தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) தனது தேர்தல் பரப்புரைகளில் பின்வரும் மூன்று முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்தது.
1. புதிய மாற்றத்திற்கான ஆட்சிக்கு வாக்களியுங்கள்.
2. இன – மத – பேதமின்றி அனைவரும் இலங்கையர்களாக வாழ வாக்களியுங்கள்.
3. பொருளாதார தன்னிறைவைக் காண வாக்களியுங்கள் என்பவையாகும்.
மாற்றங்கள் என்பதில் தூய இலங்கை – அழகான நாடு, புன்னகைக்கும் மக்களைக் கொண்ட நாடாக ஆக்குவது என்பதாகும். இதில்
1. நிலைபேறான சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அழகும்
2. நாடு தழுவிய வகையில் வீண் விரயங்களைத் தவிர்த்தல்
3. நாடு முழுவதிலும் ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல்
4. பொருளாதார சுபீட்சத்தை அடைதல்
ஆகியன உள்ளடங்கும். மேற்சொன்ன நான்கும் தனித்தனியாக பல்வேறு வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளது.
இவ்வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த நிதி வளம் தேவை, பல புதிய சட்டங்கள் தேவை, புதிய பொறிமுறைகள் தேவை, வெளிநாட்டு முதலீடுகள் தேவை, மேலும் புதிய அணுகுமுறையும் தேவை. இவை இல்லாமல் மேற்சொன்ன விடயங்கள் செயல்வடிவம் பெறமுடியாது.
புதிய மாற்றங்கள் என்ற வகையில் இன, மத பேதமற்ற, ஓர் இனம் மற்றொரு இனத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத அனைத்து இன, மொழி, மத, கலாசார மக்களும் தமது தனித்துவங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இன, மத பொருளாதார, கலாசார மேலாதிக்கத்திற்கும் அவற்றின் அடைப்படையிலான இன மோதலுக்குமான அடிப்படைக் காரணிகள் கண்டறியப்பட்டு அவற்றைக் களைவதன் மூலமே இன சகோதரத்துவம் உருவாகவும் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையும் ஒன்றுபட்ட செயற்பாடும் உருவாக முடியும்.
இலங்கையின் அரசியல் யாப்பே இன, மத பேதத்தை உருவாக்கும் அடிப்படைவாதத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இலங்கையராக சிந்திக்க வேண்டுமாயின், மேற்கண்ட விடயங்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பு மாற்றமின்றி புதிய மாற்றம் சாத்தியமில்லை.
மாற்றத்தின் மற்றோர் அம்சம் நாடு தழுவிய வகையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல் என்பதாகும். இங்கு ஒழுக்க விழுமியங்கள் என்பதால் எவற்றைக் கூறுகின்றனர் என்பதில் தெளிவில்லை. எனினும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல், சட்டவிரோத, சமூகவிரோத, தேசவிரோத செயற்பாடுகளற்ற நாட்டைக் கட்டியெழுப்புதல் என பரந்த அளவில் பொருள் கொள்ளலாம்.
ஒழுக்க விழுமியங்கள் எனும்போது அவை மத, கலாசார அடிப்படையில் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கொண்டவையாகும். எனவே வேறுபட்ட ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின், இவ்வேற்றுமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவை அரசியல் யாப்பினூடாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
மாற்றம் என்பதன் இன்னோர் முக்கிய அம்சம் நாட்டை பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலையிலிருந்து சுபீட்சமடைந்த நாடாக மாற்றுதல் என்பதாகும். இது உள்நாட்டு பொருளாதார திட்டங்கள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள், இவற்றைச் சாத்தியப்படுத்தவல்ல சர்வதேச உறவுகள் என்பவற்றுடன் மிகுந்த தொடர்புடையவையாகும். மேலும் ஆட்சி ஸ்திரமாக இருப்பது மட்டும் போதாது. பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் மிகவும் முக்கியமானதாகும்.
அரசியல் ஸ்திரத்தன்மை என்பதில் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்ற இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டு வலிமையானதாக இருக்க வேண்டும். இன சமத்துவம் சகோதரத்துவம் நிலவ வேண்டும். பாரம்பரியமாக நாட்டை ஆண்டு வந்த கட்சிகளாலும் மறுதலிக்க முடியாத வகையில் கொள்கைகளும் செயற்பாடுகளும் மக்கள் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். இவை அனைத்தும் உள்ளடக்கியதே அரசியல் ஸ்திரத்தன்மையாகும். இதனை என்.பி.பி ஆட்சி எவ்வாறு அடையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேற்கண்ட விடயங்களை வெற்றிகரமாக கையாளும் வல்லமை கொண்டதாக தேசிய மக்கள் சக்தி இருக்கின்றதா, புரட்சிகர சக்தியாக இல்லாவிடினும் ஒரு முற்போக்கு ஜனநாயக சக்தியாக தன்னை நிலைநிறுத்துமா? என்ற கேள்வி உண்மையான ஜனநாயக காற்றைச் சுவாசிக்கும் மக்களிடம் தொக்கி நிற்கின்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ளுராட்சி சபைகளின் பங்களிப்பு பாரியதாகும். இந்த நாட்டின் சில மாநகர, நகர சபைகள் தவிர்ந்த பெரும்பாலான சபைகள் போதிய வருமானமோ, தேவையான ஆளணியோ, அத்தியாவசிய வாகனங்களோ, ஏனைய உபகரணங்களோ இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. மேலும், கழிவுகளைத் தரம்பிரித்து மீண்டும் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் திட்டங்களும் அவற்றைச் செயற்படுத்துவதற்கான மூலதனமும் தொழில்நுட்பமும் தேவைப்படுகின்றது. இவற்றை நிறைவு செய்ய போதிய வளங்கள் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
உள்ளுராட்சிகள் மாகாண சபைகளின் ஆட்சி எல்லைக்குள் உட்பட்டவை. எனவே, மாகாணங்கள் போதிய அளவு நிதி வளங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டாலன்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பானது வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியாது.
வீண் விரயங்களைத் தவிர்த்தல் என்பதில்
1. உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்களின் விரயம்.
2. அரசாங்க நிர்வாக குறைபாடுகளால் ஏற்படும் விரயங்கள்
3. இயற்கை மற்றும் மனிதரால் உருவாக்கப்படும் கழிவுகளால் ஏற்படும் விரயங்கள்
என பல வகைகளில் விரயங்கள் உள்ளடங்கும். இவற்றைத் தவிர்ப்பதற்கு பல்வேறு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவு உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்தி பாதுகாத்துப் பாவிப்பதற்கான தொழில்சார் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். விவசாயத்தை பெறுமதிசேர் தொழிற்துறையாக பிரகடனப்படுத்த வேண்டும். நிர்வாகக் கட்டமைப்புகளிலும் செயற்பாடுகளிலும் தரம் உயர்த்தப்பட வேண்டும். வேகமான சேவைகளை வழங்கவும் பெறவும் முறைமை ஏற்படுத்தல் அவசியம்.
அரசாங்கத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் மக்கள் நலன்களையும் உரிமைகளையும் மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனங்கள் அகற்றப்பட வேண்டும். இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக வெள்ளப் பெருக்குகளைத் தடுக்கும் வகையில், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்காத வகையில் அந்த நீரை மக்களின் தேவைகளுக்குப் பாதுகாக்கும் வகையில் நீரேந்தும் பகுதிகளை உருவாக்கி தேக்கி வைக்கவும் மேலதிக நீர் மக்களுக்கு பாதிப்பின்றி கடலில் கலக்கவும் இருக்கும் திட்டங்களைச் செம்மையாகச் செயற்படுத்துவதுடன், இதற்கான புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றிற்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த திட்டமும் தொழில்நுட்ப உதவியும் நிதி அனுசரணையும் இன்றியமையததாகும்.
இவற்றிற்கான போதிய வளங்களை உருவாக்கி, விரைவாக நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கத்தினால் முடியுமா என்பது கேள்வியே.
நாடு தழுவிய ரீதியில் ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதற்கு சட்ட ஆட்சி முக்கியமானதாகும். சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கான அமைப்பு எத்தகைய அதிகாரத் தலையீடுமின்றி, ஒழுக்கமிக்கதாகவும் மக்கள் நலன் சார்ந்தும் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த அமைப்பு மனித உரிமைகளையும் விழுமியங்களையும் மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த அமைப்பே நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அத்திவாரமாக இருப்பதால் இதில் நடைபெறும் ஊழல்களும் மனித உரிமை மீறல்களும் தடுத்து நிறுத்தப்படுத்தப்படுவதுடன் அதில் ஈடுபடும் அதிகாரிகள் எத்தகையவராயினும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியல் யாப்பே இன, மத, பாகுபாடு கொண்டதாகும். பௌத்த சாசனம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையில் பௌத்தத்திற்கு அதியுயர் இடமும் ஏனைய மதங்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற இடமும் வழங்கப்பட்டுள்ளது. பௌத்தத்திற்கான உயர்ந்த இடம் மற்றும் முன்னுரிமை என்பது பௌத்த பிக்குகளுக்கு உயர்ந்த இடம் முன்னுரிமை என்று ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் விரும்பிய இடங்களில் பிக்குகளோ, படையினரோ, தொல்லியல் திணைக்களமோ தனியாகவோ கூட்டாகவோ பௌத்த விகாரைகளைக் கட்டியெழுப்ப அதிகாரம் பெற்றவர்களாகச் செயற்படுகின்றனர். ஏனைய மதத்தலங்களை அழிக்கவும் அவற்றை ஆக்கிரமிக்கவும் அரசியல் அமைப்பின் இப்பிரிவு வாய்ப்பை வழங்குகின்றது. இங்கு ஏனைய மதங்களுக்கோ மற்றும் மதத் தலைவர்களுக்கோ சம அந்தஸ்து அல்லது சம அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மத அடிப்படையிலான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்குக்கூட பொலிசார் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது போன்றே தமிழ் மொழிக்கான இடமும் சிங்களத்திற்குச் சமமாக வழங்கப்படவில்லை. “இந்த நாட்டில் சிங்களம் அரச கரும மொழியாகும். மேலும் தமிழும் அரச கரும மொழியாகும்.” என்றே அரசியல் யாப்பு கூறுகின்றது. எனவே சிங்களமும் தமிழும் அரச கருமமொழியாகும் எனும் சமமான இடத்தை வழங்கவில்லை. இதனால் பெருமளவிலான நிர்வாக செயற்பாடுகள், தொடர்பாடல்கள் தனிச் சிங்கள மொழியில் நடைபெறுகின்றன.
மதத்தின் தலையீடு காணப்படுகின்ற எந்தவொரு நாட்டின் ஆட்சியும் வெற்றிபெற்றதாக வரலாறில்லை. எனவே, இலங்கையில் நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின், அரசியலில் மதத்தின் தலையீடு அகற்றப்படவேண்டும். மேலும், மக்கள் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் வழிபடவும் உரிமை வழங்கப்படும் அதேவேளை அவை சமத்துவமாகவும் ஒன்றின்மீது ஒன்று செல்வாக்கோ ஆதிக்கமோ செலுத்த முடியாத பாதுகாப்பையும் அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அதேபோன்று சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் தேசிய மொழிகள் என்பதும் இந்த நாட்டின் அரச கரும மொழிகள் என்பதும் யாப்பிலும் நடைமுறையிலும் ஏற்படுத்தப்படவேண்டும். இவைகள் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த நாட்டில் ஒழுக்க விழுமியங்கள் என்பதற்கான உண்மையான பொருள் நிலவும் என்பதுடன் அவ்வொழுக்க விழுமியங்களைப் பேணுவதற்கும் பாதுகாப்பதற்குமான சாத்தியங்களும் அமையும்.
இறுதியாக, பொருளாதார சுபீட்சம் அடைவதை எடுத்துக்கொண்டால் இங்கு உள்நாட்டு விவசாயம் உள்ளிட்ட உற்பத்திகள் அனைத்தும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இறக்குமதி செலவு குறைக்கப்படும். ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். இதற்கு விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் விஸ்தரிக்கப்பட வேண்டும். நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்கும் வழிமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். இவற்றிற்கு அரசின் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும்.
உள்நாட்டில் போதிய முதலீட்டாளர்களோ மூலதனமோ இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு முதலீகளைப் போதிய அளவு உள்ளீர்க்க முடிந்தாலே உற்பத்திகளை அதிகரிக்க முடியும். வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்க வேண்டுமாயின், இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை என்பதில் நாட்டின் பல்லினத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் அரசியல் யாப்பு அடிப்படையில் சகோதரத்துவம் பேணும் சமூகங்களாக அமைய வேண்டும்.
வல்லரசுகளின் போட்டிக்களமாகவும் அல்லது அவர்களது அரசியல் மோதல் களமாகவும் நாடு இல்லாதிருத்தல் வேண்டும். ஜனநாயகப் பண்புகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஆட்சிமுறை இருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் இரண்டு காரணங்களால் வெளிநாட்டு முதலீடுகளைப் பெருமளவில் கவரக்கூடிய நிலையில் நாடு இல்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான ஜேவிபி ஓர் இடதுசாரி முகத்தைக் கொண்டது. அத்தகைய ஆட்சியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள். இவ்வாட்சியாளர்கள் தாம் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டவர்கள் என அடிக்கடி கூறி வந்தாலும் அவர்கள் உண்மையில் சீனாவின் நெருங்கிய நட்பு சக்தி என்பது உலகறிந்த விடயமாகும்.
எனவே மேற்குலக நாடுகளோ அல்லது அவர்களது நட்பு சக்திகளோ தமது முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யும்படி ஊக்குவிக்கப் போவதில்லை. மேலும் ஜேவிபியின் வளர்ச்சியும் அதன் சீனாவுடனான நெருக்கமும் சர்வதேச அரங்கில் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய வகையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கோ அவற்றின் நேச சக்திகளுக்கோ பிடித்தமானதல்ல. எனவே இலங்கையை தமது நலன்களுக்குச் சாதகமான ஓர் ஆட்சி மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர். ஒருபுறம் இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதாக இராஜதந்திர ரீதியில் இந்நாடுகள் அறிவித்தாலும் உண்மை அதுவல்ல.
எனவே இந்த அரசாங்கம் விரைவாக உள்ளீர்க்கக் கூடிய முதலீடு என்பது புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளே. அதிலும் குறிப்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முதலீடே ஆகும். ஆனால் அதனை உள்ளீர்க்க வேண்டுமாயின், அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்கும் அதிகாரம் கொண்ட வகையில் இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கும் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும்.
ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்தே அசியல் யாப்பு மாற்றம் நிகழும் எனக் கூறப்படுவதால் இப்போதைக்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும் கவர முடியாது. எனவே பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியப்பாடுகள் பலவீனமாகவே உள்ளது. இன்றுவரை புதிய ஆட்சியாளர்ள் முன்னைய ஆட்சியாளர்களின் பாதையிலேயே நடைபோடுகின்றனர். ஊழல், இலஞ்ச ஒழிப்பு விடயத்தில்கூட இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை. பொருளாதார விடயங்களிலும் கடன் படுதலும் இறக்குமதிகளுமே தொடர்கின்றது. உற்பத்தி அதிகரிப்புக்கான அடித்தளங்கள்கூட இன்னமும் இடப்படவில்லை.
பாரம்பரியமாக ஆட்சிக்கட்டிலை அலங்கரித்துவந்த சிங்களக் கட்சிகள் ஜேவிபியின் ஆட்சி நிலைத்திருப்பதை அங்கீகரிப்பதென்பது பல வகையில் அவர்களின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் பங்கமானதாகும். எனவே இவ்வாட்சியைத் தோற்கடிக்க அவர்கள் கூட்டாகச் செயற்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு மேலாக, தேசிய மக்கள் சக்திக்குள் அதிருப்திகள் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. பல்வேறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கியதாகவே தேசிய மக்கள் சக்தி உள்ளது. தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை சம்பள உயர்வு பதவியுயர்வுகள், போதிய விடுப்புகள், சங்கத்தின் நற்பெயர் ஆகியவற்றை முன்வைத்தே அரசியலில் தம்மை இணைத்துக்கொள்கின்றனர். அவர்களது இத்தகைய கோரிக்கைகளை திருப்திகரமாக ஆட்சியாளர்கள் கையாளத் தவறும் பட்சத்தில் அவர்கள் ஆட்சிக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த வகையில் தேசிய மக்கள் சக்திக்குள்ளும் அதிருப்திகளும் முறுகல்களும் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. இதனைக் கையாள்வது ஜேவிபிக்கு எளிதானதல்ல.
இறுதியாக இனமோதல் தீர்வு தொடர்பில் ஆட்சியாளர்கள் தெளிவான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குவதும் மாகாணசபை மற்றும் அதிகாரப் பகிர்விற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருவதும் மேலும் இராணுவத்தையும் பௌத்தத்தையும் நிலைப்படுத்தி வருவதும் ஜேவிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான போதிய வசதிகளை மறுத்து அதிக மற்றும் விரைவான சேவைகளை அவர்களிடமிருந்து ஆளும் கட்சி எதிர்பார்ப்பதால் அந்த கட்சியின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளதாக அறிய முடிகின்றது. இவற்றை சீர்செய்வது இலகுவானதல்ல.
எனவே, புரட்சியாளர்களாக இல்லாவிடினும் முற்போக்கு ஜனநாயக சக்தியாக தன்னை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி போராடிவருவதே வெளிப்படுகிறது. இத்தனை சவால்களையும் சந்தித்து இவ்வாட்சி வெற்றி பெறுமா? என்ற கேள்வி இவர்களுக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலும் ஒட்டுமொத்த இலங்கையர் மத்தியிலும் எழுந்துள்ளது.
கலாநிதி க.சர்வேஸ்வரன் Thinakkural