மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரம்மியான்மரில் ஏராளமான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டு கட்டுகள் போல சரிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்களாக காட்சி அளிக்கிறது.
இந்த கட்டிட குவியல்களில் இருந்த உயிரற்ற சடலங்களை மீட்பு படையினர் மீட்டு வருவது அனைவரையும் கலங்கடித்து உள்ளது.கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 3 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தால் உடைந்து போன கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் தங்களது கைகளால் கட்டிட குவியல்களை அகற்றி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தொழுகியின்போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர் என்று வசந்த புரட்சி மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கு தான் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் நிர்மபி சவக்கிடங்காக காட்சி அளித்து வருகிறது.
பலியானவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர். பலரை காணவில்லை. அவர்களை தேடி உறவினர்கள் அங்கும், இங்கும் சுற்றி அலைவது பார்க்க பரிதாபமாக உள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க போதுமான அதிநவீன கருவிகள், பணியாளர்கள் இல்லாமல் அரசு தடுமாறுகிறது. நகரத்தில் மட்டுமே தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மண்டலே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 நாட்களுக்கு மேலாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் துண்டிக்கப்பட்ட காலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். இது மீட்பு குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
குடிநீர் – மின்சார வசதி இல்லை
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுமக்கள் குடிநீர்- மின்சார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள், ரோடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அவை இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
உதவிக் கரம் நீட்டிய நாடுகள்
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.அவசர கால குழுக்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதலாவதாக இந்தியா உதவ முன்வந்தது. மியான்மருக்கு ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் விமானங்களில் உடனடியாக நிவாரண பொருட்கள், பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மியான்மருக்கு இது வரை நிவாரண பொருட்களுடன் கூடிய 5 விமானங்கள் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியான்மர் நிலநடுக்க சேதங்களுக்காக சீனா 14 மில்லியன் டாலர்கள் நிவாரணம் அறிவித்துள்ளது. 126 மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஆறு நாய்களுடன் மருத்துவ கருவிகள், ட்ரோன்கள் மற்றும் பூகம்பக் கண்டுபிடிப்பான்களையும் அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் சர்வதேச நிவாரண அமைப்பான UNAIDS கடந்த ஜனவரியில் பதவியேற்றதும் நிறுத்தினார். இதனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் மியான்மர் நிலநடுக்கத்தின் பாதித்தவர்களுக்கான பெரிய அளவிலான உதவிகள் கிடைப்பது தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.