உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விளக்கங்களை கூறிவருகின்றன.
ஆளும் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவ்வாறனதொரு சரிவு ஏற்பட வில்லை என்ற அரசாங்கம் விளக்கம் கூறியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளையும் இணைத்த பொதுவான ஒரு எதிரணியை உருவாக்கப்போவதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளமை தேசிய அரசியலில் அனைவரினதும் அவதானத்தை ஈர்த்துள்ளது.
ஐந்து ஆண்டுகளின் பின் யானை சின்னம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாள் காலை, அதாவது புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக, முன்னாள் ஊடக பணிப்பாளர் ஷானுக கருணாரட்ன மற்றும் சர்வதேச தொடர்பு பணிப்பாளர் தினும் கொலம்பகே ஆகியோர் சென்றிருந்தனர்.
சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்ற ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி, சார், நீங்கள் கூறியது அவ்வாறே நடந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினீர்கள். தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தினித் சிந்தக குறிப்பிட்டார்;.
‘ஏற்கனவே கூறியது போன்று ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிப்பெற்றிருக்க முடியும். குறிப்பாக கொழும்பில் மாத்திரமாவது ஒன்றிணைந்து போட்டியிட்டிருக்க வேண்டும். அரசியல் ஞானம் அற்ற செயற்பாடுகளினால் தோல்வி ஏற்பட்டுள்ளது. மிக தெளிவான செய்தியை மக்களும் கூறியுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் யானை சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். இதனை ஒரு சிறந்த ஆரம்பமாக கருத முடியும். சில தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வரவேற்க தக்க அளவில் உள்ளது.
எனவே யானை சின்னத்தில் போட்டியிட்டமை குறித்து திருப்தியடைய முடியும். ஐக்கிய தேசிய கட்சி புதிதாக செயல்பட வேண்டியதுள்ளது. எனவே காலதாமதமின்றி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய வேலைத்திட்டத்தை மக்களுக்கு சமர்பிக்க வேண்டும்.
தேர்தல் பிரசார நடவடிக்கைளில் நான் பங்கேற்க வில்லை. இளம் தலைவர் முன்னின்று செயல்பட வாய்ப்பளித்தேன். இதனை மதிப்பீடாக கூட கருதலாம். ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும் முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளது.
யானை சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிப்பார்கள் என பலரும் கூறினர். ஆனால் சின்னத்திற்கு மாத்திரம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
எனவே புதிய மாற்றங்கள் கட்சியில் இடம்பெற வேண்டும். புதிய தலைவர்கள் கட்சியை பொறுப்பேற்று முன்னோக்கி செல்ல வேண்டும்’ என ரணில் விக்கிரமசிங்க இதன் போது நீண்ட விளக்கத்தை அளித்தார்.
ஐ.தே.க தலைவர்களின் சந்திப்பு
ருவன் விஜேவர்தன
ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அத்துகோரல உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து புதன்கிழமை கலந்துரையாடினர்.
‘உண்மையில் அரசாங்கத்திற்கு இந்த தேர்தலில் மக்கள் சிறந்த செய்தியை வழங்கியுள்ளனர். அரசாங்கம் கூறிய பொய்கள் மக்களுக்கு தெரிந்து விட்டது.
தேர்தல் முடிவுகளின் பின்னர் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எமது ஆதரவு அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே எந்த கட்சிக்கு ஒத்துழைப்பு தேவையோ அதனை வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது’ என ருவன் விஜேவர்தன இதன் போது கூறினார்.
‘மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 45 இலட்சத்து 3930 வாக்குகளை பெற்றுக்கொள்கையில், அரசாங்கத்திற்கு எதிராக 59 இலட்சத்து 6880 பேர் வாக்களித்துள்ளனர்.
அதே போன்று ஜே.வி.பி யில் 3962 பேர் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகுககையில், ஐக்கிய மக்கள் சக்தியில் 1787 பேரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 742 பேரும், ஐக்கிய தேசிய கட்சியில் 381 பேரும், பொதுஜன முன்னணியில் 300 பேரும், சுயாதீன குழுக்கள் மற்றும் ஏனைய கட்சிகளில் 1776 பேருமாக தெரிவாகியுள்ளனர். இதன் மொத்த தொகை 4886 ஆகும். ஆளும் கட்சியை விட 960 பேர் எதிர்க்கட்சிகளில் தெரிவாகியுள்ளனர்.
அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஆளும் கட்சிக்கு 11 இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 23 இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது’ என வஜிர அபேவர்தன நீண்ட விளக்கத்தை அளித்தார்.
‘தேர்தல் முடிவுகளுடன் அரசாங்கம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அநுரகுமார திசாநாயக்க ஆட்சியின் வீழ்ச்சியின் ஆரம்பமாகவே இது உள்ளது. இதன் பின்னர் அரசாங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மக்களுக்கு வழங்கி உறுதிமொழிகளை நிறைவேற்றவதிலும் நெருக்கடிகள் ஏற்படும்’ என அகில விராஜ் காரியவசம் கூறினார்.
‘முன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்ற அரசாங்கத்திற்கு 26.2 வீத ஆதரவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் 73.8 வீதமாக மக்கள் ஆதரவை அதிகரித்துக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் பொய்கள் இனி செல்லுப்படியாகாது என்பது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடுவதாக’ சானல ரத்நாயக்க இதன் போது கூறினார்.
சர்வதேச நாணய நிதிய நெருக்கடி
சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பு சந்திப்புகளின் போது முக்கிய பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
நான்காவது தவணையை இலங்கைக்கு விடுவிப்பதற்கான பணியாளர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், நான்காவது தவணையை விடுவிப்பதற்கு இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை நாணய நிதிய அதிகாரிகள் வலியுறுத்தினர். அதாவது மின்சாரக் கட்டண உயர்வு. மின்சார விநியோகச் செலவை ஈடுகட்ட கூடிய பொறிமுறைக்கு இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இவை இரண்டும் முக்கிய வலியுறுத்தல்களாகும்.
இந்த விடயத்தை அரசாங்கம் சரி செய்யும் வரையில் நான்காவது தவணையை விடுவிக்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மறுபுறம் நிதி உத்தரவாதங்கள் மற்றும் கடன் சீர்திருத்தங்கள் எனபன விரைவில் நிறைவுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக இருக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களில் மறுசீரமைப்புகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளாகும். ஆனால் அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் முரண்படுவதால் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கருத்து முரண்பாடு
சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடுகள் மேலோங்குகையில் இதற்கெல்லாம் பின்னால் யாருக்கும் தெரியாத ஒரு தீவிரமான பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
எமக்கு கிடைத்த தகவலின்படி, சர்வதேச நாணய நிதியத்தால் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்ட ஒரு நிபந்தனையை கடுமையாக மீறியதால் நிலைமை நெருக்கடியாகியுள்ளது.
அதாவது சில மாதங்களுக்கு முன்பு, முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் வரிச் சலுகைகளை வழங்கக் கூடாது என்று சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அத்தகைய வரிச் சலுகைகளை வழங்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று நிபந்தனையிலும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதையெல்லாம் மீறி, உள்ளூர் முதலீட்டாளர் மூலம் வந்த ஒரு வெளிநாட்டு முதலீட்டாளருக்கு, பெரிய அளவிலான வரிச் சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நிலைமை அறிந்தவுடன், சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான நிபந்தனையை முன்வைத்தது. அதாவது குறித்த வெளிநாட்டு முதலீட்டை உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இருப்பினும், நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு செவி சாயக்காது, இனிவரும் காலங்களில் முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்கமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.
ஆனால், இதற்கு நாணய நிதியம் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த சம்பவத்துடன் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான நல்லெண்ணம் ஏதோ ஒரு வகையில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.