பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள் ஆவர்.

முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர்.

“நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நமது எதிர்வினையை மாற்றியமைக்க வேண்டிய தேவையை நிரூபிக்கும் கடும் சம்பவங்கள் இவை” என பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு உள்நாட்டு அலுவல்கள் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முதல் ஐந்து பேரில், நான்கு பேர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபர் பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டத்தின் (பேஸ்) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குத் தயாரானதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு லண்டன், ஸ்டாக்போர்ட், ரோச்டேல் மற்றும் மான்செஸ்டரில் உள்ள ஸ்விண்டன் ஆகிய இடங்களில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது தொடர்பானது என பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் மற்றும் வில்ட்ஷயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மெட் பயங்கரவாத தடுப்பு கட்டளை பிரிவு இந்த விசாரணையை வழிநடத்துகிறது.

Share.
Leave A Reply