அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார்.
இதற்கு கனடா அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவோவில் நேற்று அவர் கூறியதாவது:
புவியியல் காரணமாக அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. கடந்த கால வரலாறால் இரு நாடுகளும் நண்பர்களாக உள்ளன. பொருளாதாரத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் மிக நெருங்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. காலத்தின் கட்டளையால் இரு நாடுகளும் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் இருண்ட காலங்களில் கனடா உற்ற நண்பனாக செயல்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் போர் முதல் தற்போது கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பது வரை அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம்.
கடந்த கால நட்புறவை ர் ட்ரம்ப் முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் கனடா பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து வர்த்தக போரை தொடங்கி உள்ளார்.
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கிறோம். இது அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.