அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிற்றி பாது­காப்பு மறை­வி­டத்தைக் காட்டிக் கொடுத்தார் என நீதி­மன்றத்தில் குற்­றச்­சாட்­டப்­பட்ட, முன்னாள் பொலிஸ் அத்­தி­யட்­சகர் குல­சிறி உடு­கம்­பொல விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால், தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு, சுமார் 20 வரு­டங்­க­ளாக நீடித்த விசா­ர­ணை­க­ளுக்குப் பின்னர், உடு­கம்­பொ­லவின் விடு­த­லை­யுடன் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கும் இடையே, பேச்­சுக்கள் தொடங்­கி­யி­ருந்த ஆரம்பக் கட்­டத்தில், அத்­து­ரு­கி­ரிய மில்­லே­னியம் சிற்றி வீட்டுத் திட்­டத்தில் உள்ள அந்த மறை­விடம், 2002 ஆம் ஆண்டு ஜன­வரி 2-ஆம் திகதி முற்­று­கை­யி­டப்­பட்­டது.

கண்டி மாவட்ட விசேட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பொலிஸ் அத்­தி­யட்­சகர் குல­சிறி உடு­கம்­பொல, தலை­மை­யி­லான குழு­வி­னரே அந்த சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­டனர்.

அந்த மறை­வி­டத்தில் கிளை­மோர்கள், லோ எனப்­படும் டாங்கி எதிர்ப்பு ஆயு­தங்கள், துப்­பாக்­கிகள், ரவைகள், கைக்­குண்­டுகள், மற்றும் தெர்­மோ­பெரிக் ஆயு­தங்­க­ளுடன், விடு­தலைப் புலி­களின் 66 சீரு­டை­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

இலங்­கையில் தெர்­மோ­பெரிக் எனப்­படும் மிக­மிக ஆபத்­தான ஆயுதம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது அதுவே முதல்­முறை. இந்த வகை ஆயு­தங்­களை பதுங்­கு­கு­ழிகள் மற்றும் வாக­னங்கள் மீது செலுத்­தினால், அதி­சக்­தி­வாய்ந்த வெப்­பத்­துடன் வெடிப்பை ஏற்­ப­டுத்தும். அதில் இருந்­த­வர்கள் கருகிப் போகும் அள­விற்கு வெப்பம் உமி­ழப்­படும்.

அந்­த­ளவு ஆபத்­தான ஆயு­தங்­க­ளுடன், அங்­கி­ருந்த இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து உறுப்­பி­னர்­களும், விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பினர் ஒரு­வரும், துணை ஆயு­தக்­கு­ழுவைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக – ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் கெப்டன் நிலாம் எனப்­படும் சாகுல் ஹமீட் நிலாம் என்­பவர் முக்­கி­ய­மா­னவர்.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியைக் கைப்­பற்­றிய, சில வாரங்­க­ளுக்குள் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

சுற்­றி­வ­ளைப்பு இடம்­பெற்ற உட­னேயே, உள்ளூர் ஊட­கங்­களை அழைத்த உடு­கம்­பொல, அங்கு கைப்­பற்­றிய ஆயு­தங்­க­ளையும் பொருட்­க­ளையும் காண்­பித்தார்.

அவை வெளிச்­சத்­துக்கு வந்த பின்னர் தான், இலங்கை இரா­ணு­வத்தின் குறிப்­பிட்ட சில அதி­கா­ரி­க­ளுக்கும் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கும் மட்­டுமே தெரிந்­தி­ருந்த, அந்த இர­க­சியப் படைப்­பி­ரிவு பற்­றிய தக­வல்கள் வெளி­யு­ல­கத்­துக்கு அம்­ப­ல­மா­னது.
குல­சிறி உடு­கம்­பொல, தெரிந்தோ தெரி­யா­மலோ, அந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்தார்.

விடு­தலைப் புலி­களின் சீரு­டைகள், பெரும் எண்­ணிக்­கை­யான அதி­ந­வீன ஆயு­தங்கள், வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­டதும் உணர்ச்சி வசப்­பட்டு உட­ன­டி­யாக அதை ஊட­கங்­க­ளிடம் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

2001 ஆம் ஆண்டு கட்­டு­நா­யக்க விமா­னப்­படைத் தளம் மீது விடு­தலைப் புலிகள் பெரும் தாக்­கு­தலை நடத்தி பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அது­போல தெற்கில் பல தாக்­குதல் சம்­ப­வங்கள் விடு­தலைப் புலி­களால் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

எனவே, இது விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டைய ஒரு மறை­வி­ட­மாக இருக்­கலாம் என்று உடு­கம்­பொல நினைத்­தி­ருப்­ப­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ளன.

மிலே­னியம் சிற்றி மறை­வி­டத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள், தாங்கள் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவை சேர்ந்­த­வர்கள் என்றும், இர­க­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அணி­யினர் என்றும், தெளி­வு­ப­டுத்­திய போதும்- உடு­கம்­பொல விட­வில்லை. பல தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்த பின்னர் தான், ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தெரி­ய­வந்­தன.

அதற்­கி­டையில் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் லயனல் பல­கல்ல, இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரான பிரி­கே­டியர் கபில ஹெந்­த­வி­தா­ரண ஆகியோர், பொலிஸ் மா அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு, நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த முயன்ற போதும், பெரும்­பா­லான தக­வல்கள் வெளியே கசிந்து விட்­டன.

பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ராக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ஜனா­தி­ப­தி­யா­கவும், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கவும் இருந்த அந்தக் கால­கட்­டத்தில், இரண்டு தரப்­பு­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டு­க­ளுக்கு குறை­வில்­லாமல் இருந்­தது.

அந்த சூழலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், முக்­கிய அமைச்­சர்­க­ளையும் கொலை செய்­வ­தற்­கா­கவே இந்த மறை­விடம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்ற குற்­றச்­சாட்டு ஐ.தே.க.வி­னரால் அப்போது முன்­வைக்­கப்­பட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள், சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் இரா­ணுவப் புல­னாய்வுத் துறைக்கு எதி­ராக இந்தக் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தனர்.

ஆனால், பின்னர் அந்த குற்­றச்­சாட்டில் உண்மை இல்லை என்­பது நிரூ­பணம் ஆனது.
அர­சாங்­கத்­துக்­குள்­ளேயும் சரி, பொலிஸ் மற்றும் இரா­ணுவ தரப்­புக்­குள்­ளேயும் சரி, இந்த மறை­விடம் தொடர்­பான விட­யத்தில் கூட்டுச் செயற்­பாடு இருக்­காத கார­ணத்­தினால், அதன் இர­க­சி­யத்­தன்மை முற்­றி­லு­மாக வெளியே கசிந்­தது.

இரா­ணுவப் புல­னாய்­வுத்­துறை விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்­க­ளுக்குள் ஊடு­ருவி தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக, உரு­வாக்­கி­யி­ருந்த ஆழ ஊடு­ருவும் படை­ய­ணியே அது­வாகும். அதன் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர் தான் கெப்டன் நிலாம்.

விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்கள், புளொட் உள்­ளிட்ட தமிழ் இயக்­கங்­களை சேர்ந்­த­வர்கள், பொது­மக்­களைக் கொண்டு, புலி­களின் கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்­க­ளுக்குள் ஊடு­ருவி சென்று தக­வல்­களை திரட்­டு­வ­தற்கும், தாக்­குதல் நடத்­து­வ­தற்கும் கெப்டன் நிலாம் தயார்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

போர்­நி­றுத்த உடன்­பாடு நடை­மு­றைக்கு வரு­வ­தற்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­தி­களில் கிளைமோர் தாக்­கு­தல்கள் சில இடம்­பெற்­றி­ருந்­தன.

அவ்­வா­றான தாக்­குதல் ஒன்றில் விடு­தலைப் புலி­களின் இரா­ணுவ புல­னாய்வு பிரிவை சேர்ந்த லெப். கேணல் நிசாம் கொல்­லப்­பட்­டி­ருந்தார். அதே­போல கேணல் கரு­ணாவும் ஒரு தாக்­கு­தலில் உயிர் தப்­பி­யி­ருந்தார்.

அதே­வேளை, புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த வன்னிப் பிர­தே­சத்­திலும் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பில், நடத்­தப்­பட்ட ஒரு கிளைமோர் தாக்­கு­தலில், விடு­தலைப் புலி­களின் விமா­னப்­படைத் தள­ப­தியும், மூத்த உறுப்­பி­ன­ரு­மான கேணல் சங்கர் உயி­ரி­ழந்தார்.

அதே­போல, கடற்­பு­லி­களின் தள­பதி லெப்.கேணல் கங்­கை­அ­மரன் முழங்­கா­விலில் நடத்­தப்­பட்ட ஒரு தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்தார். அது தவிர, விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறைப் பொறுப்­பா­ள­ராக இருந்த பிரி­கே­டியர் தமிழ்ச்­செல்வன், மூத்த கட்­டளைத் தள­ப­தி­க­ளான கேணல் ஜெயம், கேணல் பால்ராஜ் போன்­ற­வர்­களும் தெற்கு முன்­ன­ரங்க போர்­மு­னை­க­ளுக்கு நெருக்­க­மாக, இடம்­பெற்ற தாக்­குதல் முயற்­சி­களில் இருந்து உயிர் தப்­பி­யி­ருந்­தனர்.

இந்த தாக்­கு­தல்கள் நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வகையில், நடத்­தப்­பட்­டன. தாக்­கு­தலில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தினர் மிக வேக­மாக அந்த இடத்தில் இருந்து பின்­வாங்கி செல்லக் கூடி­ய­ள­வுக்குப் பயிற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துடன் விடு­தலைப் புலிகள், போர்­நி­றுத்தம் செய்து கொள்­ள­வி­ருந்த கால­கட்­டத்தில், வன்­னியின் தென்­ப­கு­தி­யிலும் கிழக்­கிலும் இரா­ணு­வத்தின் ஆழ ஊடு­ருவும் படை­ய­ணியின் தாக்­கு­தல்கள், புலி­க­ளுக்கு குடைச்­சலை கொடுக்க தொடங்­கி­யி­ருந்­தன.

இரா­ணு­வத்தின் சிறப்பு படைப்­பி­ரிவு, கொமாண்டோ படைப்­பி­ரிவு போன்­ற­வற்றில் இருந்து தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களை கொண்டு, இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வினால் இந்த தாக்­கு­தல்கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டன.

அதற்­காக உரு­வாக்­கப்­பட்ட மறை­விடம் தான் மிலே­னியம் சிற்­றியில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது என இரா­ணு­வத்­த­ரப்பு கூறி­யது. அதனை முற்­று­கை­யிட்டு, இர­க­சி­ய­மான ஒரு நட­வ­டிக்­கையை குல­சிறி உடு­கம்­பொல காட்டிக் கொடுத்து விட்டார் என்­பதே, அவர் மீதான குற்­றச்­சாட்டு.

அதனை அடிப்­ப­டை­யாக வைத்து அவ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் இருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.அவர் மீதான குற்­றச்­சாட்டை, வழக்­குத்­தொ­டுநர் தரப்பு சரி­வர நிரூ­பிக்­க­வில்லை என்ற நீதி­பதி தனது தீர்ப்பில் கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, அந்த மறை­விடம் திட்­ட­மிட்டே காட்டிக் கொடுக்­கப்­பட்­ட­தாக அர­சியல் ரீதி­யாக குற்­றம்­சாட்­டப்­பட்­ட­துடன், அது ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஒரு பிர­சா­ர­மா­கவும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

விடு­தலைப் புலி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்த தொடங்­கி­யி­ருந்த அந்த சூழலில், இந்த விவ­காரம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை இந்த விவ­கா­ரத்தில், சில சந்­தே­கங்­க­ளுக்கு அர­சாங்­கமோ இரா­ணுவ புல­னாய்வுத் துறையோ தெளி­வான விளக்­கங்­களை கொடுக்­க­வில்லை. அதா­வது, விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்­கான மறை­வி­டத்தை, இர­க­சி­ய­மாக ஏன் அத்­து­ரு­கி­ரி­யவில் உரு­வாக்க வேண்டும் என்ற கேள்வி இருந்­தது.

அதற்­கான பதில் கொடுக்­கப்­ப­டவே இல்லை.முன்­ன­தாக இந்த செயற்­பாடு கொஹு­வெல இரா­ணுவ முகாமில் இருந்து மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும், சிறிது காலத்­துக்கு முன்­னரே, அது அத்­து­ரு­கி­ரி­ய­வுக்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் சொல்­லப்­பட்­டது.

அப்­ப­டி­யானால், அது மாற்­றப்­பட்­ட­தற்­கான காரணம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.கிழக்கு மாகா­ணத்­திலும் வன்­னி­யிலும் தான் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்கள் இருந்­தன.

அந்த கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­க­ளுக்கு வெளியே, அவற்­றுக்கு அரு­கி­லேயே, இரா­ணுவப் புல­னாய்­வுத்­து­றை­யினால் இவ்­வா­றான மறை­வி­டத்தை இயங்­கி­யி­ருக்க முடியும். ஆயு­தங்­களை மறைத்து வைத்­தி­ருக்க முடியும்.

வன்­னி­யிலும் கிழக்­கிலும் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு, அத்­து­ரு­கி­ரி­யவில் இருந்து – நீண்ட தூரத்­துக்கு இந்த ஆயு­தங்­களை கொண்டு செல்ல வேண்­டிய தேவை இருந்­தி­ருக்­காது.
அந்­த­ள­வுக்கு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்­டிய தேவையும் இல்லை.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மட்­டக்­க­ளப்­பிலும் வவு­னி­யா­விலும் அப்­போது முக்­கி­ய­மான தளங்கள் இருந்­தன.

அவற்றை பயன்­ப­டுத்­தாமல், ஏன் அத்­து­ரு­கி­ரி­யவில் பெரு­ம­ளவு ஆயு­தங்­களை பதுக்கி வைத்து ஒரு மறை­வி­டத்தை இயக்கி இருக்க வேண்டும் என்ற கேள்­விக்கு சரி­யான பதில் அர­சாங்­கத்­தி­னாலோ, இரா­ணுவ தரப்­பி­னாலோ வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இதனால் தான், அர­சியல் இலக்­கு­களை தாக்­கு­வ­தற்­காக, இர­க­சி­ய­மாக உரு­வாக்­கப்­பட்ட மறை­வி­ட­மாக இருக்­கலாம் என்ற சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டன.

அந்த கால­கட்­டத்தில் தெற்கில் நிகழ்ந்த எல்லா தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கும், விடு­தலைப் புலிகள் மீதே அர­சாங்கம் பழி போட்­டது. அதனை காரணம் காட்டி, வெளி­நா­டு­களில் புலி­களை தடை செய்­வ­தற்­கான பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஆனால், அந்தத் தாக்­கு­தல்கள் எல்லாம் விடு­தலைப் புலி­களால் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வையா என்ற கேள்­வியும் – சந்­தே­கங்­களும் இன்று வரை நீடிக்­கின்­றன.
இத்­த­கைய பின்­ன­ணியில் அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிற்றி மறை­விடம் தொடர்­பான மர்மம், இன்­னமும் வில­க­வில்லை என்றே கூறலாம்.

இந்த இர­க­சிய மறை­விடம் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட போது அங்கு செயற்­பட்­ட­வர்கள் தொடர்­பான இர­க­சி­யங்­களும் வெளியே கசிந்­தன.

அதன் அடிப்­ப­டையில் போர்­நி­றுத்த காலப் பகு­தியில், இரா­ணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் உறுப்பினர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், உதவியாக செயற்பட்ட வர்களையும் விடுதலைப் புலிகள் வேட்டையாடியிருந்தனர்.

கொழும்பிலும் கிழக்கிலும் நாட்டின் புற பகுதிகளிலும் அவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுத்துறையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. அந்த சம்பவங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதும்- நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக பழி போடப்பட்டது. ஆனால், அவை எல்லாமே உண்மையா அல்லது பகுதி அளவில் உண்மையா என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே உள்ளது.

ஏனென்றால் அது ஒரு பக்கம் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையும், இன்னொரு பக்கம் புலனாய்வுப் போரும் நடந்து கொண்டிருந்த காலம். புலனாய்வுப் போர் என்பது, உண்மையான எதிரிகளை மட்டும் வேட்டையாடுவது அல்ல. எதிரிகளையும் அவர்களின் நண்பர்களையும் மோத விடுவதும் அதன் ஒரு பகுதி தான்.

சுமார் 23 ஆண்டுகளுக்கு முந்திய அந்த புலனாய்வுப் போர் யுகம், ஏராளமான மர்மங்கள் நிறைந்த ஒன்று. அதன் முடிச்சுக்களை முழுமையாக அவிழ்ப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் அதனுடன் தொடர்புபட்டவர்கள் பலர் இப்போது, உயிரோடு இல்லை.

– கார்வண்ணன்

Share.
Leave A Reply