ஜனாதிபதித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருகின்றன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் தகுதியை ஒரு கோடியே எழுபத்தியோரு இலட்சத்து நாற்பதினாயிரத்து முப்பது ஐந்து பேர் பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது இம்முறை 11 இலட்சம் பேர் புதிய வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை விட 2024 ஆம் ஆண்டு சுமார் இரண்டு இலட்சத்து 86 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்கையில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் சுமார் 16 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தேர்தல் இடம்பெறும் நாளில் அவர்களுக்கு அங்கு தொழில் விடுமுறையைப் பெறவியலாது இருப்பதால் இதில் மிகக்குறைந்த தொகையினரே சில நேரங்களில் வாக்களிக்க வருகை தரலாம் என்று கூறப்படுகின்றது.

ஆகவே இவர்களில் பல இலட்சம் பேர் தாம் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தவர்களாகவே கருதப்படுவர் என்பது முக்கிய விடயம்.

இலங்கையர்கள் அதிகமாக பணிபுரியும் இடமாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 9 இலட்சம் இலங்கையர்கள் பணி புரிகின்றனர். இதில் வீட்டுப்பணிப்பெண்களே அதிகம்.

சவுதி, கட்டார், குவைத், டுபாய், ஓமான் ஆகிய நாடுகளில் இளைஞர்கள் பல தொழில்களில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர்.

மிக முக்கியமாக பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் இலட்சக்கணக்கானோர் நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளுக்கு பணிக்கு சென்று விட்டனர்.

அதாவது 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் புதிதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 71 ஆயிரத்து 864 பேர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருட வேலை ஒப்பந்தத்தில் இவர்கள் சென்றிருப்பதால் மிக அவசரமான சம்பவங்களைத் தவிர இவர்கள் விடுமுறை பெறுவது சாத்தியமில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அதற்கு முன்னைய திகதிகளில் இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புகள் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட இம்முறை வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடையே இல்லையென்ற தகவல்களும் வெளிப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 2019ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் சிங்கள மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பாரிய பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டை காப்பாற்றுவதற்கு கோட்டாபயவை விட வேறு எவரும் இல்லையென்ற இனவாத பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக அவ் ஆண்டு தேர்தலில் இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கைக்கு வாக்களிக்க வருகை தந்திருந்தனர். இதில் அனைவருமே சிங்களவர்களாக இருந்தனர் என்பது முக்கிய விடயம்.

இம்முறை தேர்தலில் 38 பேர் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேரே உள்ளனர். அவர்களில் ரணில், சஜித், அநுர , நாமல் ஆகியோர் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் மத்திய வர்க்கத்தினர் குறித்து எந்த அக்கறையுமின்றியே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

வாக்களிப்பதற்காக அவர்களை வரவழைக்கும் அவசியம் தமக்கு இல்லையென்ற நிலையிலேயே அவர்கள் உள்ளனர். ஆகவே இவர்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு ஆர்வம் கொண்டவர்கள் எவரும் இல்லையென்றே கூறப்படுகின்றது.

மேலும் நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புக்காக வெளியேறியோர், குறித்த அனைத்து வேட்பாளர்களிடமும் நம்பிக்கையில்லாத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாம் தொழில் வாய்ப்புகளுக்காக குடும்பத்தை விட்டு சென்றமைக்கு கடந்த கால ஆட்சியாளர்களே காரணம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இம்முறை தேர்தலுக்கு எதிர்ப்பார்க்குமளவுக்கு வெளிநாட்டில் தொழில் புரிவோர் எவரும் வருகை தர மாட்டர் என்பதே உண்மையான விடயம்.

சி.சி.என்

Share.
Leave A Reply