மியன்மாரை பூகம்பம் உலுக்கிய 60 மணித்தியாலங்களிற்கு பின்னர் திங்கட்கிழi இடிபாடுகளிற்குள் இருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்திருக்க கூடியவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களிற்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.
இயந்திரங்கள் அற்ற தன்னார்வ தொண்டர்களான மீட்பு பணியாளர்கள் பூகம்பம் தாக்கிய பின்னர் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இந்த பூகம்பத்தினால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 2000 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
உயிரிழப்புகளின் உண்மையான அளவு இதுவரை தெரியவரவில்லை என்ற அச்சமும் நிலவுகின்றது.
திங்கட்கிழமை காலையில் ஐந்து மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்டலாயின் கிரேட்வோல் ஹோட்டலின் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் ஒருவரை மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டு வந்த வேளை மகிழ்ச்சியான நிலை காணப்பட்டது என மியன்மாருக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணியாளர்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்க்கது.
உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டவேளை அங்கு காணப்பட்டவர்கள் கரகோசங்களை எழுப்பியதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மியன்மாரில் பூகம்பம்காரணமாக தரைமட்டமாகியுள்ள அலுவலகங்கள் பாடசாலைகள் ஹோட்டல்கள் மதவழிபாட்டுதலங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றின் இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை மண்டலாயின் தொடர்மாடியொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர், அவரை மீட்பதற்காக அவரது காலை துண்டித்தனர் ஆனால் பின்னர் அவர் உயிரிழந்தார்.