பெரும்பாலான இடங்களில் தோல்வியும், புறக்கணிப்பும் சந்தித்த சாய்பல்லவி, இறுதியில் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அமரன் திரைப்படத்தில் திரைக்கதையை தூக்கிச் சுமப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார் நடிகை சாய் பல்லவி. அவரின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
Wrong Number, Fake Call எனத் தனக்கு வந்த பிரேமம் பட வாய்ப்பை அன்று அவர் புறக்கணித்திருந்தால் இன்று, இவ்வளவு திறமையான, தெளிவான சிந்தனைகொண்ட, சிறந்த நடிகையை இழந்திருப்போம் என்றே ரசிகர்கள் எழுதி வருகிறார்கள்.
அப்படி பல திருப்பங்கள் நிறைந்த சாய் பல்லவியின் சினிமா பயணம் குறித்து ஒரு பார்வை
மே 9,1992-ல் செந்தாமரை கண்ணன் – ராதா தம்பதிக்கு மூத்த மகளாக பிறக்கிறார் சாய் பல்லவி. அரசு பணி செய்துவந்த செந்தாமரைக் கண்ணனால் பல்வேறு ஊர்களில் வசித்த சாய் பல்லவி. கோயம்புத்தூரில் உள்ள அவிலா கான்வென்ட் பள்ளியில் தனது படிப்பை முடித்திருக்கிறார்.
டான்ஸ்… டான்ஸ்…
சாய் பல்லவி – நடனம் இது இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அளவு நடனத்தை நேசித்தார். டி.வி நிகழ்ச்சிகள், சில தெலுங்குப் படங்கள் என நடனத்தில் அசத்தியவர். `மாரி-2′ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல் இன்றுவரை டிரெண்டிங்கில் இருப்பதையும், அதில் சாய்பல்லவியின் நடனம் முக்கியத்துவம் பெறுவதையும் குறிப்பிடலாம்.
பள்ளி, கல்லூரி காலங்களிலேயே நடனத்தின் மீதான ஆர்வத்தால், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்ற சாய் பல்லவி, 2008-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, 2009-ல் தெலுங்கின் இடிவியில் ‘தி அல்டிமேட் டான்ஸ்’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பெரும்பாலான இடங்களில் தோல்வியும், புறக்கணிப்பும் சந்தித்த சாய் பல்லவி, இறுதியில் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தேவதை வந்த கதை!
கஸ்தூரிமான், தாம் தூம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சாய் பல்லவி நடித்திருந்தாலும், அது பெரிதாக கவனம் பெறவில்லை.
அதனால் நடிப்புத் துறையை விட்டுவிலகி மருத்துவ மாணவியாக படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு வந்தது ஒரு அதிஷ்ட அழைப்பு. இது தொடர்பாக சாய் பல்லவியே ஒரு பேட்டியில், “பிரேமம் படத்துக்காக அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் பேசியபோது நான் நம்பவில்லை.
அதை ஃபேக்கால் (fake call) என்று நினைத்துதான் பேசினேன். ‘என் பெயரை கூகுளில் தேடிபார்த்துக்கொள்ளுங்கள், நான்தான் அழைத்திருக்கிறேன்’ என்று அல்போன்ஸ் புத்திரன் கூறிய பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஆரம்பத்தில் நடிக்க ஆர்வமில்லாமல் மறுத்தேன். அவரின் வற்புறுத்தலுக்குப் பிறகே அந்தப் படத்தில் நடித்தேன்” என்றார்.
பிரேமம் படத்தில் ரேகிங் செய்துக்கொண்டிருக்கும் கதாநாயகன் ஒரு பெண்ணை அழைப்பார். அப்போது அந்தப் பெண், “நானா…” எனத் தமிழில் பேசித் திரும்புவார்.
திரும்பிய மலர் டீச்சரின் கதாபாத்திரத்தில் மயங்கியது நிவின்பாலி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையாள, தமிழ் சினிமா ரசிகர்களும்தான்.
2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் சாய் பல்லவி தன் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி, கதாநாயகிக்கான அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்தார்.
அதனால், மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் அவருக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி டிரெண்ட் ஆனார் . இதுதான் தேவதை வந்த கதை!
சிகப்பு கம்பளம் விரித்த தெலுங்கு சினிமா!
2016-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சலமானுடன் ‘Kali’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திலும் சாய் பல்லவியின் அஞ்சலி கதாப்பாத்திரம் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு தெலுங்கு திரைகளில் வெளியானது ‘ஃபிடா’. வருண் தேஜ் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில், கிராமத்துப் பெண் பானுமதியாக தெலுங்கில் அறிமுகமானார் சாய் பல்லவி.
அவரின் அந்த முதல் படத்திலேயே, தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, தனக்கான முத்திரையைப் பதித்தார்.
அதே ஆண்டு நடிகர் நானியுடன் சாய் பல்லவி நடித்த ‘MCA’ வெளியானது. அந்தப் படத்தின் மூலம் செல்லமிகு நடிகையாக தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்தார். இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு திரை உலகம் சாய் பல்லவிக்கு சிகப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றுக் கொண்டது.
அதன் பலனாக 2021-ம் ஆண்டு வெளியான ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவியின் நடனமும், நடிப்பும் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி நடித்த ‘லவ் ஸ்டோரி’ இந்திய அளவில் கவனம் பெற்றது. தொடர் வெற்றிப்படங்கள், கதாப்பாத்திரத் தேர்வு எனத் தன் தீர்க்கமான முடிவுகளால் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார்.
எந்த தெலுங்கு டிவியில், ‘தோற்றவர்’ எனக்கூறி வெளியேற்றப்பட்டாரோ, இன்று அதே தெலுங்கு சினி உலகில் தனக்கான சிம்மாசனத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
தமிழ் சினி உலகில் சாய்…
தமிழில் 2018-ல் ‘தியா’ படத்தில் துளசியாகவும், தனுஷுடன் ‘மாரி-2’-ல் அராத்து ஆனந்தியாகவும், சூர்யாவுடன் ‘NGK’-வில் கணவன் மேல் சந்தேகப்படும் மனைவி கீதா குமாரியாகவும், பாவ கதைகளின் ‘ஓர் இரவு’ பகுதியில் ஆணவப் படுகொலைக்கு ஆளாகும் கார்பினியாகவும் நடித்து தமிழ் திரையில் தன் இடத்தைப் பதிவு செய்தார்.
ஆனால், தமிழில் சாய்பல்லவிக்கு மிகப் பெரும் அங்கீகாரமாக அமைந்தது, 2022-ம் ஆண்டு வெளியான கார்கி. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், முழு கதையையும் தன் முதுகில் சுமந்திருந்தாலும், ரசிகர்களுக்கு எந்த அயர்ச்சியும் ஏற்படாதவாறு யதார்த்த நடிப்பால் கட்டிப்போட்டிருப்பார்.
‘அந்தக் கதாபாத்திரம் அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது’ என அவரின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதற்குப் பிறகு சாய் பல்லவிக்கு பெயர் சொல்லும் படமாகத் தமிழில் அமரன் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திலும் சாய் பல்லவியின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பத்திரம் மக்களால் பேசப்படுவதிலிருந்து ஊகிக்க முடிகிறது.
விருதுக்கே விருது…
சாய்பல்லவி, 7 தெலுங்கு, 6 தமிழ், 3 மலையாளம் என மொத்தம் 16 படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார்.
ஆனால், சினிமாத் துறையில் பெரும் கவனம் பெற்ற நடிகையாக சாதித்திருக்கிறார். தெலுங்கில் சாய்பல்லவியின் ‘ஃபிடா’ பட நடிப்பு, Film Companion-னின் ’10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிப்பு’ என்ற பட்டியலில் இணைக்கப்பட்டது.
பிரேமம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருது, ஃபிடா படத்துக்காக சிறந்த நடிகை விருது, ஷியாம் சிங் ராய் படத்துக்காகவும், விரத பர்வம் படத்துக்காகவும் Filmfare Critics Award, லவ் ஸ்டோரி, கார்கி படத்துக்காக சிறந்த நடிகை விருது, தெலுங்கின் சிறந்த நடிகைக்கான விருது,
2020-ம் ஆண்டில், (Forbes magazine) ஃபோர்ப்ஸ் இதழால் ‘இந்தியாவின் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்கள்’ பட்டியலில் இவரையும் இணைத்தது (திரைப்படத் துறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர்), மூன்றுமுறை Filmfare Critics Award for Best Actress – Telugu விருது, என விருதுகளை குவித்திருக்கிறார்.
இப்போதுவரை ‘ரௌடி பேபி’ பாடல் யூடியூப் டிரெண்ட் லிஸ்டில்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிட்டதக்கது.
விமர்சனங்கள் விதிவிலக்கல்ல:
ஆரம்பத்தில் முகப்பருவிற்காக ஒரு தரப்பு மக்களால் விமர்சிக்கப்பட்டவர்தான் சாய் பல்லவி. அதைத் தொடர்ந்து ‘விரத பர்வம்’ படத்தின் புரோமோஷனுக்கான ஒரு பேட்டியில், அவர் பேசிய முழு நீள பேட்டியின் ஒரு சில நிமிடங்கள் வெட்டி ஒட்டி வைரலாக்கப்பட்டது.
அதனால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், உண்மையில் அவர் பேசியது, “காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதில் இந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டினார்கள். அதேபோல் நாட்டில் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூறி சிலர் தாக்கிக் கொல்கின்றனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதப்பற்றை வைத்து இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களையும், இந்தியா ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் இராணுவ வீரர்களையும் தீவிரவாதிகளாக பார்க்கின்றனர்.
இருதரப்புக்கும் இடையே இருக்கும் பார்வையும் புரிதலும் வேறுபடும். வன்முறை எதற்கும் தீர்வாகாது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டுமே தவிர, யாரையும் துன்புறுத்தக் கூடாது” எனப் பேசியிருந்தார்.
இதில், ‘இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் என சாய்பல்லவி கூறிவிட்டார்’ என அதை வைரலாக்கினார்கள். அந்த வீடியோ அமரன் பட ரிலீஸின் போது மீண்டும் வைரலாக்கப்பட்டு #BoycottSaiPallavi என டிரெண்ட் செய்தார்கள். அதே போல ராமாயணம் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் கூட நடத்தினார்கள்.
இது எதுவும் தன்னை பாதிக்காத வகையில் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, தன் திறமையின் மீதான நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
சாய்பல்லவியின் வார்த்தைகள்:
இந்திய சினிமாவில் குறைந்த மேக்கப்புடன் அல்லது மேக்கப் இல்லாமல் திரையில் தோன்றும் சில நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர்.
தனது முதல் படமான பிரேமத்தில் முழு படத்திலும் மேக்கப் இல்லாமல் நடித்தார். சாய் பல்லவி தன் படங்களில் மேக்கப் போட வேண்டாம் என்று முடிவு செய்தது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், பேசியிருந்தார்.
“முகப்பரு வருவதைப் பற்றி பயங்கரமாக உணர்ந்த இளைஞர்களில் நானும் ஒருத்தி. நான் ஜார்ஜியாவில் படித்துக்கொண்டிருந்தபோது எப்போதும் துப்பட்டாவால் முகத்தை மறைத்திருப்பேன்.
ஜோதிகா, சிம்ரன், திரிஷா போன்ற நடிகைகளை பார்த்து வளர்ந்தவள். அவர்கள் போல எனக்கும் பளபளப்பான முகம் இல்லையே என, எனக்கு தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது.
பலமுறை முகப்பருவைப் பார்த்து வருந்தி சோர்வடைந்திருக்கிறேன். ஆனால் எப்போது எந்த மாற்றமும் இல்லாத அந்த முகத்தை, பிரேமம் படத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களோ அப்போதுதான் எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது.
முகப்பொலிவு என்பதை விட, உங்கள் குணம் மற்றும் தன்னம்பிக்கையால்தான் மக்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை உணர பிரேமம் மற்றும் அல்போன்ஸ் ஆகிய இருவரும் எனக்குத் தேவைப்பட்டனர்.
இயக்குநர்களும் நான் மேக்கப் செய்துகொள்வதை விரும்பவில்லை. அதனால்தான் முகப்பொலிவு தொடர்பான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை. பெண்கள் தங்களைப் பற்றி பெருமையாக உணர்ந்தாலே போதும்.” எனப் பேசியிருந்தார்.
மற்றொரு பேட்டியில் மகிழ்ச்சி குறித்த கேள்விக்கு,“நாம் யார் என்பது நமக்கான எல்லையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதைத் தாண்டி நம்மைப் பற்றி யாரும், யாரையும் கண்டுக்கொள்வதில்லை. அப்படியான அறிமுகமும் தேவையில்லை. எனவே அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தாண்டி, உங்களுக்கான நிம்மதிக்காக உழைக்க வேண்டும். பிறரை பாதிக்காத உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்தாலே மகிழ்ச்சிதான்.” என்றார்.
சாய் பல்லவிக்கு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க ரூ 2 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டது. அதை சாய்பல்லவி ஏற்கவில்லை என்ற தகவலும் வெளியாது. இது குறித்து ஒரு பேட்டியில், “அப்படிப்பட்ட அந்த விளம்பரத்தில் கிடைக்கும் பணத்தை நான் என்ன செய்யப் போகிறேன்?
வீட்டுக்குப் போய் மூன்று சப்பாத்தியோ, சிறிது சாதமோ சாப்பிடுவேன். எனக்கு வீடு இருக்கிறது, நல்ல உடைகள் இருக்கின்றன, இது தவிர வேறு பெரிய தேவைகள் எதுவும் எனக்கு இல்லை. எனவே, என்னை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு என்னால் பங்களிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
நம்மிடம் இருக்கும் இந்த அழகு என்ற தரநிலைகள் தவறானவை. இந்த தோல், நிறம் எல்லாம் நமக்கானது. அதை நாமே அழக்கற்றது எனக் கூறலாமா? அது எப்படி சரியாகும். என் அம்மா ‘ நீ ஹீரோயின்… எப்படியெல்லாம் ஆடம்பரமாக டிரெஸ் பண்ணனும்.
நீ என்னனா 200ரூ புடவை கட்டிட்டு போற’ எனக் கேட்டிருக்கிறார். அப்போது நான் ‘அம்மா உன் மகள் இந்தப் புடவையிலேயே அழகாதானே இருக்கேன் அதுபோதும்’ என்றேன். அழகு அப்படிதான் இயல்பானது” எனப் பேசினார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, போது இடங்களிலெல்லாம் அவரின் உடைத் தேர்வு மிக சாதாரணதாகவே இருக்கும் என்பதை பார்க்கும் ரசிகர்கள் அறிவார்கள்.
ஏன் கிளமாராக நடிக்க விரும்புவதில்லை என்ற கேள்விக்கு, “அமெரிக்காவில் ஒரு நடன நிகழ்ச்சியில் அந்த நடனத்துக்கேற்ற உடை அணிந்து நடனம் ஆடினேன்.
யாராக இருந்தாலும் கிளாசிக் டான்ஸ் ஆடுவதற்கு அதற்கேற்ற ஆடைதானே அணிய வேண்டும். அதுபோல்தான் அந்த நடனத்துக்காக நான் அணிந்த ஆடை. ஆனால், பிரேமம் ரிலீஸான போது அந்த நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
எனக்கு அப்போதுதான் சிலர் தவறாகப் பார்ப்பது புரிந்தது. மற்றவர்கள் பார்த்து ரசிக்க நான் சதைபிண்டம் அல்லவே. அதனால் நான் இனிமேல் அதுபோல நடிக்கக் கூடாது என முடிவு செய்தேன்.
நான் தற்போது இப்படி நடிக்கும்போதே ரசிகர்கள் என் மேல் அன்பு காட்டுகிறார்கள். எனக்கு ஆதரவு தருகிறார்கள். ஒருவேளை கிளாமராக நடித்தால்தான் இந்த சினிமா உலகில் இருக்க முடியும் என்றால், நான் மருத்துவம் படித்திருக்கிறேன். அந்தத் தொழிலுக்கு சென்றுவிடுவேன்” என்றார்.
இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் அவ்வளவு தெளிவாக பேசி அவருக்கான எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே செல்கிறார். அதேபோல தொழில் வாழ்க்கையில் திறந்த புத்தகமாக இருக்கும் சாய் பல்லவி, தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருக்கவே விரும்புகிறார்.
சாய்பல்லவியை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடுகிறார்கள்.
தொடர்ந்து 8 ஆண்டுகளாக தன் திறமையான நடிப்பால் தொடர்ந்து வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்பது, அமரன் படத்திலும் தெளிவாக தெரிந்திருக்கிறது. சாய் பல்லவிக்கு வாழ்த்துகள்!