ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து நாடெங்கினும் 361 மதுபான அனுமதி பத்திரங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையில் தான்தோன்றித்தனமாக விநியோகித்தமை தற்போது நிரூபணமாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட இந்த அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டமை அரசியல் இலஞ்சமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை தக்க வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையில் அதிகார துஷ்பிரயோகத்தை முன்னெடுத்திருக்கின்றார் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே இந்த முறைகேடான மதுபான அனுமதி பத்திர விவகாரம் பூதகரமாக உருவெடுத்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடும் பிரயத்தனங்களை எடுத்து வந்தார்.

அவர் ஜனாதிபதியாவதற்கு பாராளுமன்றில் ஆதரவு நல்கிய பொதுஜன பெரமுன தாம் தனியான வேட்பாளரை களமிறக்குவோம் என தெரிவித்து விட்டது.

அதே வேளை ஐக்கிய தேசிய கட்சியில் தான் வேட்பாளராக களமிறங்கினாலும் மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவது கடினம் என்பதை ரணில் நன்கு உணர்ந்திருந்தார். இதன் காரணமாக எதிரணி கட்சிகளை பிளவு படச்செய்யும் வழமையான அவரது வேலையை அவர் இந்த வருட ஆரம்பத்திலிருந்து தொடங்கினார்.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து உறுப்பினர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கு மதுபான அனுமதிகளை அவர்களுக்கு வழங்குவது அதில் ஒரு ஏற்பாடாக இருந்தது. அதன் படி 25 மாவட்டங்களிலும் உள்ள ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் சில எதிரணி எம்.பிக்களுக்கும் வலை வீசி அதை சாத்தியப்படுத்தினார் ரணில். பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இதை வலையில் அகப்பட்டனர்.

இதன் காரணமாகவே அவர்கள் மகிந்தவை விட்டு அவர் பக்கம் செல்வதற்குக் காரணம் என தற்போது தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. உண்மையில் இந்த மதுபான அனுமதி பத்திரங்கள் அனைத்துமே குறித்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாசிரின் பெயரில் ஏற்கனவே மதுபான நிலையங்கள் வைத்திருந்தோருக்கும் ஏனைய அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கும் இவை சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல்களை அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானவுடன் பெற்றாலும் அதை உடனடியாக வெளியிடுவதில் தடைகள் இருந்தன.

அவற்றை வெளியிட்டால் பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்து அவர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டார் என விமர்சனங்கள் வரும் என்ற காரணத்தினால், புதிய பாராளுமன்றத்தில் வைத்து அதை அம்பலப்படுத்தியுள்ளார் அநுர. அதுவும் அநுர அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனே இது குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

இதை அவர் கடந்த 4 ஆம் திகதி நேரடியாகவே சபாநாயகரிடத்தில் கேட்டார். அது குறித்த விபரங்கள் அன்று மாலை அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய தினம் மாலை சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க ரணில் அரசாங்கத்தில் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட 361 மதுபான அனுமதி பத்திரங்கள் பற்றிய விபரங்களை விலாவாரியாக அறிவித்தார்.

யாருக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரங்களே அதில் இருந்தன. ஆனால் இதை இவர்களுக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

எனினும் இவை அரசியல் இலஞ்சங்களாகவே வழங்கப்பட்டிருப்பதை சபை முதல்வர் பிமல் ரட்னாயக்க உறுதி செய்தார். கூடுதலாக வட மாகாணத்துக்கே அதிக அனுமதி பத்திரங்ளக் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த த ஆவணத்தின்படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும், தென்மாகாணத்தில் 48,வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 அனுமதி பத்திரங்கள் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை , கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8 . பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என்ற அடிப்படையில் மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.

2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சபை முதல்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை ஏன் வெளியிடவில்லையென மறுநாள் 5 ஆம் திகதி சாணக்கியன் எம்.பி கேள்வியெழுப்பினார். இந்த அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா இதற்கு சிபாரிசு செய்தவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அரச தரப்பிலிருந்து பதில்கள் இல்லை.

ஆனால் எதிரணி உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன இது குறித்து எழுப்பிய கேள்விக்கு அரசாங்கத்தின் பிரதம கொறடாவான் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்திருந்தார்.

அவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இதே வேளை இந்த விவகாரத்துக்குப்பிறகு ஐ.தே.கவின் பிரமுர்கள் எவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை. பாராளுமன்றில் ஐ.தே.க சார்பாக ரவி கருணாநாயக்க மாத்திரம் இருந்தாலும் அவர் தற்போது ஐ.தே.கவிடம் முரண்பட்டிருப்பதால் அது குறித்து ஒன்றும் பேசவில்லை.

சி.சி.என்

Share.
Leave A Reply