலைநகரமாகவே தொடர்ந்தது. ஆனால் ஹஜ் பயணத்தின் காரணமாக, மெக்கா இஸ்லாமிய மத, ஆன்மீக மற்றும் கல்வி மையமாக இருந்தது.

பனு உமையாவின் காலத்தில், இஸ்லாமிய உலகின் மையம் மதீனாவிலிருந்து சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மக்கள் ஆன்மீகம் மற்றும் கல்விக்காக பயணம் செய்ததால் மக்கா மற்றும் மதீனாவின் முக்கியத்துவம் மாறாமல் இருந்தது.

இன்றும் உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் மெக்கா சென்று காபாவில் நமாஸ் செய்கிறார்கள்.

-BBC TAMIL NEWS-

Share.
Leave A Reply