வடகிழக்கு சிரியாவை அடைய நாங்கள் டிகிரிஸ் ஆற்றின் குறுக்கே மோசமான நிலையில் உள்ள மிதக்கும் பாலத்தை கடந்து சென்றோம்.
இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரியாவின் எண்ணெய் வெளிகள் வழியாக எங்களை அழைத்துச் செல்லும்போது எங்கள் பேருந்து பயங்கரமாக குலுங்கியது. அந்த சாலையோரம் முழுவதும் கச்சா எண்ணெயை இறைக்கும் இயந்திரங்கள் இருந்தன.
சிரியாவின் இந்தப்பகுதி குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குர்து மக்கள், இந்த இந்தப் பகுதியை ‘ரோஜாவா’ என்று அழைக்கின்றனர். இதற்கு பொருள் மேற்கு குர்திஸ்தான் என்பதாகும்.
2012-ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், அதை சுயாட்சி பெற்ற பகுதியாக அறிவித்து, குர்து மக்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இப்பகுதி குர்துகள் தலைமையிலான ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் பஷர் அல் அசதின் அரசு இதனை எப்போதும் அங்கீகரித்தது இல்லை. அவர் அதிகாரதிலிருந்து வீழ்ந்த பின்னரும் இப்பகுதியின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போருக்கு பிறகும் சிரியாவின் குர்துகள், வடக்கில் உள்ள அதன் அண்டை நாடான துருக்கியுடன் பல ஆண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றனர். இந்த மோதல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள கோபனி நகரை அடையும் வரை, அப்பகுதியில் பல நகரங்கள், கிராமங்களை ஐ.எஸ் குழு கைப்பற்றியது.
ஐஎஸ் குழுவினர் இந்த நகரினுள் நுழையமுடியவில்லை, ஆனால் அவர்கள் பல மாதங்களுக்கு முற்றுகையை தொடர்ந்தனர்.
2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் உதவியுடன் குர்து தலைமையிலான ஆயுதப் படையினர் இந்த முற்றுகையை முறியடித்தனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற, இதன் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நகரவாசிகளுடன் நானும் இணைகிறேன்.
கோபனி நகரத்தின் நுழைவாயிலில் தங்களது 50-களில் உள்ள பெண்கள் ஏகே-47 துப்பாக்கிகளுடன் சோதனைச்சாவடிகளை காவல் காக்கின்றனர். ஐஎஸ் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். பல பெண்கள் தாமாக முன்வந்து அனைத்து பெண்கள் பாதுகாப்பு பிரிவில் (YPJ) சேர்ந்தனர்.
நகரை சுற்றி நாங்கள் வாகனத்தில் செல்லும்போது, இந்த போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்னமும் பார்க்கமுடிகிறது. அத்துடன் உயிரை இழந்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் அச்சிட்ட சுவரொட்டிகளையும் பார்க்கமுடிந்தது.
ஆனால் நகரின் முக்கிய சதுக்கத்தில் , திருவிழா போன்ற மனநிலையே நிலவுகிறது. வண்ணமயமான குர்து உடைகளை அணிந்துகொண்டு சிறுவர்களும், சிறுமிகளும் கைகோர்த்து ஆடிப் பாடி கொண்டாடுகின்றனர்.
ஆனால் மூத்த தலைமுறைக்கு, இது இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு தருணம்தான். “கோபனி நகரில் வீரமரணம் அடைந்த எனது சகோதரன் மற்றும் மற்றவர்களின் நினைவை போற்றும் விதமாக நேற்றிரவு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன்,” என்கிறார் 45 வயதான நியுரோஸ் அகமது. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன.
ஜனவரி 2015-ல் ஐஎஸ் முற்றுகை முறியடிக்கப்பட்ட பின்னர் கோபனி
துருக்கியுடன் மோதல்
குர்துகள் தலைமையிலான சிரியா ஜனநாயக படை (SDF) வடகிழக்கு சிரியாவில் ஐஎஸ்-க்கு எதிராக வெற்றி பெற்றதாக 2019-ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் ஐஎஸ்ஸிடம் பெற்ற விடுதலை நிரந்தர அமைதியை கொண்டுவரவில்லை.
துருக்கியும், சிரியா தேசிய ராணுவம் (SNA) எனப்படும் துருக்கியின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்களின் கூட்டணியும் 2016 முதலே சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு எதிராக பல ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. மேலும் எல்லையில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.
சிரியா ஜனநாயக படையின் முக்கிய அங்கமான மக்கள் பாதுகாப்பு பிரிவை (ஒய்பிஜி), குர்து தொழிலாளர் கட்சியின் ஒரு நீட்டிப்பாக துருக்கி கருதுகின்றது.
குர்து தொழிலாளர் கட்சி துருக்கியில் குர்து மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியுள்ளது. அதனால் அதை பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்தது. சிரியா ஜனநாயக படையை தனது எல்லையில் இருந்து பின்னுக்கு தள்ள துருக்கி விரும்புகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அசத் ஆட்சி வீழ்ந்த பின்னர், துருக்கியின் ஆதரவு பெற்ற சிரியா தேசிய ராணுவம் யுப்ரேடிஸ் நதிக்கு மேற்கே சிரியா ஜனநாயக படையின் வசமிருந்த பகுதிகளை கைப்பற்ற புதிய முயற்சியை மேற்கொண்டது.
கோபானி நகரின் நுழைவாயில்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
இப்போது இந்த மோதல் கோபன் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை எட்டியுள்ளது.
“இங்கே கேமராவில் படம் பிடிக்காதீர்கள், மற்றொரு முற்றுகைக்கு தயாராகும் வகையில் நாங்கள் நகருக்கு கீழே சுரங்கங்கள் அமைத்துள்ளோம்,” என நகரில் இருக்கும் குர்து படைத்தளபதி ஒருவர் அமைதியாக என்னிடம் தெரிவித்தார்.
நகரில் எங்கும் பெட்ரோல் மனம் வீசுகின்றது, ஜென்ரேட்டர்களின் சத்தம் எல்லா பகுதிகளிலும் ஒலிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கி விமான தாக்குல்களில் பெரும்பாலான மின்சார உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆண்டெனாக்கள் கூட அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
“ஐஎஸ்-ஐ கோபானி நகரில் தோற்கடித்த பின்னர் துருக்கியையும் அதன் பினாமிகளும் எங்களது நகரை ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம், அவர்களையும் தோற்கடிப்போம்,” என்கிறார் நியுரோஸ் அகமது.
ஒரு உணவகத்தில் இருந்தோம், நாங்கள் உள்ளூர்வாசிகள் அல்ல என்பதை உணர்ந்தவுடன் மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். நரைத்த முடி மற்றும் கைகளில் ஒரு குச்சியுடன் இருந்த முதியவரிடம் அவரது வயது என்னவென்று கேட்டேன். அவருக்கு 80வயதிருக்கும் என நான் யூகித்தேன், ஆனால் அவரது பதில் என்னை சங்கடப்படுத்துகிறது. “எனக்கு 60 வயது.” என்றார் அவர்.
இவ்வளவு உயிரிழப்புகளையும் , ரத்தம் சிந்தியதையும் பார்த்த பின்னர் இங்கிருக்கும் மக்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
இப்போது மற்றொரு யுத்தத்தின் அபாயம் எழுந்துள்ளது.
நியுரோஸ் அகமதுவின் சகோதரர் ஐஎஸ் முற்றுகையில் உயிரிழந்தார்.
மக்கள் மீது தாக்குதல்
துருக்கி தயாரித்த டிரோன்களும், துருக்கி போர் விமானங்களும் சிரியா ஜனநாயக படையின் நிலைகள் மற்றும் நகரை சுற்றிய விநியோகத்திற்கான வழிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. எதிர்த்து போராடிய குடிமக்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பிராந்திய மருத்துவமனையில் காயமடைந்தவர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த 28 வயதான லீயா பன்ஸியை கண்டேன். அவர் ஒரு அமைதிக்கான செயற்பாட்டாளர் ஆவார்.
இவர் ரோஜாவாவில் ஒரு பெண்கள் தங்குமிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வலராக பணியாற்றியிருக்கிறார்,
ஜனவரி மாதம் தாம் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காணொளியை அவர் எனக்கு காட்டினார். அந்தக் காட்சிகளில் வானத்திலிருந்து இரண்டு குண்டுகள் விழுந்து நடனமாடும் மக்கள் கூட்டத்தைத் தாக்குவதைக் காட்டுகின்றன.
இந்த போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த டிஷ்ரீன் அணையின் அருகே நடைபெற்றது. இதில் ஆறு குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் சிரியா ஜனநாயக படை கூறுகிறது.
“எனக்கு அருகே இருந்த முதியவர் ஒருவரும் காயமடைந்தார்,” என தனது படுக்கையிலிருந்து அவர் தெரிவித்தார்.
“எனக்கு கொஞ்சம் ரத்த இழப்பு ஏற்பட்டது… ஆனால் நாங்கள் அம்புலன்ஸின் உள்ளே நுழைந்த பின்னர், எங்கள் ஆம்புலன்ஸ் அருகே மற்றொரு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது,” என அவர் மேலும் கூறுகிறார்.
குர்திஷ் ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் மீதான தாக்குதலை துருக்கிய-சிரியா தேசிய ராணுவ கூட்டணியின் “ஒரு போர்க்குற்றம்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.
”குடிமக்கள் மீதும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதும் நடந்த தாக்குதலில் துருக்கிக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை” என துருக்கியின் வெளியுறவுத்துறை பிபிசியிடம் தெரிவித்தது.
குறிப்பிட்ட அந்த அணை மீதான கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க மனித கேடயங்களாக பயன்படுத்துவதற்காக பொதுமக்களை சண்டை நடக்கும் பகுதிக்கு சிரியா ஜனநாயக படை வேண்டுமென்றே அனுப்புவதாகவும் துருக்கி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தடுமாற்றம்
சிரியாவின் புதிய தலைவர் அகமது அல்-ஷாரா கடினமான ஒரு சூழலுக்கு இடையே மாட்டிக்கொண்டிருக்கிறார்.
சிரியாவில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதாக உறுதியளித்த இடைக்கால அதிபர் அல்-ஷாரா, ஆயுதம் தாங்கிய அனைத்து பிரிவினரையும் ஆயுதங்களை கைவிட கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவரது இஸ்லாமிய அமைப்பான ஹையத் தஹ்ரீர் அல் ஷாம் (ஹெச்டிஎஸ்) அசத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியிருந்தது. வடகிழக்கிற்கு ஒரு தீர்வு காண்பதற்கு சிரியா ஜனநாயக படை உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் குர்து பிரிவுகளை உள்ளடக்குவது, அவரது முக்கிய கூட்டாளிகளில் ஒன்றான துருக்கியுடன் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்கிழமை சிரியாவின் எதிர்காலம் குறித்த தேசிய கூட்டத்தை ஷாரா தொடங்கியபோது, குர்து தன்னாட்சி நிர்வாகம் அதில் பங்கேற்கவில்லை. தாங்கள் அழைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகே பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளத்திற்கு அருகே ரகசிய இடத்திலிருந்து என்னிடம் பேசிய சிரியா ஜனநாயக படையின் தலைவர் ஜெனரல் மாஸ்லோம் அப்தி, தாம் ஷாராவை டமாஸ்கஸில் முன்பே சந்தித்திருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இருதரப்பும் இதுவரை எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை.
“உண்மையின் துருக்கியுடனும், அதன் பினாமிகளுடனும் நாங்கள் இன்னமும் போரிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். துருக்கி போர்விமானங்களும், டிரோன்களும் எங்கள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன.”என்கிறார் அவர்.
“சிரியாவில் புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அவர்களது கருத்துக்கள் நேர்மறையாக இருக்கின்றன. ஆனால் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு எதிராக செயல்படும்படி அவர்களுக்கு துருக்கியிடமிருந்து அழுத்தம் வருகிறது. ஆனால், குர்து உரிமைகளை அங்கீகரிக்கும்படி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில அரபு நாடுகள் அவர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன,” என்கிறார் அவர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஐஎஸ்-க்கு எதிரான சண்டையில் சிரியா ஜனநாயக படையை சேர்த்தவர்கள்தான் மிகவும் நம்பகமான கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர்.
இன்றோ, ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை எதிர்கொள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படைகள் குர்து கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கின்றன.
ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் படைகளை திரும்பப்பெற்று, துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்கும், ஐஎஸ்-ன் எழுச்சிக்கும் காரணமாகிவிட வாய்ப்பிருப்பதாக குர்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிரியா ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்கள் மற்றும் சிறைகளில் இன்னமும் சுமார் 40,000 ஐஎஸ் குழுவை சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும், 10,000 வரை ஜிகாதிகளும் இருக்கலாம் என கணிக்கப்படுவதாக அப்தி கூறுகிறார்.
“துருக்கி தாக்குதல் நடத்தினால், எங்களுடைய படைகளை இடமாற்றம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அப்படி நேர்ந்தால் சிறைகள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை விடுவிக்க ஐஎஸ் அமைப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.” என்கிறார் அவர்
ரோக்சனா முகமது
நிச்சயமற்ற எதிர்காலம்
ஐஎஸ் குழுவுக்கு எதிராக சண்டையிட்ட பெண்களை மட்டும் உள்ளடக்கிய பெண்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது
பெண்கள் பாதுகாப்பு பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோக்சனா முகமதுவின் அலுவலக அறை சுவர்கள் போரில் உயிரிழந்த சக பெண் கமாண்டர்களின் புகைப்படங்களால் நிறைந்துள்ளது.
“சிரியாவின் புதிய தலைமையில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட்டு நாங்கள் பார்க்கவில்லை,” என்கிறார் அவர். “ஏன் ஒரு பெண் பாதுகாப்பு அமைச்சராக இருக்கக்கூடாது?”
இந்தப் பகுதியில் பெண்கள் தங்களது உரிமைகாக போராடியதாக ரோக்சனா முகமது சொல்கிறார். அரசியல், சமூக மற்றும் ராணுவ வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
“எங்களது உரிமைகள் மதிக்கப்படாவிட்டால் , நாங்கள் எப்படி ஆயுதங்களை கைவிடுவோம்?.” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
எனவே சிரியாவில் நிலைத்தன்மை அருகில் தெரிவதாக சிலர் நம்பினாலும், குர்து மக்களை பொறுத்தவரை எதிர்காலம் தெளிவில்லாமல்தான் இருக்கிறது. புதிய சிரியாவில் அவர்கள் கூட்டாளிகளாக அங்கீகரிக்கப்படுவார்களா அல்லது மற்றொரு வாழ்க்கை போராட்டதை சந்திப்பார்களா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.