ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் பொலிஸார் ரோந்துப் பணியின் போது கையில் பயணப்பையுடன் நின்று கொண்டிருந்த 04 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68) என்பதும், சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தயடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார், இவர்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply