வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி(Kocani) என்ற இடத்தில் உள்ள பல்ஸ் கிளப்பில் Pulse club ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகள் கட்டடம் தீப்பிடித்து எரிவதையும், இரவு வானத்தில் புகை பரவுவதையும் காட்டுகின்றன.
இந்த தீ விபத்தில் 50 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர் இசைக்குழுவான ஏ.டி.என் (ADN) நடத்திய நிகழ்ச்சியின் போது அங்குள்ள நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நேரிட்டு சில மணிநேரம் கடந்த பின்னரும் கூட அங்கே தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சி நடந்த மேடையில் வாண வேடிக்கை சாதனங்களை பயன்படுத்தியதால் தீப்பற்றியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், மேடையில் இருந்து வெளிப்பட்ட பொறியால் கூரையில் தீப்பற்றி வேகமாக பரவும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு