எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் விடயத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவதற்குப் பின்னடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை உடைக்கின்ற முயற்சிகளில் வெளித்தரப்புகள் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.
தமிழ்மக்களின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் கருத்து நிலைப்பாடுகளை கேள்விக்குட்படுத்தி, அவற்றைக் குறைமதிப்புக்குட்படுத்தச் செய்வதற்கான முயற்சிகளில் இந்த சக்திகள் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.
யார் இந்த சக்திகள்- இவர்களுக்கு இதனால் என்ன இலாபம், ஏன் இதனைச் செய்ய முற்படுகிறார்கள், யாருக்காக இதனைச் செய்ய முனைகிறார்கள் போன்ற வினாக்கள் இத்தகைய தருணத்தில் எழுகின்றன.
வடக்கு, கிழக்கில் கிட்டத்தட்ட 11 இலட்சம் வரையான, தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை துல்லியமானதல்ல, இன்னும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் 11 இலட்சம் வாக்குகள் என்பது கணிசமானது. இந்த 11 இலட்சம் வாக்குகளையும் தங்களின் பக்கம் ஈர்ப்பதற்கு எல்லா தரப்புக்களும் முயற்சிக்கும்.
ஏனென்றால் ஜனாதிபதி தேர்தல், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெருக்கமான போட்டிகளை இருக்கும். அவ்வாறு நெருக்கமான போட்டிகள் உள்ள சூழலில் பலமான போட்டியாளர்கள் களம் இறங்கும்போது,வாக்குகள் சிதறிப் போகின்ற நிலை உருவாகும்.
அது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச வாக்குகளான 50.01 வீதமான வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருக்கும்.
எனவே தான், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் 11 இலட்சம் வாக்குகளை முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமாக தங்கள் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு பிரதான போட்டியாளர்கள் முற்படுவது வழக்கம்.
கடந்த காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில், நடந்த 3 ஜனாதிபதி தேர்தல்களில், வடக்கு, கிழக்கில் பெருமளவு மக்களால் ஆதரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாரோ ஒரு பிரதான வேட்பாளரை ஆதரித்தது.
இதன் ஊடாக கணிசமான வாக்குகள் குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைக்கின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை நிலைமை அவ்வாறு இல்லை.
கடந்த காலங்களில் பிரதான தமிழ் தேசிய அரசியல் தரப்பாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பெரும்பாலும் முடிவுகளை எடுத்தவர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் தான்.
அவர்கள் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசினார்கள். இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்கமைய குறித்த பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு தமிழ் மக்களை வழி நடத்தினார்.
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல் அளவில் இல்லை. இரா.சம்பந்தன் பாராளுமன்றத்துக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு மூப்பு சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் சுமந்திரன் மட்டுமே, பிரதான சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் அவரது அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை தமிழரசு கட்சிக்குள் முழுமையாக இல்லை.
இதனால் தமிழரசு கட்சியின் ஊடாக தமிழ் தேசிய வாக்காளர்களை பிரதான சிங்கள வேட்பாளர்களை நோக்கி திருப்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
அதேவேளை, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள், பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நிலைப்பாடு வலுவடைந்திருக்கிறது.
இதே போன்று, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஜனாதிபதி தேர்தலையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற இன்னொரு நிலைப்பாடும் காணப்படுகிறது.
இந்த இரண்டு நிலைப்பாடுகளும் தமிழ் மக்களால் கவனத்தில் கொள்ளப்படுபவை தான்.
இதில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துகின்ற, முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கு தமிழ் தேசிய அரசியல் தரப்புகள் மத்தியில் கூடுதல் ஆதரவும் இருக்கிறது.
இவ்வாறான நிலையில் தான் தமிழர் தரப்பை உடைப்பதற்கு சில தரப்புகள் தங்களால் ஆன முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பின் கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கிறது. அதற்கு தலைமை தாங்கியிருந்தவர், காலி முகத்திடலில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ‘அரகலய’ போராட்டத்தில் முன்னிலை வகித்து செயல்பட்ட ஒரு பெண் தமிழ் சட்டத்தரணி.
குறித்த சட்டத்தரணி சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்று விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்று கூறி சர்ச்சைக்குள் சிக்கினார்.
அதன்பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்ட பீடத்தினால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களின் எதிர்ப்பினால் அவரது அந்த நிகழ்வு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கைவிடப்பட்டது.
குறித்த சட்டத்தரணி இப்போது யாழ்ப்பாணம் வந்து தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துகின்ற தமிழ் தேசிய கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார். அதனை பலவீனப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
ஒரு பக்கத்தில் அவர் தமிழ் மக்கள் இதுவரை முன்னெடுத்து வந்த எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, சிங்கள மக்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் தங்களின் உரிமையை பெற்றுக் கொள்வதற்கு சிங்களத் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாறு அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
தந்தை செல்வா, தமிழ் அரசுக் கட்சியை தொடங்கி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சூடு கண்ட பின்னர் தான், ஜிஜி பொன்னம்பலத்துடன் இணைந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை உருவாக்கினார்.
அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும், எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களால், தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது?
அதைவிட, தமிழ் மக்களின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தி உடைப்பதற்கு இவ்வாறான தரப்புகள் இப்போது வேறு வேறு உபாயங்களைக் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மத்தியில் மாத்திரமன்றி, தமிழ் மக்கள் மத்தியிலும் ஆதரவு அதிகம் இருக்கிறது.
இந்த நிலைப்பாட்டில் இருந்து, தமிழ் மக்களையும் கட்சிகளையும் வெளியே கொண்டு வர முடியாது என்பதை இந்த சக்திகள் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வரவேற்பது போல கருத்தை முன்வைத்து, தங்களின் இலக்கை எட்ட முனைகிறார்கள்.
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும், தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும் என்றும், குறித்த சட்டத்தரணி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ்ப் பொது வேட்பாளரை பிரதான சிங்கள வேட்பாளர்களுடன் கலந்து பேசி முன்னிறுத்துவது என்பது, தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி. தமிழ்ப் பொது வேட்பாளரை வைத்து, சிங்கள வேட்பாளருடன் பேரம் பேச வைக்க அவர் முற்படுகிறார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எவரும் பெறாது போனால், இரண்டாவது விருப்பு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று வாக்குகள் எண்ணப்படும்.
அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அளிக்கும் வாக்குகளில் இரண்டாவது தெரிவை சிங்கள வேட்பாளர் ஒருவரை நோக்கித் திருப்பும் முயற்சிகளாகவே தெரிகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் இரண்டாவது, மூன்றாவது வாக்குகள் பற்றிப் பேசியிருக்கிறார்.
சிங்கள வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காமல் போகும் என்று அஞ்சத் தொடங்கியிருக்கிறார்.
அதன் வெளிப்பாடாகத் தான் இவ்வாறான தரப்புக்களை வைத்து தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை உடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருப்பொருளை முதலில் முன்னிறுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட, இவ்வாறான பேரம் பேசலுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருந்தவர் தான்.
பின்னர் எழுந்த எதிர்ப்புகளை அடுத்தே அவர் அதுபற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமானால், இந்த விடயத்தில் சிங்களத் தலைவர்களுடன் எந்த ஊடாட்டமும் இருக்கக் கூடாது.
அத்தகைய இரகசிய ‘டீல்’களால் தான் கடந்த காலத்தில் தமிழர்கள் தோல்விகளை சந்தித்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.
– என்.கண்ணன்