-கொதிநிலையில் உலகளாவிய அரசியல் களம்

உலகளாவிய அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நகர்வுகளினால் கொதிநிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் ஏறக்குறைய தோல்வி கண்டுள்ளதாகவே தெரிகின்றது.

அதேபோல உலக அரசியல், பொருளாதார கட்டமைப்புகள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் நகர்வதாக தெரிகிறது.

உலகத்தின் அரசியல், பொருளாதார ஒழுங்கு, புதிய வடிவத்தை நோக்கி பழைய ஏகாதிபத்திய பாணியில் வடிவமைக்கப்படுவதாக தெரிகின்றது. இக்கட்டுரையும் உக்ரைன்-ரஷ்யப் போரில் ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கடியையும் அதன் விளைவுகளையும் தேட முயல்கிறது.

குறிப்பாக அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது தடவை பதவியேற்ற பின்னர் இஸ்ரேலிய – ஹமாஸ் போரும் உக்ரைன் – ரஷ்யப் போரும் சமாதான உரையாடல்களை நோக்கி அமெரிக்கவால் நகர்த்தப்பட்டது.

இரு போர்களுக்குமான அடிப்படை அமெரிக்காவும் மேற்குலகமும் என்பதை சமாதான உரையாடல் உணர்த்துகிறது. இரு போர்களுக்கும் பின்னால் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவுகள் அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்துவது என்பது சமாதானபூர்வமாக தீர்த்துக் கொள்வது என்பது அமெரிக்க ஜனாதிபதியின் நீண்ட காலத் திட்டமாக இருந்தது.

அதனையே வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி மட்டுமின்றி உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் அதே பாணியில் உரையாடியதை கண்டுகொள்ள முடிந்தது.

இச் சந்திப்பின் நெருக்கடி மிக்க தருணங்களுக்கு உக்ரைன் ஜனாதிபதியின் அரசியல் முதிர்ச்சியின்மையும் உரையாடல் உத்தியின்மையும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடியை எதிர் கொள்வதற்கான உபாயங்கள் எதுவும் அற்ற தலைவராக உக்ரைன் ஜனாதிபதி காட்சியளித்தார். அவரது வாதங்களும் விவாதங்களும் நியாயமானதாகவே தெரிந்தது.

அவரது நியாயத்தன்மைகளும், கோரிக்கைகளும் உண்மைகளும் சரிகளும் கொண்டதாகவே காணப்பட்டது. ஆனால் உலக அரசியல் வரலாறு முழுவதும் நியாயங்களுக்கும் உண்மைகளுக்கும் வாய்ப்பில்லாதது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக அரசியலிடம் நியாயம் கோர முடியாது என அரசியலின் இலக்கணத்தில் ஹரோல் லக்ஸ்சி குறிப்பிட்டுள்ளமை நினைவு கொள்ளத் தக்கது.

உலகளாவிய அரசியலின் வடிவம் உத்திகளும் தந்திரங்களும் நிறைந்ததாகும். அதனை கடைப்பிடிக்காத எந்த தலைமையும் எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாற்றில்லை.

அத்தகைய ஒரு நிலையை நோக்கியே ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகை உரையாடலை தந்திருக்கிறார்.

தர்க்கங்கள் புரிவதும் நியாயத்தை முன்னிறுத்துவதும் நியாயவாதிகளுக்கு முன்னால் மட்டுமே சாத்தியமானது.

உலக அரசியலின் இருப்பு அநியாயத்தின் வடிவமாகவே உள்ளது. தந்திரங்களையும் உபாயங்களையும் கொண்டு இயங்க முடியாத தலைமைகள் காணாமல் போய்விடும்.

அதில் காணாமல் போவது தலைமைகள் மட்டுமல்ல அந்த தலைமைகளை சார்ந்திருக்கின்ற மக்கள் கூட்டமும் துயரங்களை சந்தித்துக் கொள்ளும்.

ஜெலன்ஸ்கிக்கும் ட்ரம்ப்க்கும் இடையிலான உரையாட சமதரப்பாக இருந்ததோடு விவாதங்களையும் நியாயங்களையும் ட்ரம்ப் கேட்பதாக அமையவில்லை. ஒரு தரப்பாக ஜெலன்ஸ்கி அதிகம் முன்வைத்ததாக அமைந்திருந்தது.

ஆனால் அவை எதுவும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் செல்லுபடியாகாது. அமெரிக்க ஆட்சியாளர்களின் வாதங்களை ஏற்றுக்கொள்வது என்பதை விட அதனை எதிர்க்காமல் உத்திகளுக்குள்ளால் எதிர்கொள்வதே ஆரோக்கியமான அரசியலுக்கான பயணமாகும். அது ஒருவகையில் அயோக்கியத்தனமானதாக இருக்கும்.

நடைமுறை அத்தகைய அயோக்கியத்தனத்துக்குள் அரசியலின் இருப்பு கட்டமைக்கப்பட்டு வளர்ந்திருக்கின்றது.

அமெரிக்கா உக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகள் அமெரிக்காவை விட உக்ரைனுக்கே அதிக சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியது. அது சார்ந்து ஆழமான தேடல் அவசியமானது.

முதலாவது உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்துக்கு முன்னர் பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவேல் மைக்ரோன் (25.02.2025) அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாடலை முதன்மைப்படுத்தியிருந்தார்.

உக்ரைன் — ரஷ்யாவுக்கு இடையிலான சமாதான முயற்சிக்கான உத்தரவாதங்களும் இரு நாட்டுக்குமான போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான எண்ணங்களும் இரு தலைவர்களாலும் முன்னொழியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

அதனை அடுத்து பிரித்தானிய பிரதமர் கிர் ஸ்ராமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பை வெள்ளை மாளிகையில் மேற்கொண்டார்.

அவர்கள் இருவரது உரையாடலும் உக்ரைன்- ரஷ்ய சமாதானத்துக்கான கதவுகளை திறப்பதற்கான முதலீடாக அமைந்திருந்தது.

இருநாட்டுக்குமான உறவே முக்கியத்துவத்தை கொண்டதுடன் நேட்டோவின் தனித்துவத்தையும் இரு தலைவர்களும் உரையாடிக் கொண்டனர். அதனை அடுத்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்க்கியின் பயணம் திட்டமிடப்பட்டது.

அமெரிக்காவின் கூட்டு முயற்சியோடு உலகத்தை மேற்குலகை வரைவுகளுக்குள் வைத்திருப்பதில் கடந்த பல தசாப்தங்கள் அவர்கள் வெற்றி கண்டனர். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நேட்டோ எனும் வலுவான இராணுவ கட்டமைப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு உலக அரசியல், பொருளாதார, இராணுவ நியமங்களை ஏனைய கண்டங்கள் மீது பிரயோகித்து வருகின்றன.

இரண்டாம் உலகம் யுத்தத்தின் வெற்றி, பனிப்போரின் வெற்றி, இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான வெற்றி என முழு உலகத்தையும் ஆளுகை செய்வதற்கான அமெரிக்க-ஐரோப்பிய கூட்டின் ஒத்துழைப்பே காரணமாகும்.

இதனையே அமெரிக்க- ஐரோப்பிய கூட்டு கட்டமைத்து வருகின்றது. இத்தகைய சூழலில் அமெரிக்கா ஐரோப்பாவை முரண் நிலைக்கு கொண்டு செல்வதும் ஐரோப்பா அதனை எதிர்நிலைக்குட்படுத்த முயல்வதும் வரலாற்றில் அவ்வப்போது நிகழ்ந்தது.

ஆனாலும் அவை ஒரு முழுமையான எதிர் நிலையாக எழுச்சி பெறவில்லை. அடுத்து நான்கு வருடங்கள் ஐரோப்பா அமெரிக்காவை அனுசரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதற்காக உக்ரைனுக்காகவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்காகவும் ஐரோப்பா – அமெரிக்காவை எதிர் நிலையில் நிறுத்தும் என்ற விவாதம் பலவீனமானது.

அத்தகைய பலவீனத்தை ஐரோப்பிய தலைவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதே ஜெலன்ஸிக்கு முன் ஐரோப்பியத் தலைவர்களின் அமெரிக்க ஜனாதிபதியுடனான உரையாடல் அமைந்திருந்தது. ஜலன்ஸ்கியின் வருகைக்கான ஒரு முன்னோட்டமாகவே அது காணப்பட்டது.

தவிர்க்க முடியாமல் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுக்கு நிகராக தன்னை கட்டமைக்க முயன்றது. வெள்ளை மாளிகையின் இருந்து வெளியேற்றப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஐரோப்பிய – அமெரிக்க முறுகல் என்பது பகைமைக்குள்ளோ எதிர் நிலைக்குள்ளோ செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது.

இரண்டாவது உலகளாவிய ரீதியில் நேட்டோ என்கின்ற இராணுவ கட்டமைப்பு மட்டுமே நிலையான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. அத்தகைய நேட்டோவை மையமாகக் கொண்டே கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தென்பூகோள நாடுகளையும் மேற்குலகம் கட்டுப்படுத்தி வருகிறது.

அதனால் அத்தகைய அமைப்பு தகர்ந்து போவது என்பது அடிப்படையில் மேற்குலகத்தின் அரசியல் பொருளாதார இருப்பு காணாமல் போவதற்கான வாய்ப்பை தோற்றுவித்துவிடும். நேட்டோவில் உக்ைரனின் இணைவதை கைவிடுவது பொருத்தம் என்ற வாதத்தை அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிய ஆரம்பித்திருக்கிறார். அதுவே இங்கு எழுந்திருக்கும் மிகப் பிரதான சர்ச்சையாகும்.

உக்ரையின்- ரஷ்ய தாக்குதலுக்கு பின்னால் இருந்ததும் அமெரிக்க- ஐரோப்பிய முறுகலுக்குப் பின்னால் இருப்பதுவும் நேட்டோவே. நேட்டோவை ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைனை இணைத்துக் கொள்வதனால் நெருக்கடிக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலை ஒன்றை உணர முடிகிறது.

பிரான்சின் ஜனாதிபதி பிரித்தானியாவின் பிரதமர், அமெரிக்கா ஜனாதிபதியோடு உரையாடிய போது நேட்டோவின் எதிர்காலம் பற்றிய விரிவான எண்ணங்களை பரிமாறியுள்ளனர்.

எனவே நேட்டோவை பலவீனப்படுவது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பலவீனப்படுத்துவதாக அமையும். இதனால் மேற்குலக அரசியல் அல்லது மேலாதிக்க அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகின்ற நிலை ஏற்பட்டுவிடும். இதனுடைய பலியிடலே மேற்குலகத்தின் அரசியலாக காணப்படுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற சூழல் என்பது உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது ஜெலன்ஸிகி — ட்ரம்ப் சந்திப்பு அதிக குழப்பத்தை தந்துள்ளது. இருவரது உரையாடல்களிலும் மேலோங்கியிருந்த அம்சமாக ட்ரம்பின் மேலாதிக்க அணுகுமுறையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விம்பமும் வெளிப்பட்டது.

ஜெலன்ஸ்கி அதனை எதிர்கொள்ளும் தலைவராக தன்னை காட்டிக்கொள்வதில் கரிசனை கொண்டிருந்தார். சமாதான உடன்படிக்கை பற்றி நீண்ட விவாதத்தை இரு தலைவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.

அவை எதிலும் ஜெலன்ஸ்கி உடன்படாதது மட்டுமின்றி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீதும் எல்லையற்ற விமர்சனங்களை முன்வைத்தார். 26 தடவை போர் நிறுத்த உடன்பாடுகளை புட்டியின் மீறியிருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அது மட்டுமின்றி அமெரிக்காவின் நிதி ஒத்துழைப்பையும் ஆயுத தளபாடங்களின் உதவிகளையும் முழமையாகவே அவமதிக்கும் விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது.

அதனை அமெரிக்க ஜனாதிபதி தனது இன்ஸ்டாகிராம்ல் வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய சூழலில் உக்ரைன் ஜனாதிபதியின் அணுகுமுறை போரில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை எதிர்கொள்ளுகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மீறி ஐரோப்பா, நேட்டோ தலைமை தாங்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அவ்வாறே மேற்குலகத்தின் தலைமை அமெரிக்காவைக் கடந்து ஐரோப்பாவுக்குள் ஏற்படுமாக இருந்தால் ஐரோப்பிய அரசுகளுக்கு இடையில் எதிர்நிலை வாதங்கள் தவிர்க்க முடியாமல் எழுச்சி பெறும். அதனால் அதற்கான வாய்ப்பு உக்ரைனை அதிகம் பாதிக்கும்.

இத்தகைய சாத்தியமற்ற சூழல் உக்கரையி பாதிக்கும். போருக்கான ஒத்துழைப்பை மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல நேட்டோவில் இருக்கிற ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வழங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலை ஏற்படும்.

எனவே உக்ரைன் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை நோக்கிய பயணம் தோல்வியில் முடிந்தது என்பதைவிட போர் முனைப்பும் சமாதானம் உழைப்பும் தோல்வி அடைந்துள்ளதாகவே தெரிகின்றது. இதிலிருந்து உக்கரைன் இருப்புக்கான வாய்ப்புகள் உக்ரைனுக்குள் நிகழக்கூடிய மறுசீரமைப்புகளாலும் பிராந்திய சர்வதேச சக்திகளின் அழுத்தங்களினாலும் சாத்தியப்படக் கூடியது.

ஜெலன்ஸ்கி ஒரு அரசியல் வாதத்தை அமெரிக்காவை முன் வைத்துக்கொண்டு தொடங்கி இருக்க முடியும். ரஷ்ய ஜனாதிபதியை அமெரிக்காவை வைத்துக் கொண்டே கையாண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன.

எல்லாவற்றையும் அவரது பிடிவாதமும், தூரநோக்கற்ற அரசியல் உத்தியும், தந்திரோபாயமற்ற உரையாடல் மொழியும் நெருக்கடிக்கு தள்ளியள்ளது. ஜெலன்ஸ்கி தென்பூகோள நாடுகளின் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கும் உக்ரைனின் எதிர்காலத்துக்கும் சீரோவான தலைவராகவே மாறி இருக்கிறார்.

ரி.கணேசலிங்கம்-

Share.
Leave A Reply