யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நிறைவடைந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது சென் ஜோன்ஸ் அணி.

இந்த வெற்றியுடன் 118 வடக்கின் சமர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

இதற்கு அமைய வடக்கின் சமரில் 118 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40 — 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் வடக்கின் சமரில் கடந்த 5 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக முடிவு கிட்டியுள்ளதுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

சென் ஜோன்ஸ் அணியின் வெற்றியில் அணித் தலைவர் ஜெயச்சந்திரன் அஷ்நாத்தின் சகலதுறை ஆட்டம், ரேமன் அனுஷாந்த் பெற்ற அரைச் சதம் என்பன பிரதான பங்காற்றின.

இந்த வருடப் போட்டியில் 93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

உதயணன் அபிஜோய்ஷாந்த் 33 ஓட்டங்களையும் ஜெயச்சந்திரன் அஷ்நாத் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாக மூன்றாம் நாளான நேற்றுக் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மேலதிகமாக 7 ஓட்டங்களைப் பெற்று கடைசி 2 விக்கெட்களை இழந்தது.

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரேமன் அனுஷாந்த் (சென் ஜோன்ஸ்)

சிறந்த பந்துவீச்சாளர்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: அன்டன் நிரோஷன் அபிஷேக் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த சகலதுறை வீரர்: ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென். ஜொன்ஸ்)

ஆட்டநாயகன்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்)

ஸ்கோர் விபரம்

யாழ். மத்திய அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 131 (அன்டன் நிரேஷான் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24, மதீஸ்வரன் கார்த்திகன் 15,ஜெயச்சந்திரன் அஷ்நாத் 38 5 விக், முர்ஃபின் ரெண்டியோ 25 – 2 விக்., குகதாஸ் மாதுளன் 27 – 2 விக்., நாகேஷ்வரன் கிரிஷான் 6 – 1 விக்.)

சென். ஜோன்ஸ் அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ரேமன் அனுஷாந்த் 86, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29, கிருபாகரன் சஞ்சுதுன் 22, முர்ஃபின் ரெண்டியோ 20, ஜோன் ஆர்னல்ட் 11, ரஞ்சித்குமார் நியூட்டன் 62 – 5 விக்., முரளி திசோன் 47 – 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 15 – 1 விக்.)

யாழ். மத்திய அணி: 2ஆவது இன் – சகலரும் ஆட்டம் இழந்து 142 (சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28, கணேசலிங்கம் மதுசுதன் 17, முரளி திசோன் 16, விக்ேனஸ்வரன் பாருதி 13 ஆ.இ., ஜெயச்சந்திரன் அஷ்நாத் 54 – 3 விக்., குகதாஸ் மாதுளன் 17 – 2 விக்., உதயணன் அபிஜோய்ஷாந்த் 5 – 1 விக்,, முர்ஃபின் ரெண்டியோ 34 – 1 விக்.)

சென் ஜோன்ஸ் அணி: (வெற்றி இலக்கு 93 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 93 – 5 விக்;. (உதயணன் அபிஜோய்ஷாந்த் 33, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29 ஆ.இ., முர்ஃபின் ரெண்டியோ 11, ஜோன் நெதேனியா 11, முரளி திசோன் 29 – 2 விக்., ரஞ்சித்குமார் நியூட்டன் 37 – 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 11 – 1 விக்.)

Share.
Leave A Reply