இலங்கையின் திருச்செந்தூர் முருகன் ஆலயம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு – கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் மண்லாபிசேக பூர்த்தி பால்குட பவனியும் மஹா சங்காபிசேகமும் நேற்று (07) வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஈழத்தின் பிரசித்திபெற்ற ஆலயமாக கருதப்படும் கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிசேகம் நடைபெற்று வந்தது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட பால்குட பவனி நடைபெற்றது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக இந்த பால்குட பவனியானது ஆலயம் வரையில் நடைபெற்றது.

ஆலயத்தில் 1,008 சங்குகளுக்கு விசேட பூஜைகள் மற்றும் மஹா யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்களை மூலஸ்தானம் வரை சென்று அபிசேகம் செய்யும் வாய்ப்பும் இங்கு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பாலாபிசேகத்தினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் சங்குகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெற்றன.

Share.
Leave A Reply