ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. இப்போது அநுர அரசும் நூறு மில்லியன் யாழ் நூலகத்திற்கு தந்து பிராயச்சித்தம் தேடுகிறார்கள் போல தெரிகிறது.
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் என்று சொல்லி மக்களை விழிப்படைய வைத்தார் இங்கர்சால். அப்படித் தான் இந்த அரசும் தமிழ் மக்களின் மேல் கரிசணை கொண்டு புதிய வழியை நோக்கி வழியை காட்ட விளைகின்றனர் போல!
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்ட போது புத்தகங்கள் தான் என்றாராம் அமெரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கை வரலாற்றை மாற்றிய பெருந் தலைவர் மார்டின் லூதர்கிங். நூலகத்தை எரித்த சிங்கள அரசிற்கு இப்போது தான் அரச பயங்கரவாதம் பற்றி தெளிவு பெறுகின்றதோ எனவும் தோன்றுகிறது.
அணையாத அறிவாலயம் :
1981 ஜூன் 1இல் எரிக்கப்பட்ட அணையாத அறிவாலயமாகிய யாழ் பொது சன நூலகத்தை மேம்படுத்த நூறு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்தார்.
அன்று சிங்கள அரசால் அழிக்கப்பட்டு போனவை வெறும் கட்டிடங்களல்ல. ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள். அதை எப்படி நிவர்த்தி செய்ய பணம் தந்து புனர் நிர்மாணம் செய்யமுடியும்?
அரசால் ஒதுக்கப்பட்ட மில்லியனால் எரிந்து போன புத்தகங்களை வாங்கலாமா அல்லது உலகின் எந்த மூலையிலிருந்தாவது கொண்டு வரமுடியுமா என்பதும் கேள்விக்குறியே?
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் உரையாற்றுகையில் , யாழ் பொது சன நூலகத்தை மேம்படுத்த நூறு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு வழங்கும் தகவலை தெரிவித்தார்.
முன்னைய சிங்கள இனவாத அரசுகளின் கொடுஞ் செயல்களால் அழிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு, பிராயச்சித்தமாக வழங்கப்படும் நிதி உதவி இது என்றே கருத வேண்டும்.
அல்லது சந்திரிக்கா அரசின் காலத்து ‘செங்கட்டியும் வெண் சுண்ணாம்பும்’ என்ற மற்றதொரு மாயைத் திட்டமா இது என்பதை அநுர அரசின் எதிர்கால நடவடிக்கைகளிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
நூறாயிரம் நூல்களும் நூறு மில்லியனும்:
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் கருஞ்சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா. உலகமே போற்றும் மேதைகளால் கோயிலாக போற்றப்படும் ஓர் நூலகத்தையே 1981 தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்டது.
யாழ். நூலகம், யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாசகர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த நூலகமே முற்றாக சாம்பலில் கருகியது.
தற்போது யாழ். நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் என்றும், ஏனைய பிரதேசங்களில் நூலகங்களை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்.
இப்படி தனித்து திகழ்ந்த யாழ் நூலகமே 20ஆம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளின் கோரத்தை முகங்கொண்டது.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
எத்தனையோ அறிஞர்கள் போற்றும் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது 20ஆம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. அப்போது நூலகத்தில் 97,000 நூல்கள் இருந்தன. அதில் பல அரிய நூல்களும் அடக்கம்.
1981 இல் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு கோரமான நிகழ்வாகும். 1981 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
அப்போது யாழ்ப்பாண நகரில் உள்ள சந்தை வளாகம், வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகியவை முற்றாக எரிக்கப்பட்டன.
மேலும் தென் கிழக்காசியாவிலேயே உள்ள பெரிய நூலகங்களில் யாழ்ப்பாணத்து நூலகமும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்திலிருந்தன.
இந்த நூலக எரிப்பை மேற்கொண்ட அரசின் வன்முறைக் கும்பலில் அன்றைய இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட பல்வேறு சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறது என்றாராம் பெட்ரண்ட் ரஸல். அப்படியான ஒரு புத்தக புழுவான தனிநாயகம் அடிகளார் யாழ் நூலகம் எரிந்ததை கண்டு மீளாத உறக்கத்தில் ஆழ்ந்து போனார் என்பது துயரமான வரலாறாகும்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயத்தை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்த் தேசியப் போராட்டதிற்கும் வலுவான உரத்தை ஊட்டியது.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். அப்படி பல ஆயிரம் புத்தகங்கள் இருந்த ஓர் நூலகமே தீயில் கருகியது.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் நடிகர் சார்லி சாப்லின். ஆம் அவரைப்போல ஆயிரமாயிரம் தமிழர்கள் வாங்கி வழங்கிய நூல்களாலேயே யாழ் நூலகம் செழித்து வளர்ந்தது.
புனரமைக்கும் வேலைகள்:
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் பிரித்தானிய போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இப்படி ஆயிரமாயிரம் தமிழ்க் குழந்தைகளின் பரிசுக் களஞ்சியமாக விளங்கியதே யாழ் நூலகம்.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் 1982இல் யாழ் நூலக வாரம் ஒன்றை யாழ்ப்பாண சமூகம் முன்னெடுத்தது. இதன் மூலம் பொது மக்களிடம் இருந்து ஏராளமான நூல்கள் சேகரிக்கப்பட்டன. கட்டிடத்தைப் புனரமைக்கும் வேலைகளும் ஆரம்பமாயின.
ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான 1983 ஜூலை வன்முறைகள் தென்னிலங்கையில் ஆரம்பித்தன் பின்னர், 1984இல் நூலகக் கட்டிடம் புனரமைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.
ஈழப்போர் தொடர்ந்து நடந்ததினாலும், யாழ் நூலக கட்டிடம் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் சேதமடைய ஆரம்பித்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்தமையால் யாழ் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது.
1998ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்காவின் அரசு நூலகத்தை மீளக் கட்டியெழுப்ப மீண்டும் முடிவெடுத்தது. வெளிநாட்டு அரசு உதவி கோரப்பட்டு, 1 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு 25,000 நூல்கள் வரை சேகரிக்கப்பட்டன.
இதன் பின்னர் 2004ஆம் ஆண்டில் நூலகம் பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் பகத்சிங்.
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் என்றார் அமெரிக்காவின் புகழ்பெற்ற தலைவர் ஆபிரகாம் லிங்கன்.
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி என்றார் ஜூலியஸ் சீசர்.
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்று சொன்னார் டெஸ்கார்டஸ்.
சில புத்தகங்களை சுவைப்போம், சிலவற்றை அப்படியே விழுங்குவோம், சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம், என்றார் பிரான்சிஸ் பேக்கன்.
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை என உணர்ந்து கொண்டார் ஆஸ்கார் வைல்ட்.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு தான் அவசியம் என்றார் சிக்மண்ட் ப்ராய்ட்.
ஆம், இவ்வளவு அறிவியல் மேதைகளும் நூல்களையும், நூலகங்களையும் போற்றிப் புகழும் போது எதற்காக சிங்கள அரசு யாழ் நூலகத்தை எரித்தது ?
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே உள்ளன என்பதை வலியுறுத்திக் கூறினார் மேமேதை ரஷ்யாவின் லெனின். உலகமே போற்றும் புரட்சியாளர்களால் ஆராதிக்கப்பட்ட ஆலயங்களான நூலகங்களை எரிக்க வேண்டிய அவசியம் சிங்கள அரசுக்கு ஏன் ஏற்பட்டது ?
ஆம், தற்போது அநுரவின் ஆளும் அரசு நூலகத்தை புனரமைக்கும் திட்டமானது, தமிழ் மக்கள் மீதான கரிசனையின் பாலாகவா அல்லது தமிழர் தாயகத்தில் அதனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவா என்பதை எதிர் வரும் காலங்களில் நாம் காணலாம்.
ஐங்கரன் Thinakural