அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பு ஒன்றில், தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ .சுமந்திரன் அசல் இருக்க, நகல் எதற்கு என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நாங்கள் முன்வைத்த சமஷ்டிக் கோரிக்கையை, இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள், சமஷ்டி தீர்வை வலியுறுத்துவதற்கு அசலாக நாங்கள் இருக்கும் போது, நகல் எதற்கு என்பதே அவரது கேள்வி.
தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையில் உறுதியாக இருக்கின்ற போது, ஏன் சமஷ்டி என கூறுகின்ற ஏனைய தரப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் அவரது கேள்வியின் உட்பொருள்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வை வலியுறுத்துகின்ற முக்கியமான தரப்புகள் என்றால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போன்றவற்றை குறிப்பிடலாம்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில், முன்னர் சமஷ்டி கட்சி என்ற பெயரில் இயங்கிய கட்சியே, பின்னர் தமிழரசு கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழர்களின் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வே இறுதியானது என்ற நிலைப்பாட்டை இந்தக் கட்சி தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலின் போதும் வலியுறுத்தி வந்தது உண்மை.
ஆனால் பல சந்தர்ப்பங்களில், தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கங்களுடனா பேச்சுக்களில் அந்த நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி உறுதியாக வலியுறுத்தியதா என்பது கேள்விக்குரிய விடயம் .
ஜி. ஜி .பொன்னம்பலம் காலத்தில், தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது அதிகாரங்கள் கேட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கடந்த இரண்டு தசாப்தங்களாக சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி வருகிறது .
இந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், சமஷ்டி தீர்வுக்கு மாற்றாக, ஒற்றையாட்சியையோ. மாகாண சபைகளையோ தீர்வாக முன்வைத்து பேசுவதற்கு முன்வந்திருந்த போதும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அவ்வாறான எந்த பேச்சுகளிலும் பங்கெடுக்கவில்லை .
இன்று சமஷ்டி நிலைப்பாட்டில் உறுதியான கொள்கையை கொண்ட கட்சி என்றால், அது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டும் தான் .
ஏனைய கட்சிகள் காலத்துக்கு காலம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறி இருக்கிறார்கள் . ஆனால், தேர்தல் காலங்களில் தவறாமல் சமஷ்டியை ஒரு கோஷமாக முன்வைத்து வந்திருக்கிறார்கள் .
இவ்வாறான நிலையில் தான், சமஷ்டி கோரிக்கையின் மூலாதாரமாக தமிழரசுக் கட்சி இருக்கின்ற போது, ஏன் அதே கோரிக்கையை முன்வைக்கும் இன்னொரு கட்சியை ஆதரிக்க வேண்டும் என சுமந்திரன்,கேள்வி எழுப்பியிருக்கிறார் .
தமிழரசுக் கட்சி சமஷ்டியை பிரதானமாக, தேர்தல் விஞ்ஞாபனங்களில் மாத்திரம் உள்ளடக்கி வந்திருக்கிறது.தேர்தலுக்குப் பின்னரான சூழலில் சமஷ்டி பற்றிய அதன் வாக்குறுதிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை .
குறிப்பாக, எம். ஏ .சுமந்திரன் இந்த விடயத்தில் தமிழ்ரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையை, கீழறுப்பதில் கணிசமான பங்கை வகித்திருந்தார்.
அவர், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவுடன் இணைந்து பங்காற்றியிருந்தார்
அந்த அரசியலமைப்பு வரைவு, சமஷ்டி முறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. சமஷ்டி என்ற பதமும் இல்லை, அதன் பண்புகளும் இல்லை .
அந்த அரசியலமைப்பு வரைவில், இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சிங்களத்தில் ‘ஏக்கிய ராஜ்ய’ என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ‘ஏக்கிய ராஜ்ய’என்றால் ஒற்றையாட்சி அல்ல, ஒருமித்த நாடு என்றும், அது சமஷ்டியின் பண்பை கொண்டிருப்பதாகவும், புதிய வியாக்கியானம் கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்தார் .
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியில், கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஒற்றையாட்சி என்பது அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்றும் , அவரது தாயாரின் விருப்பத்தின் படி, அதனை வரைவில் சேர்த்துக் கொண்டார் என்றும், சுமந்திரன் ஒப்புக்கொண்டிருந்தார் .
அதாவது, ‘ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி தான், என்பதை தெரிந்து கொண்டே, அது சமஷ்டிப் பண்புகளைக் கொண்டது என்று, தமிழ் மக்களை நம்ப வைக்க முற்பட்டார் .
சமஷ்டி என்ற பெயர் பலகை இல்லையே தவிர, அதன் பண்புகள் இருக்கின்றன என்று அவர் பல கூட்டங்களிலும் நிகழ்வுகளிலும், வலியுறுத்தினார். இப்போது, அதே சுமந்திரன், சமஷ்டி தீர்வுக்கு மக்களின் ஆணையைக் கேட்கிறார் .
முக்கால் நூற்றாண்டாக, தமிழ் மக்கள் இந்த சமஷ்டித் தீர்வுக்கு ஆணை வழங்கி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அதற்கு ஆணை பெற வேண்டுமா என, தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்திய போது, கேள்வி எழுப்பிய சுமந்திரன், இப்போது சமஷ்டியை வலியுறுத்தும் அசலுக்கு வாக்களியுங்கள் என்கிறார்.
நல்லாட்சி அரசின் காலத்தில், புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பாக சிங்கள மக்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டங்கள் பல தென்பகுதியில் நடத்தப்பட்டன.
2018 ஆம் ஆண்டு, காலியில் நடந்த அவ்வாறான கூட்டம் ஒன்றில் சுமந்திரன் உரையாற்றிய போது, தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்றும், அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சற்று கூடுதலான அதிகாரப்பகிர்வையே எதிர்பார்க்கிறார்கள் என்றும், கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அப்போது அவருக்கு எதிராக, தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தி, தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று கூறவில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அப்போது, தாம் சார்ந்த தமிழரசுக் கட்சியினது கொள்கை சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதிலிருந்து விலக முடியாது என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
அண்மையில் ஜனாதிபதி தேர்தலின் போது, மூன்று பிரதான வேட்பாளர்களுடனும், பேச்சு நடத்தியதாகக் கூறிய சுமந்திரன், எந்தவொரு வேட்பாளருடனும், சமஷ்டி தீர்வை முன்வைத்து பேச்சு நடத்தவும் இல்லை , அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் இல்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மாகாணசபைகளை மீள இயக்குவது பற்றியே, அவர் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ள முனைந்தார்.
சஜித் பிரேமதாச மாகாணங்களுக்கு கொடுத்த அதிகாரங்களை மீளப்பெறமாட்டேன் என கொடுத்த வாக்குறுதியை வைத்துக் கொண்டு, அதுதான் சமஷ்டிப் பண்பு என்று, ஏமாற்றுவதற்கு முற்பட்டிருந்தார்.
இவ்வாறாக, இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைப்பதற்கு, தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த சுமந்திரன், இப்போது தமிழரசுக் கட்சியே சமஷ்டியைக் கண்டுபிடித்தது போல கூறுகிறார்.
இலங்கைக்கு சமஷ்டி முறையை அறிமுகப்படுத்தியது எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்க தான். இப்போது சமஷ்டியைக் கேட்கின்ற அகில இலங்கை தமிழ்க காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் ஜி. ஜி .பொன்னம்பலம் அதனை எதிர்த்தவர்.
அதனை வைத்துக் கொண்டு, சமஷ்டியை எதிர்த்தவர்கள் இன்று சமஷ்டியை கேட்கிறார்கள், அவர்கள் நகல்கள், நாங்கள் தான் அசல் என்று சுமந்திரன் மக்களை நம்ப வைக்க முற்படுகிறார்.
சமஷ்டி விடயத்தில் யார் அசல் யார் நகல் என்பது மாத்திரமல்ல, அதனை வைத்து அரசியலுக்கு வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூட, தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் வாக்குகளால் தீர்ப்பை வழங்குவார்கள்.
-கண்ணன்