மத்திய கிழக்கு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒட்டோமான் பேரரசு முதலாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்ட பின், அந்த பகுதி பிரிட்டனின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.

அதன் பின் அந்த பகுதியில் உள்ள பாலத்தீனத்தில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடியேறினர்.

பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, “தேசியப் பகுதி” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனிடம் ஒப்படைத்தன. அப்போது தான் இந்தப் பிரச்னை தொடங்கியது.

யூதர்களைப் பொறுத்தவரை அந்தப் பகுதி அவர்களுடைய பூர்வீக மண்ணாக இருக்கிறது. ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர். யூதர்கள் அங்கு குடியேறியதற்கு, பெரும்பான்மையாக இருக்கும் அரபு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஐரோப்பாவின் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த யூதப் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 – 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.

இஸ்ரேல் எப்போது உருவானது?

படக்குறிப்பு, 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

அதன் பின் யூதர்களுக்கும், அரபு மக்களுக்கும் இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் பகுதி மற்றும் அரபு மக்களின் பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. அப்போது ஜெருசலேம் சர்வதேச நகரமானது.

இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு மக்கள் தரப்பில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரபு மக்கள் இத்திட்டத்தை அமல்படுத்தவும் இல்லை.

இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட முடியாமல் தவித்த பிரிட்டன் ஆட்சியாளர்கள், 1948ஆம் ஆண்டு அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். இதையடுத்து யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதாக அறிவித்தனர்.

அதை பாலத்தீனத்தின் பெரும்பாலான மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.

போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது. ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது.

ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன.


படக்குறிப்பு, மேற்குக் கரையை ஆக்கிரமித்த இஸ்ரேல் அங்கு தொடர்ந்து குடியேற்றத்தை ஏற்படுத்திவருகிறது.

இஸ்ரேல் எந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தது?

1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரியாவின் கோலன் குன்றுகளின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.

ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

அப்படி அனுமதித்தால் இஸ்ரேல் யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.

இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது.

இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.

இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது.


படக்குறிப்பு, ஒரே வழிபாட்டுத் தலத்திற்கு யூதர்களும், அரபு மக்களும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

அல்-அக்ஸா என்ற வழிபாட்டுத் தலத்தின் முக்கியத்துவம் என்ன?

அல்-அக்ஸா மசூதி, மெக்கா மற்றும் மதீனாவிற்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மூன்றாவது புனிதமான இடமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், இது யூதர்களுக்கும் மிகவும் புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமை 1948 முதல் 1967 இல் நடந்த ஆறு நாள் போருக்கு முன் வரை ஜோர்டான் ஆட்சி செய்து வந்தது. இந்தப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் இந்த பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிறுவியது.

இருப்பினும், ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தளங்களைக் கண்காணிக்க ஜோர்டானுக்கு உரிமை கிடைத்தது.

யூதர்கள் மசூதி வளாகத்திற்குள் நுழையலாம் ஆனால் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம்

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார்.

இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன இட்மர் பென் கிவிரின் இந்த விஜயத்தை பாலத்தீனியர்கள் ஏற்கெனவே அங்கு நிலவிவரும் நிலையை மாற்றும் முயற்சியாகப் பார்க்கின்றனர்.

பாலத்தீனிய கிளர்ச்சிக் குழுவான ஹமாஸின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த விஜயத்தைத் தொடர்ந்து பென் கிவிர் “கோயில் அனைவருக்கும் திறந்திருக்கும். ஹமாஸின் அச்சுறுத்தல்களுக்கு எங்கள் அரசாங்கம் சரணடையாது,” என்று ட்வீட் செய்தார்.

அதே நேரத்தில், பாலத்தீனப் பிரதமர் முகமது ஷ்தேய்யே, இந்தச் சுற்றுப்பயணத்தை “மசூதியை யூதர்களின் கோவிலாக” மாற்றும் முயற்சி என்று வர்ணித்தார். எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இன்றி அந்தப் பயணம் நிறைவு பெற்றது.


படக்குறிப்பு, அல்-அக்ஸா மசூதியில் வழிபாடு செய்யும் நடைமுறையை மீறுவதால் அடிக்கடி பதற்றம் ஏற்பட்டுவருகிறது.

அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு ஏன் மிகவும் முக்கியமானது?

கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள இது யூதர்களின் மிகவும் புனிதமான இடமாகும். மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது மிகவும் புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

யூதர்களுக்கான ‘டெம்பிள் மௌண்ட்’ என்றும், முஸ்லிம்களுக்கு ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்றும் அழைக்கப்படும் இப்புனித தலத்தில் ‘அல்-அக்ஸா மசூதி’ மற்றும் ‘டோம் ஆஃப் தி ராக்’ ஆகியவையும் அடங்கும்.

‘டோம் ஆஃப் தி ராக்’ யூத மதத்தில் புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முஹம்மது நபியுடன் தொடர்பு இருப்பதால், ‘டோம் ஆஃப் த ராக்’ புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர்.

இந்த மத ஸ்தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரார்த்தனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வளாகம் ஜோர்டானின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நீண்ட காலமாக இங்கு முஸ்லீம்கள் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும். மேலும், முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது.


படக்குறிப்பு, ஹமாஸ் என்ற இயக்கம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக உருவான ஆயுதக்குழுவாகும்.

ஹமாஸ் அமைப்பின் வரலாறு என்ன?

ஹமாஸ் என்ற இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலத்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.

ஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச் செய்வது.

ஆனால் 2005-ஆம் ஆண்டில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் இயக்கம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியது.

2006-ஆம் ஆண்டு நடந்த பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. கூட்டணி அரசிலும் பங்கேற்றது. அதிபர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்தைப் பகைத்துக் கொண்டதால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு காசாவுக்குள் முடங்கியது.

அதன் பிறகு இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அடைபட்டிருக்கும் காசா பகுதிக்குள் ஹமாஸ் இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்காகவும் தாக்குதல்களைத் நிறுத்தவதற்காகவும் இஸ்ரேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் இயக்கத்தை முழுமையாகவும், சில நேரங்களில் அதன் ராணுவப் பிரிவை மட்டும் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய நாடுகள் பட்டியலிடுகின்றன.

 

Share.
Leave A Reply