உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு மாநிலத்தை சேர்ந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்திலும் தேர்தல் நடைபெற்றது, கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், மொத்தம் 738 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு, யாருக்குமே வாக்களிக்கவில்லை. அதாவது வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணி வரை எந்த வாக்காளர்களும் வந்து வாக்கு செலுத்தவில்லை.

மக்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெறிச்சோடியபடியே காணப்பட்டன.

ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை.அங்கு, தேர்தல் அலுவலர்களைத் தவிர, மற்ற வாக்காளர்கள் யாரும் இல்லை. அவர்கள் மட்டும் அங்கிருக்கும் பெஞ்ச்களில் தங்கள் பணிக்காக அமர்ந்திருப்பதை பல காணொளிகள் மூலம் சமூகவலைத்தளங்களில் அறிய கிடைத்தது.

20 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 738 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச்சாவடி பணியாளர்கள் இருந்ததாக நாகலாந்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அவ லோரிங் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அந்த ஒன்பது மணி நேரத்தில் யாரும் வாக்களிக்க வரவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், அத்தொகுதிக்குப்பட்ட 20 எம்எல்ஏக்களும் தங்கள் வாக்குரிமையைச் செலுத்தவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நாகலாந்தில் உள்ள 13.25 இலட்சம் வாக்காளர்களில், கிழக்கு நாகலாந்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மட்டும் 4,00,632 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக பெரிய ஜனநாயக என்று பெருமை பட பேசப்படும் இந்தியாவில் இவ்வாறான நிலமை ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியானதாகவே உள்ளது. ஆனால் நாகலாந்தை பொருத்த வரை இது முதல் புறக்கணிப்பல்ல. சுதந்திரத்தின் முன்னரான முதல் தேர்தலையும் புறக்கணித்துள்ளனர்.

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும்.

முன்னைய காலத்தில் நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் முதல் முறையாக பிரித்தானியர் 1832இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர்.

அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர்.

பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று.

ஆயினும், பின்னர் பிரித்தானியா இந்தியாவிற்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என அந்த மக்கள் கோரினர்.

1946 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார்.

ஆனால் இதனை நாகலாந்து மக்கள் ஏற்கவில்லை. 1946க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர்.

1947 ஜூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் டில்லியில் காந்தியைச் சந்தித்தனர்.

அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார்.

அதன்படி நாகாலாந்து 1947 ஓகஸ்ட் மாதம் 14இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்கு தெரிவிக்க பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது.

அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.

தொடர்ந்து இந்தியாவுடன் இணைய விரும்பாத மக்களாகவே நாகலாந்து மக்கள் இருந்தனர். ஆயினும் இராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா நாகலாந்தை தனது நாட்டுக்குள் வைத்துக்கொண்டது.

உண்மையில் தனிநாடு கோரிக்கை என்பது இன்று வரை நாகலாந்தில் உள்ளது. அந்த மக்கள் இந்தியாவில் இரு்நது தங்களை விடுவித்து கொள்ள தொடர்ந்து பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது இன்று வரை தொடர்கின்றது. அதன் ஒரு வெளிபாடே இந்த முறையும் தேர்தல் புறக்கணிப்பு.

கிழக்கு நாகலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், 7 நாகா பழங்குடி இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள், தங்களுக்கு தனி மாநிலம் கேட்டு நீண்டநாட்களாகப் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்பு (ENPO) சார்பில் காலவரையற்ற ஊரடங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஊரடங்கு, நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அமுலுக்கு வந்ததாக கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். இதன்காரணமாக, அந்தப் பகுதி மக்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நடவடிக்கையை சீர்குலைத்ததற்காக நாகலாந்து தலைமை தேர்தல் அதிகாரி, கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்புக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.

அதில், ’கிழக்கு நாகலாந்து பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளீர்கள். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171சி உட்பிரிவின்கீழ், ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள அவ் அமைப்பின் தலைவர் , “இந்தப் பிரிவு, தங்களுக்குப் பொருந்தாது. “பொது அறிவிப்பின் முக்கிய குறிக்கோள் கிழக்கு நாகாலாந்து பகுதியில் ஏற்படும் இடையூறுகளின் சாத்தியக்கூறுகளை குறைப்பதாகும்.

இது எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. கிழக்கு நாகலாந்து மக்களிடையே தன்னார்வ பங்கேற்பு மற்றும் ஒருமித்த அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிழக்கு நாகலாந்து மக்கள் அமைப்பு , கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம் பெற்ற தேர்தல் புறக்கணிப்பையே நினைவு படுத்துகின்றன.

எப்படியாயினும் இந்தியாவை பொருத்தவரையில் அங்கு ஒரு மாநிலம் தனி நாடாக பிரிவது என்பது சாத்தியமற்றதே.

அதனை நிச்சயம் ஒன்றிய அரசு ஒரு போதும் விரும்பாது காரணம். அது இந்திய பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவின் அண்மை நாடான நமது இலங்கையில் தனி நாடு கோரிக்கை இருந்ததையே இந்தியா ஆதரிக்வில்லை. காரணம் அது இந்தியாவில் இவ்வாறு தின நாடு கோருவதில் செல்வாக்கு செலுத்திவிடும் என்று. அவ்வாறு இருக்க இந்தியாவில் தனி நாடு கோரிக்கைகள் சாத்தியமற்றதே.

சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் பிரித்தானியர்களினால் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டாலும் காலணித்துவ ஆட்சியின்பின்னர் அவர்கள் மீண்டும் சுதந்திரமாக வாழவே ஆசைப்பட்டனர்.

ஆனால் , பிரித்தானியர்கள் புதிய ஒரு ஆட்சியில் தங்களது அதிகாரத்தை கைமாற்றிவிட்டு அப்படியே தங்களது நாட்டுக்கு சென்று விட்டனர்.

இதன் விளைவே பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் , தொடர் கிளர்சிகள் ஏற்பட காரணமாகியது. இன்றும் அதன் விளைவே இந்த தேர்தல் புறக்கணிப்பு தனிநாடு கோரிக்கைளும் கூட.

Share.
Leave A Reply