இந்தியா, பாகிஸ்தான் இடையில் தீவிரமடைந்துவரும் மோதல் உலகின் பல்வேறு நாடுகளின் இராணுவங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐரோப்பா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஆயுதங்களும் இந்த மோதல்களில் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இச்சம்பவத்தைடுத்து கடந்த 7 ஆம் திகதி அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மீது இந்தியா ‘ஒபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் தெரிவித்தது.
மே 8 ஆம் திகதி இந்தியாவின் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அதற்கு எதிராக இந்தியா பதில் தாக்குதல்களை நடத்தியது.
பாகிஸ்தானின் தாக்குதல்களால் 16 பொதுமக்கள் உயிரிழந்தனர் என இந்தியா தெரிவித்துள்ளது.
அதன்பின் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன
ஆயுதப் பரீட்சைக் களம்
இதேவேளை, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகளின் பரீட்சைக் களமாகவும் இந்திய, பாகிஸ்தான் மோதல்களம் கருதப்படுகிறது. இதனால் இம்மோதல் களம் பல நாடுகளின் இராணுவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல்வேறு நாடுகளும் அதி உயர் தாக்குதல் திறன் கொண்ட நவீன போர் விமானங்களைத் தயாரிப்பதில் பெருமளவு முதலீடுகளைச் செய்கின்றன. வேறு பல நாடுகள் அவற்றின் ஆற்றல்கள் குறித்து தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அவ்விமானங்களை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால், சோதனைகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு அப்பால், உண்மையான போர்க்களத்தில் இவ்விமானங்களை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகும்.
போர்க்களங்களில் இத்தகைய போர் விமானங்களின் திறன்கள், பலவீனங்கள், விமானிகளின் செயற்பாடுகள், அவ்விமானங்களிலிருந்து இயக்கப்படும் வானிலிருந்து வானை நோக்கிய ஏவுகணைகள் போன்றவை தொடர்பான அறிந்துகொண்டு தமது சொந்தப் படைகளை ஆகாய மோதல்களுக்குத் தயார்படுத்துவதில் உண்மையான விமான மோதல்கள் பல நாடுகளுக்கு உதவும்.
இவ்வகையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய மோதலும் இத்தகைய தகவல்களை அறிவதற்கான வாய்ப்பை வழங்கும் எனக் கருதப்படுகிறது.
பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் ரக போர் விமானங்களை இந்தியா கொண்டுள்ளது. அதேவேளை சீனத் தயாரிப்பான ஜே10 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
இந்திய போர் விமானங்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கு சீனத் தயாரிப்பான ஜே10 ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளதாக நம்பப்படுவதாக தன்னை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாரென செய்திகள் வெளியாகின.
போர்த் தளபாடங்களின் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், தந்திரோபாயங்கள், எந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் எவை செயற்படுகின்றன, எவை செயற்படவில்லை என்பன போன்ற தகவல்களை முடிந்தளவு அறிவதற்கு அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளிலுள்ள போர்த்தளபாட நிபுணர்கள் மிகவும் ஆர்வமாகவுள்ளனர் என லண்டனை தளமாகக் கொண்ட மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் இராணுவ வானியல் துறையைச் சேர்ந்த டக்ளஸ் பாரீ கூறியுள்ளார்.
சீனாவின் பி.எல். 15 ரக வானிலிருந்து வான் நோக்கிய ஏவுகணை மற்றும் ஐரோப்பிய தயாரிப்பான, ரேடாரின் வழித்துணையுடன் இயங்கும் Meteor ரக ஏவுகணைகளின் திறன்களை அறிவதற்கான களமாகவும் இந்திய – – –பாகிஸ்தான் மோதல் களம் கருதப்படுகிறது.
“பிஎல் 15 ஒரு பெரும் பிரச்சினை. அது குறித்து அமெரிக்க இராணுவம் மிகுந்த கவனம் செலுத்தும்” என அமெரிக்க பாதுகாப்பு தொழிற்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Chinese Fighter Jets
ரஷ்ய – உக்ரேன் போரிலும், தமது ஆயுதங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தகவல்களை பெற்று வருவதாக வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிபுணர் பிறையன் கலோன் கூறுகிறார்.
இதே போன்று இந்தியாவின் ஐரோப்பிய ஆயுத விநியோகத்தர்களும் செய்யக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அதேவேளை பாகிஸ்தானும் சீனாவும் இதே போன்ற தகவல்களை பரிமாறிக்கொள்ளக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமானத்துடன், சுகோய் சூ -30 மற்றும் மிக் 29 ரக விமானங்களையும் தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சுகோய் சூ -30, மிக் 29 விமானங்கள் ரஷ்ய தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்தியா உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து இந்தியா இது குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. எனினும், வான்கலமொன்றின் எரிபொருள் தாங்கியின் சிதைவுகள் என இந்தியாவின் ஸ்ரீநகருக்கு அருகில் வீழ்ந்து கிடந்தன.
ஆனால் இந்திய விமானப்படையின் விமானத்தை பி.எல்.15ஈ ரக ஏவுகணை பொருத்தப்பட்ட ஜே-10சி ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் கூறியுள்ளார்
இந்நிலையில், ஜே10சி ரக போர் விமானங்களைத் தயாரிக்கும், சீனாவின் ‘ஏவிக் செங்டு எயார்கிராவ்ட்’ நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் கடந்த சில தினங்களில் 40 சதவீதத்தினால் அதிகரித்திருந்தன.
ஆனால், சீனத் தயாரிப்பு விமானங்கள் இம்மோதல்களில் பயன்படுத்தப்படுவது குறித்து, சீன வெளிவிவகா அமைச்சு பேச்சாளரிடம் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, தனக்கு அம்மோதல் நிலைவரம் தொடர்பாக பரீட்சயமில்லை என பதிலளித்திருந்தார்.
1979 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடந்த சீன- வியட்நாம் யுத்தத்தின் பின்னர், கடந்த 4 தசாப்தங்களாக பாரிய யுத்தம் எதிலும் சீனா ஈடுபடவில்லை. ஆனால், ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் தலைமையில் கீழ் அது தனது ஆயுதப்படைகளை நவீன மயப்படுத்தி வருகிறது. நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களுக்காக பெருமளவு வளங்களை பயன்படுத்துகிறது.
கடந்த 5 வருடங்களில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81 சதவீதமானவற்றை சீனாவே விநியோகித்துள்ளதாக சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடர்கள், வான் பாதுகாப்புப் பொறிமுறகைள் ஆகியனவும் மேற்படி விநியோகங்களில் அடங்கும்.
எஸ்-400 எனும் வான் பாதுகாப்பு பொறிமுறை
சீனத் தொழில்நுட்பத்துடன் சீனாவுடன் இணைந்தும் பாகிஸ்தான் ஆயுதங்களை தயாரித்து வருகிறது. மறுபுறும் இந்தியாவும் சுயமாக போர் விமானங்களைத் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 எனும் வான் பாதுகாப்பு பொறிமுறையையும் இந்தியா பயன்படுத்துகிறது.
சீனாவின் பி.எல்.-15 ரக ஏவுகணையின் வீச்செல்லை, தரம் தொடர்பாக அறிந்துகொள்வதில் மேற்குலகம் நீண்டகாலமாக ஆர்வம் செலுத்தி வருகின்றன. ஐரோப்பாவின் Meteor ஏவுகணையைவிட பி.எல். 5 தரம் வாய்ந்ததா என்ற கேள்வியும் உள்ளது.
சீனா முதல் தடவையாக 2011 ஆம் ஆண்டு பி.எல்.15 ஏவுகணையை பரீட்சித்தது. இதில் பல வகைகள் உள்ளன. சீனப் படையினருக்காக தயாரிக்கப்பட்ட பி.எல்.15 ஏவுகணை 200 முதல் 300 கிலோமீற்றர் வீச்செல்லைக் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பி.எல்.15ஈ ரக ஏவுகணை குறைந்த வீச்செல்லையை (அதிகபட்சம் 145 கிலோமீற்றர்) கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chinese PL-15E air-to-air missiles
ரஃபேல் உட்பட இந்தியாவின் போர் விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கு பி.எல்.15 ஏவுகணைகளை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், மே 9 ஆம் திகதி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்பூரில் பி.எல்.-15 என நம்பப்படும் ஏவுகணையொன்று, வெடிக்காத நிலையில் ஏறத்தாழ முழுமையாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, வீடியோக்களும் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதேவேளை அமெரிக்கத் தரப்பில், பி.எல்.15 ஏவுகணைகளுக்குப் போட்டியாக, லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு ஊடாக AIM-260 எனும் அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளது. அமெரிக்க விமானப்படைக்கான அதிநவீன போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை போயிங் நிறுவனத்துக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர். சேதுராமன்-