இலங்கை தமிழரசுக் கட்சிக்குள், உள்ளக முரண்பாடுகளும், தலைமை பதவியை கைப்பற்றுவதற்கான நிழல் போரும் தீவிரம் அடைந்திருக்கிறது.
கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா இருந்தபோதே, அந்த நிழல் போர் உருவாகி விட்டது.
அவருக்குப் பின்னர் யார் தலைவர் என்பதே அந்த நிழல் போருக்கு காரணம்.
சிறிதரன்- சுமந்திரன் என இரண்டு தரப்பினருக்கு இடையில், தலைமை பதவியை கைப்பற்றுவதற்கு தொடங்கிய போட்டி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2020 பொதுத்தேர்தலின் போதே, சுமந்திரனை வெற்றிபெற வைத்தால், சிறிதரனுக்கு கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக்கொடுக்க உதவுவதாக, எழுதப்படாத ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அந்த இணக்கப்பாடு சரியாக பின்பற்றப்பட்டிருந்தால், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.
கட்சியின் நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறிதரன் இன்றுவரை அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.
நிர்வாகத் தெரிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது தான், இந்த நிலைக்குக் காரணம்.
வழக்குகளை தாக்கல் செய்ததன் பின்னணியில் சுமந்திரன் தரப்பே இருந்தது என சிறிதரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
இந்த வழக்கிற்கு நிரந்தரமான தீர்வு உடனடியாக எட்டப்படுவதை, ஒரு தரப்பு விரும்பவில்லை என்றே தெரிகிறது.
ஏனென்றால் காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் கட்சிக்குள் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என அந்த தரப்பு எதிர்பார்க்கிறது.
கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளரான சுமந்திரன் ஆகியோர் கட்சியின் நிர்வாகத்தை தங்களின் கையில் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக சுமந்திரன் பாராளுமன்றத்துக்குள் நுழைவது பற்றிய பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியிருக்கிறது.
அண்மையில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, சக்தியலிங்கம் மருத்துவ காரணங்களை காட்டி பதவி விலகிய போது, அடுத்த கட்டமாக சுமந்திரன் அவரிடம் இருந்து தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்றுக் கொள்வார் என ஊகங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, மருத்துவ காரணங்களை காட்டி விலகிக் கொண்ட, சத்தியலிங்கம் சபாநாயகருக்கு அரசியலமைப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவில் எந்த ஆட்சேபனையுமின்றி இணைந்திருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தான், தேசிய பட்டியல் ஊடாக ஒருபோதும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கமாட்டேன் என்பதை, அண்மையில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் சுமந்திரன்.
எனினும், பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சிறிதரன் போட்டியிடுவாரேயானால், பாராளுமன்றத்திற்குள் தான் பிரவேசிக்க வழி ஏற்படும் என சுமந்திரன் கூறியிருந்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் சிறிதரனுக்கு அடுத்து அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் என்ற வகையில், அவருக்கு அந்த நியமனம் இயல்பாக கிடைக்க கூடிய ஒன்று.
ஆனால் சிறிதரன் அதற்கு விட்டுக் கொடுத்துக் கொடுக்க வேண்டும்.
மாகாண சபைகளுக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
அது சில சட்ட சிக்கல்களை தாண்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.
எனவே உடனடியாக இந்த வழிமுறையின் மூலம், சுமந்திரன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை சிறிதரன் வெளியிட்டிருக்கிறார்.
சிறிதரனின் இந்த அறிவிப்பு, சுமந்திரன் தரப்பிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.
முன்னதாக, வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் சிறிதரனிடம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அது பற்றி சில சந்தர்ப்பங்களில் அவர் பகிரங்கமாக கருத்து கூறியும் இருந்தார்.
ஆனால், இப்போதைய சூழலில், அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடக் கூடிய நிலையில் இல்லை.
அவ்வாறு போட்டியிடுவது, தமிழரசு கட்சிக்குள் தனது இருப்பிற்கு சவாலாக மாறும் என, அவர் கருதுவதாக தெரிகிறது.
சுமந்திரன் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைவது தமிழரசு கட்சிக்குள், அவரது நிலையை இன்னும் வலுப்படுத்தும் என சிறிதரன் கணக்கு போடுவதாகத் தெரிகிறது. அந்தக் கணக்கு சரியானதும் கூட.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சுமந்திரன் பல இராஜதந்திர சந்திப்புகளில், பங்கேற்க முடியாமல் போனது.
அதன் தொடர்ச்சியாகவே அவர், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு அதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருந்தார்.
இவ்வாறான நிலையில், பாராளுமன்றத்திற்குள் சுமந்திரனை நுழைய அனுமதித்தால், கட்சியின் பாராளுமன்ற குழுவையும் அவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்.
அதைவிட வெளியக தொடர்புகள் முழுவதையும் அவரே கையாளுவார்.
வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது, இவ்வாறு தான்.
விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சுயாதீனமான முறையில் விடயங்களை கையாள முற்பட்டார்.
வெளியக தொடர்புகளை தன்னிச்சையாக பேணுவதற்கு முயன்றார். ஆனால் சம்பந்தனோ, சுமந்திரனோ அதனை விரும்பவில்லை.
அதனை தடுக்கும் வகையில் செயற்பட்டனர். பல இராஜதந்திர சந்திப்புக்களின் போது, அவரை விலக்கி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே வந்து, தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.
சி.வி.விக்னேஸ்வரனை, இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் கையாண்ட முறை தொடர்பாக, பலமான விமர்சனங்கள் இருக்கின்றன.
அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனின் அணுகுமுறைகள் தொடர்பான விமர்சனங்களும்,பெருமளவில் இருப்பதை மறுக்க முடியாது.
இந்த அனுபவத்தின்படி, வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டு, சுமந்திரனின் கை ஓங்குவதற்கு சிறிதரன் அனுமதிக்க தயாராக இல்லை.
அதனால் தான், அவர், வடக்கு மாகாண சபை முதல்வர் பதவிக்கு போட்டியிடவில்லை எனக் கூறியிருக்கிறார்.
சிலவேளைகளில் அந்தப் பதவிக்கு வேறொருவரை நிறுத்துகின்ற திட்டம் சிறிதரனுக்கு இருக்கவும் கூடும்.
அதற்கான வாய்ப்புகளை முற்று முழுதாக நிராகரிக்கவும் முடியாது.
இந்த அறிவிப்பின் மூலம், சுமந்திரன் தரப்புக்கு ஒரு ‘செக்’ வைத்திருக்கின்றார் சிறிதரன்.
கட்சியின் தலைமை பிரச்சினை தீர்க்கப்படாமல் தான், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுகின்ற நிலையில் இல்லை என, அவர் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய விடயம்.
இது கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கும், வழக்குகளில் இருந்து, வெளியே வருவதற்கான ஒரு உத்தியாகவும் தென்படுகிறது.
கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டால், அதிலிருந்து வெளியேறக் கூடிய நிலை ஏற்பட்டால், சிலவேளை சிறிதரன் தனது முடிவை மாற்றக்கூடும்.
அப்படியானால், கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என அவர் எதிர்பார்க்கலாம்.
இதனை அவர் ஒரு பேரமாகக் கூட முன்னெடுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.
ஆனால், அவ்வாறான ஒரு பேரத்திற்கு சுமந்திரன் தரப்பு இணங்குமா என்பது உடனடியாக தெரியவில்லை.
சிறிதரனும் சரி, சுமந்திரனும் சரி கட்சிக்குள் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கும், ஒருவரை ஒருவர் காலை வாரி விழுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை வெளியே இருந்து பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படியான சூழலில் தமிழரசு கட்சி பிளவுகளில் இருந்து விடுபட்டு, உள்ளூராட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடிய நிலை ஏற்படுமா?
-கபில்