சீன இணைய மோசடி கும்பல்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவங்களை அடுத்து, ‘மோசடி முகாம்’ என்ற புதியதொரு சொல் இலங்கைக்கு அறிமுகமாகியிருக்கிறது.
இதற்கு முன்னர் சீன மோசடி குழுவினர் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளி வருவது வழக்கம். ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் கைது இடம் பெற்றிருக்கிறது.
ஒரு சம்பவத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்குள் மாத்திரம் மோசடி முகாமுடன் தொடர்புடைய 150 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கும்பல்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்களின் குற்றச் செயல்களை நடத்தி வந்தன. அது இப்போது ஹோட்டல்களை வாடகைக்கு அமர்த்தி நடத்துகின்ற அளவுக்கு விரிவடைந்திருக்கிறது.
அவ்வாறு வாடகைக்கு பெறப்பட்ட பகுதிகளுக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாத படி தடைகளை ஏற்படுத்தி, ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தியிருக்கிறார்கள்.
பொலிஸார் சுற்றிவளைத்ததும் பலர் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஹொட்டேலில் தங்கியிருந்த அவர்களுக்கு மூன்று நேரமும் வெளியிலிருந்து உணவு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதற்காக மில்லியன் கணக்கான ரூபாவும் செலவிடப்பட்டிருக்கிறது.
இதில் இருந்தே, இந்தக் குற்றக் கும்பல் மிகப்பெரிய வலையமைப்பாக செயற்படுகிறது- பாரிய நிதி மோசடிகளில் ஈடுபடுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அவர்கள் ஏன் இலங்கையை தங்களின் தளமாக தெரிவு செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுந்திருக்கிறது.
இந்த மோசடிகளில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கணக்கான சீனர்கள் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். இது அச்சுறுத்தலுக்குரிய ஒரு விடயம்.
2007 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமான பணிகள் தொடங்கிய போது, பணியாளர்களாக சீன தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
அது தென்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும், போர் நடந்து கொண்டிருந்த காலம் என்பதால், இது போன்ற விடயங்களில் யாரும் கவனம் செலுத்தவில்லை. அதன் தாக்கம் குறித்தும் மதிப்பீடு செய்யவில்லை.
போர் முடிந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர கட்டுமான பணிகளை சீனாவுக்கு வழங்கியததை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான சீனத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினார்கள்.
இதன் விளைவாக, பல இடங்களில் சீன மொழியிலான அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டன. பேருந்துகளிலும் சீன மொழி பொறிக்கப்பட்டது. கொழும்பு துறைமுக நகரத்தில் பல இடங்களில் சீன மொழியில் அமைந்த பெயர் பலகைகள் நாட்டப்பட்டன.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீனமொழி அதனை ஆக்கிரமித்த சந்தர்ப்பங்களும் இருந்தன. அது சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இவ்வாறான மாற்றங்கள் சீனா குறித்த அச்சத்தையும், சீன தொழிலாளர்கள் குறித்த அச்சத்தையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியிருந்தது.
தென் இலங்கையில் சீனத் தொழிலாளர்களின் வருகை தொடர்பாக, எதிர்மறையான கருத்து நிலைபாடுகளே பரவலாக காணப்பட்டன.
இலங்கையில் போதுமான தொழிலாளர்கள் இருக்கின்ற போது ஏன், இந்த நிறுவனங்கள் தமது நாட்டில் இருந்து சீனர்களை கொண்டு வருகிறார்கள் என்று கேள்விகளும் எழுப்பப்பட்டன.
அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு, உள்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமான பணிகளில் சீனர்களுக்கு பதிலாக, உள்நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதனால் கொழும்பில் பல பகுதிகளில் குட்டி குட்டி சீன குடியிருப்புகள் உருவாக தொடங்கியிருக்கின்றன.
இந்தநிலையில் தான், இணைய நிதி மோசடிகளை முன்னெடுப்பதற்காக பெருமளவில் சீனர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
உலகில் சில நாடுகள் அல்லது நகரங்கள் சில சட்டவிரோத தொழில்களுக்குப் பெயர் பெற்றிருக்கின்றன.
தாய்லாந்திற்கு அப்படியொரு அடையாளம் இருக்கிறது. இத்தாலிக்கும் கொலம்பியாவுக்கும் அத்தகைய அடையாளங்கள் இருக்கின்றன.
அப்படியொரு அடையாளம் இலங்கைக்கும் இந்த மோசடி முகாம்களால் வந்துவிடும் போலத் தெரிகிறது.
கடந்த பல மாதங்களில் இவ்வாறான செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட போதும் அவர்களிடம் முறையான விசாரணைகளை நடத்தக் கூடிய வாய்ப்பு இருக்கவில்லை.
அதற்கு மொழிப் பிரச்சினை முக்கியமான ஒரு தடையாக கூறப்பட்டது.
குற்றப் புலனாய்வு பிரிவில் இத்தகைய குற்றங்களை விசாரிக்க கூடிய மொழியற்றல் கொண்டவர்கள் குறைவு என்பதால் இந்த வழக்குகளை கையாளுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கடந்த செப்டெம்பர் மாதம் சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள புலனாய்வு பிரிவினர் 10 பேர் கொழும்புக்கு வந்திருந்தனர்.
அவர்கள் சீனர்களுடன் தொடர்புடைய இணையக் குற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த குழுவினர் எத்தகைய விசாரணைகளை முன்னெடுத்தனர், யாருடன் இணைந்து செயல்பட்டனர், ஏதேனும் வலையமைப்பை அவர்களால் கண்டறிய முடிந்ததா, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஏதேனும் பயனுள்ள தகவல்களை பெற முடிந்ததா, என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
இவ்வாறான சூழலில் தான், இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் 150 க்கும் அதிகமான சீனர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கொழும்பில் அதிகளவிலான சீனர்கள் கைது செய்யப்பட்ட தகவல்கள் வெளியானதும், கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
“இதனை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இது எங்கள் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கான அச்சுறுத்தல் மட்டுமன்றி, சீனாவின் நற்பெயரையும் கடுமையாக பாதிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாரம்பரிய நட்புறவையும் பாதிக்கிறது.
இந்த விசாரணைகளுக்கு, இலங்கையின் சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளுக்கு சீன தூதரகம் முழு ஆதரவையும் வழங்கும். தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளைத் தடுக்க சீனா ஏற்கனவே பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா ஒத்துழைப்புடன் செயற்படுகிறது.
இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, இலத்திரனியல் மோசடிக் குற்றக் கும்பல்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது.
இந்த சிக்கலை கூட்டாக தீர்க்க விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது” என்றும் சீனத் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மோசடி முகாம்கள் ஒரு பக்கம் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இன்னொரு பக்கத்தில், சீனாவை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துகின்றதாகவும் இருக்கின்றது.
இந்த மோசடிக் கும்பலை கண்டறிவதற்கு, சீனாவின் உதவி இலங்கை அரசாங்கத்திற்கு தேவை. சீனாவின் நெருக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் இவர்களை ஒடுக்க முடியாது.
இவ்வாறான நிலையில், இவர்களை ஒடுக்குவது என்ற பெயரில், சீனா தனது புலனாய்வாளர்களை கொழும்புக்கு அனுப்ப நினைக்கிறதா என்ற சந்தேகங்களும் இருக்கிறது.
அவ்வாறான முயற்சி, கொழும்பில் நிரந்தரமாக தங்களின் அதிகாரிகளை நிறுத்துவதற்கும் வழி வகுக்கும். அதற்கான அழுத்தங்களை கொடுக்கும் ஒரு மறைமுக நகர்வாக இந்த மோசடி கும்பலின் ஊடுருவல் இருப்பதற்கான சாத்தியங்களை நிராகரித்து விட முடியாது.
– சுபத்ரா–