பீஹாரில், போலி மருத்துவர் ஒருவர், யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான கிருஷ்ணகுமார் எனும் சிறுவன், உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கிருந்த டொக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதற்கிடையே அவர், யூடியூப் சமூக வலைதளத்தை பார்த்து அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால், சிறுவன் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை வரவழைத்துள்ளார். அதற்குள் சிறுவன் உயிரிழந்த நிலையில், டொக்டர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தப்பிச் சென்றனர்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதித்ததும் கிருஷ்ணகுமார் வாந்தி எடுப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டொக்டர் கூறினார். அதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டதும் அவர் யூடியூப்பை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். பிறகு, அவர் உயிரிழந்தார். அவர் டொக்டருக்கு படித்தாரா என தெரியவில்லை. அவர் போலி டொக்டர் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, தலைமறைவான மருத்துவரை தேடி வருகின்றனர். அங்கு ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.