உங்களை நம்பித்தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகாலம் மன்ற பணிகளில் என்னோடு இருந்த நீங்கள் அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

2026 தேர்தல் நம் இலக்கு. அதற்காக முனைப்போடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். என்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார், விஜயின் வேகமான அரசியல் முன்னெடுப்பு மற்றக் கட்சிகளையும் உற்று நோக்க வைத்திருக்கிறது, குறிப்பாக அதிமுகவினரிடம் ஒரு விதமான கலக்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

விஜயின் அண்மைக் கால நகர்வுகள் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழியில் மக்கள் மத்தியில் சென்று அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

காரணம் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 69 ஆவது திரைப்படத்துக்கு ஜனநயகன் என்று பெயர் வைத்திருப்பதோடு எம். ஜி. ஆர். நடிப்பில் வெளிவந்த எங்கள் வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் எம். ஜி. ஆர் வரும் தோற்றத்தைப் போல கையில் சாட்டையுடன் “நான் ஆணையிட்டால் ” என்ற பாடல் வரியுடன் விஜயும் கையில் சாட்டையை சுழற்றியபடி முதல் தோற்றத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது அதிமுக முகாமில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் எம்ஜிஆர் விசுவாசிக்களும் கோபத்தில் இருக்கிறார்கள்.

எம் ஜி ஆரின் புகழை விஜய் தவறாக பயன்படுத்துவதோடு “நான் ஆணையிட்டால்” என்ற வரியை அவர் பயன்படுத்துவதும் முறையல்ல நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்டுள்ளனர்.

விஜய் பயன்படுத்தியிருக்கும் எம்ஜிஆரின் வரிகள் அதிமுகவுக்கு பாதமாகத் தான் அமையும். எம். ஜி. ஆரின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் யுக்தி இது. விஜய் இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எம். ஜி. ஆர் விசுவாசிகளும் கருதுகின்றனர்

இதைப் பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் நிர்வாகிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். விஜயின் சினிமா போஸ்டரை எதிர்த்தால் அவரைக் கண்டு நாம் பயப்படுவது போலாகாதா? அதனை ஏன் நாம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்? தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் அவர் கூட்டணி வைக்க முன்வந்தால், அப்போது இது எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும், ஒரேயொரு பாடல் வரியைப் பயன்படுத்தினால் எம்ஜிஆரின் தொண்டர்கள் நம்பிவிடுவார்களா? அந்தளவுக்கு நம் கட்சித் தொண்டர்கள் பலவீனமானவர்களா? இன்னும் சொல்லப் போனால் திமுகவை எதிர்த்துத்தான் அவர் கடுமையாக அரசியல் செய்கிறார்.

அதனால் அந்தப் பாடல் வரியை திமுகவை சீண்டுவதற்காகவே வைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தேவைப்பட்டால் நாம் எதிர்வினையாற்றலாம். அது வரையில் அமைதியாக இருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதேபோல , அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டார்.

அந்த நிகழ்வு அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டது. அந்த வகையில் அந்த நிகழ்வையும் பாஜகவையும் கிண்டல் செய்வது போல, விஜய்பின் இந்த சாட்டை சுழற்றல் இருக்கிறது என்று பாஜகவுக்குள்ளேயும் ஒரு விவாதம் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், பாஜகவினரோ. “நான் ஆணையிட்டால்” என்ற எம். ஜி. ஆரின் பாடல் வரிகளை பயன்படுத்தியிருப்பதால் அதிமுக தான் கவலைப்பட வேண்டும். நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் நகர்வை கூர்ந்து கவனித்தால், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே போஸ்டர் மூலம் தாக்க முயற்சி செய்வதாகவே தோன்றுகிறது. அதுதான் விஜய்யின் நோக்கமாகவும் இருக்கலாம்.

எம் ஜி ஆரின் பாடல் வரிகளை வைத்துப் பார்த்தால் அதிமுகவுக்கு இது பாதகமாகவே அமையலாம். எம். ஜி. ஆர் விசுவாசிகளை தன்பக்கம் இழுக்கவே விஜய் இதை செய்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

விஜய் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவை தான் அதிகமாக எதிர்க்கிறார். அந்த வகையில் திமுகவை மிரட்டவே அந்தப் பாடல் வரிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதைப் பார்க்கலாம்.

ஆனால். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஏழைகளை வசீகரிக்கக் கூடிய தலைவர்கள் இல்லை.

அதனால் எம்ஜிஆர் பாடல் வரியை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்லலாம் என்றும் விஜய் நினைக்கலாம். இது அதிமுகவுக்குத்தான் நேரடிப் பாதிப்பாக இருக்கும், திமுகவுக்கு இது எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நம்பலாம்.

அதே நேரத்தில் அதிமுகவுக்கும். தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே இரகசியமாக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் பேச்சுஅடிபடுகிறது. கூட்டணி அமைந்தால் விஜய் தங்கள் கட்சிக்கு 60 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவியும் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகவும், 60 தொகுதியில் நின்றால் 30 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று விஜய் கணக்குப் போட்டே இதைக் கேட்டிருக்கலாம்.

ஆனால், அரசியல் களத்துக்கே வராத விஜய்க்கு எப்படி 60 சீட் கொடுக்க முடியும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தகவல் இருக்கிறது.

இவர்களின் எதிர்ப்பும் நியாயமானது தானே அரசியல் களத்தில் மக்களையே சந்திக்காத விஜயால் எப்படி முதல் தேர்தலிலேயே 60 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். களத்தில் மக்கள் சக்திவாய்ந்த கட்சிகளும் இருக்கின்றன என்பதை விஜய் மறந்துவிடக்கூடாது.

சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்து வெற்றி பெறலாம் என்று நினைப்பதும் கனவாகத்தான் இருக்கும். ஏற்கனவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் நிலை என்ன என்பதும் முன்னுதாரணமாக இருக்கிறது.

ஒருவேளை அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைந்தால் அது அதிமுகவுக்கு பின்னடைவையே தரும். கட்சி முழுமையாக விஜய் கைக்கு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் அதிமுகவில் தற்போது உள்ள பிளவுகளால் மக்கள் மத்தியில் அதற்கான அங்கிகாரம் குறைந்து வருவதோடு எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை விமர்சனம் செய்வதால் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நம்புவதும் பின்னடைவுக்கு காரணமாக இருக்கிறது.

விஜய்யை, அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்தால் அது சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு சமம் என்று அதிமுகவுக்குள்ளேயும் புகைச்சல் இருக்கிறது.

தற்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தால் திமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ரெங்கராஜ் பாண்டே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏனென்றால் திமுகவைத் தவிர மற்ற கட்சிகளிடம் கூடடணி பலம் இல்லை. அதனால், திமுகவே வெற்றி பெறும் என்று அவர் உறுதியாக கூறுகிறார்.

இன்றைய அரசியில் களத்தை அவதானித்தால் அதுதான் சரி என்ற நிலையும் இருக்கிறது. இதை ஒரு காரணமாக வைத்தே எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யலாம்,

ஆனால், கட்சி முழுவதுமே விஜய் கைக்கு போய் விடுமோ என்ற பயமும் இருக்கிறது. கூட்டணி இல்லாமல் அதிமுகவால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குக் கூடவாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயமும் இருக்கிறது.

பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே பல முயற்சிகளை எடுத்து வருகிறது, ஆனால், அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் வரையில் அதற்கு சாத்தியம் இல்லை.

அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மாநில தலைமையை மாற்றுவதற்கு அடிக்கடி டெல்லி சென்று வருகின்றனர், அப்படி மாற்றம் இல்லை என்றால் பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமையவும் வாய்ப்பு இருக்கிறது.

அதில் பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கிய அங்கம் வகிக்கலாம். ஆனால், அது வலுவான கூட்டணியாக அமையுமா ? என்பதும் சந்தேகமே. இப்படி குழப்பமான சூழலில் மக்கள் திமுக கூட்டணியையே ஆதரிப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

திமுக கூட்டணிக் கட்சிகளிடையே மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பல உரசல்கள் இருந்தாலும் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு இல்லை. அப்படி வெளியேறினாலும் எங்கே போவது என்ற குழப்பமும் அவர்களுக்கு இருப்பதால் திமுக கூட்டணியிலிருந்து விலக மாட்டார்கள் என்பதை நம்பலாம்,

ஆனால், ஆட்சியில் பங்கு என்று அவ்வப்போது ஒரு அலை எழுந்து பின்பு ஓய்வதுமான நிலையும் இருக்கிறது. கூடுதல் தொகுதிகளை கேட்பதற்கான யுத்தியாகக்கூட இதைப் பார்க்கலாம், திமுக தனித்து நின்றால் கூட, இன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கூட்டணிகள் மூலம் பலம் கூடுதலாக கிடைக்கும் என்பதால் திமுக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்தே செல்லும்.

நடிகர் விஜயின் வருகையால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை, அவரும் அரசியலில் இருக்கிறார் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இன்று அரசியல் கட்சி தொடங்குபவர்கள் எல்லோரும் மறுநாளே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்றே அரசியலுக்கு வருகிறார்கள்.

என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது போல புதிதாத கட்சித்தொடங்கியவர்களிடம் அந்தக் கனவு நிறைய இருக்கிறது. இது தவறு இல்லை என்றாலும் நிறைய அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும். எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. முதலில் மக்களின் மனங்களில் இடம் பிடிக்க வேண்டும் அதன் பிறகுதான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.

Share.
Leave A Reply