அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.
இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர இந்தப் போரில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் நடந்துள்ள இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு நற்செய்தி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். இதை, உலக நாடுகள் பலவும் வரவேற்றிருந்தன. இந்தியாவும் வரவேற்றிந்ததது.
அதேநேரத்தில், ”ஹிஸ்புல்லா மீண்டும் வாலாட்டினால், இஸ்ரேல் பொறுத்திருக்காது” எனவும் அந்நாடு எச்சரித்திருந்தது.
இதற்கிடையே, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாகவும் இதனால், தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது.
ஆனால் அதைத் திட்டவட்டமாக மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டியது.
இதற்கிடையே அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர், ”நான் 2025 ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளேன். அதற்கு முன்பாக பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மத்திய கிழக்கில் உள்ள மனிதகுலத்துக்கு எதிரான இந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பாக மோசமான விளைவைச் சந்திக்க நேரிடும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, யாரும் இதுவரை தாக்காத அளவுக்கு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். எனவே பணயக் கைதிகளை இப்போதே விடுவியுங்கள்” என எச்சரித்துள்ளார்.
Trump announces if every hostage isn’t released from Gaza there will be hell to pay when he enters office. pic.twitter.com/o15141UVab
— Clay Travis (@ClayTravis) December 2, 2024
டொனால்டு ட்ரம்பின் இந்த எச்சரிக்கை என்பது இஸ்ரேல் – அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்ற ஓமர் நியூட்ரா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு அடுத்த சில மணிநேரங்களில் வெளிவந்துள்ளது.
இவரது உடல் காஸாவில் ஹமாஸ் அமைப்பினரிடம் இருப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததைத் தொடர்ந்துதான் டொனால்டு ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு இடையே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை, உலக நாடுகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காரணம், அவர் தனது பிரசாரத்தின்போது போர் நிறுத்தத்திற்கு முடிவு கட்டுவதாகத் தெரிவித்திருந்தார்.
Thank you and bless you Mr. President-elect @realDonaldTrump.
We all pray for the moment we see our sisters and brothers back home! pic.twitter.com/Vm2WwtMNYZ
— יצחק הרצוג Isaac Herzog (@Isaac_Herzog) December 2, 2024
ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், வரவேற்றுள்ளார். அவர், “அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்பை ஆசிர்வதிக்கிறேன். நன்றி தெரிவிக்கிறேன். நமது சகோதரர்கள், சகோதரிகள் விரைவில் வீடு திரும்ப நாம் எல்லோரும் இந்த தருணத்தில் பிரார்த்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு தங்களது பிடியில் இருந்த ஈடன் அலெக்சாண்டர் என்பவரின் வீடியோவை ஹமாஸ் இயக்கத்தினர் வெளியிட்டனர்.
இஸ்ரேல் ராணுவ வீரரான அவர், தம்மையும், தம்முடன் உள்ள இதர பணய கைதிகளையும் விடுவிக்க ட்ரம்ப் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.